Friday 7 July 2023

சாதி

 சமீபத்தில் எனது நண்பரின் மகன் வீட்டுக்கு விருந்தினனாக வந்திருந்தான். இங்கே அவன் வயதையொத்த சிலருடன் பழகி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டான். அந்த இளைஞர்கள் ஐந்து பேரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உரையாடலில் நானும் கலந்து கொண்டேன். அவர்களின் சமூகப் புரிதல் குறித்து அறியும் விதமாக அவர்களிடம் சில வினாக்களை எழுப்பி அதற்கு அவர்கள் எண்ணும் விடைகளை அளிக்கச் சொன்னேன். 

முதல் கேள்வியாக அவர்களுக்குத் தெரிந்த சாதிகளின் பெயர்கள் என்ன என்று கேட்டேன். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று சாதிகளின் பெயர்களை மட்டும் கூறினார்கள். அதுவும் ஒருவர் கூறிய பதிலையே இன்னொருவரும் கூறினார். மொத்தமாக நான்கு அல்லது ஐந்து சாதிகளுக்கு மேல் அவர்களுக்கு வேறு சாதிகள் ஏதும் தெரிந்திருக்கவில்லை. 

தமிழ்நாட்டில் ஒரு விஷயம் வியப்பளிக்கக் கூடியது. இங்கே சாதி குறித்த முழுமையான புரிதல் கொண்டவர்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட கிடையாது. ஆனால் சாமானியமாக எல்லா மனங்களும் தீவிரமான சாதிப்பற்று கொண்டிருக்கும். அவர்களுடைய சொந்த சாதியைப் பற்றியாவது அவர்களின் சமூக வரலாற்றையாவது ஓரளவேனும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் தெரியாது. 

அமெரிக்காவில் ஒரு கல்லூரி விடுதியில் ஒரு உளவியல் சோதனை நடத்தப்பட்டது. அந்த விடுதியில் 2000 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து பாதிப் பேரின் காதில் மிக ரகசியமாக ''A'' என்று சொல்லப்பட்டது. இன்னொரு பாதிப் பேரின் காதில் மிக ரகசியமாக ''B'' என்று சொல்லப்பட்டது. அவ்வளவு மட்டுமே. அடுத்த ஒரு வார காலத்தில் அந்த விடுதியின் மாணவர்கள் அனைவரும் மானசீகமாக இரு குழுக்கள் ஆயினர். எட்டாவது நாள் அந்த இரண்டு குழுக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு சென்றனர்.  

சாதிகளைப் பற்றி புரிந்து கொள்ள குறைந்தபட்சம் இந்தியாவின் ஐயாயிரம் ஆண்டு வரலாறு குறித்து ஒரு சுருக்கமான சித்திரத்தையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். மகாபாரதக் காவியத்தில் இந்தியாவின் நிலவியலும் மக்கள் சமூகங்களும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன. இன்று இந்தியாவில் இருக்கும் எல்லா சாதிகளின் மூலமும் ஏதோ ஒரு விதத்தில் மகாபாரதத்தில் இருக்கிறது. 

சாதிகளைப் புரிந்து கொள்ள வரலாற்றுடன் மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்விதம் நிகழ்திருக்கும் என்பதை கற்பனை செய்து அறிந்து கொள்ள வேண்டும். 

உதாரணத்துக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் இன்று இருப்பதைப் போல ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அடிக்கடி சென்றிருப்பார்களா என யோசித்தோம் என்றால் அதற்கு வாய்ப்பு குறைவு என்பதை உணர முடியும். அன்று இன்று இருப்பதைப் போல போக்குவரத்து வசதிகள் கிடையாது. எங்கு சென்றாலும் நடந்து தான் செல்ல வேண்டும். சாமானியமான உடல்பலம் கொண்ட ஒருவரால் ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஊருக்கு நடந்து சென்று எவரையும் சந்தித்து விட்டு ஏதேனும் பணிகள் செய்து விட்டு மீண்டும் பத்து கிலோ மீட்டர் நடந்து வீட்டுக்கு வந்து விட முடியும். அவ்வாறெனில் அந்த சுற்றளவுக்குள் மட்டுமே அவர்களின் போக்குவரத்து இருந்திருக்கும். எனினும் அது மட்டுமே முழுமையானது இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் தென்பகுதியில் வசிப்பவர்கள் வட பகுதியில் உள்ள காசிக்கும் வட பகுதியில் இருப்பவர்கள் தென் பகுதியில் இருக்கும் ராமேஸ்வரத்துக்கும் பாத யாத்திரையாகச் சென்றிருக்கிறார்கள். அதை எவ்விதம் புரிந்து கொள்வது ? ஒரு கிராமத்தில் ஆயிரம் பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் காசி சென்றிருப்பார். இந்தியாவில் ஒரு லட்சம் கிராமம் உள்ளதென்றால் ஒரு லட்சம் பேர் காசி நோக்கியும் ராமேஸ்வரம் நோக்கியும் சென்றிருப்பார்கள். அவ்வாறெனில் பயணப்பாதை அவர்களால் அறியப்பட்டிருக்கிறது . அந்த பாதை நெடுக சத்திரங்கள் இருந்திருக்கும். 

தமிழ்நாட்டு கிராமங்களில் என்ன தொழில் நடந்திருக்கும்? இன்றும் பெருமளவு நடப்பது விவசாயம். அன்றும் விவசாயமே நடந்திருக்கும். அப்போது ஒரு கிராமத்தில் பெருமளவு யார் வசித்திருப்பார்கள் ? விவசாயிகளே வசித்திருப்பார்கள். அவர்களுக்கு என்ன தேவைப் பட்டிருக்கும்? ஆடைகள் தேவை . எல்லா கிராமத்திலும் நெசவாளர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. நூறு கிராமத்துக்கு ஒரு கிராமம் நெசவாளர்கள் நிறைந்ததாக இருந்திருக்கும். அங்கே உற்பத்தியாகும் ஆடைகள் வணிகர்களால் வாங்கப்பட்டு இந்த நூறு கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அவர்கள் கிராமத்தை வந்தடைய ஒரு சாலை தேவை. சாலைகள் அவ்விதம் உருவாகியிருக்கும். கிராமத்துக்கு மேலும் என்ன தேவை ? விவசாய உபகரணங்கள் தேவைப்படும். பத்து கிராமத்துக்கு சில குடும்பங்கள் என கொல்லர்களும் தச்சர்களும் இருந்திருப்பார்கள். இன்றும் கூட சிறிதும் பெரிதுமாக அதே விதத்தில் அவர்கள் இருப்பதைக் காண முடியும்.  வேறு என்ன தேவை இருந்திருக்க முடியும் ? உப்பு தேவைப்பட்டிருக்கும். மீனவர்களில் ஒரு பிரிவினர் உப்பு வியாபாரம் செய்திருப்பார்கள். இன்றும் உப்பு வணிகம் செய்த மீனவர்களின் ஒரு பிரிவினர் ‘’செட்டியார்’’ என அழைக்கப்படுகின்றனர். ஆசாரி, கொல்லர் , கருமார் ஆகிய சாதிகள் விவசாய உபகரணங்களை உற்பத்தி செய்வதிலும் பொற்கொல்லர்கள் தங்க நகை செய்வதிலும் ஈடுபட்டிருந்த சாதியினர். 

இது ஒரு எளிய கோட்டுச் சித்திரம். பிரதேசத்துக்கு ஏற்ற வண்ணம் ஒவ்வொரு விதமாக சாதியப் பரவல் நிகழ்ந்துள்ளது. 

நிலவுடமை சாதிகள், போர்ச் சாதிகள், வணிகச் சாதிகள், உடலுழைப்பு சாதிகள், கைவினைஞர்கள், வைதிகர்கள் என சாதிகளை வகைப்படுத்த முடியும். இதனை முழுமையானது என்று சொல்ல முடியாது. பெருமளவிலானது என்று வகைப்படுத்த முடியும். ஒரு சாதியினரின் நூறாண்டு வரலாற்றைப் பார்த்தாலே அவர்கள் ஒரு தொழிலிலிருந்து இன்னொரு தொழிலுக்கு மாறியிருப்பதைக் காண முடியும். அவ்வாறு நிகழ்வதற்கான காரணிகள் பல. அத்தகைய மாற்றம் நிகழ்ந்தவாறே இருக்கிறது என்பதே உண்மை. 

தமிழகத்தில் படையாச்சி என்னும் சாதி போர்ச் சாதி. சோழ மன்னர்களின் படைகளில் முக்கிய தளபதிகளாக போர் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஒரு காலகட்டத்தில் நிலத்தை வைத்து விவசாயம் செய்யும் நிலவுடைமை சாதியாக அவர்கள் மாற்றம் அடைந்தார்கள். கவுண்டர்கள் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடியவர்கள். கடந்த 50 ஆண்டுகளில் வணிகத்திலும் தொழில் துறைக்கும் வந்து பெருவணிகம் புரிந்தார்கள். விவசாயம் புரிந்தவர்கள் தொழில் புரிவதும் தொழில் புரிந்தவர்கள் வணிகம் புரிவதும் இயல்பாக நிகழும் சமூக நிகழ்வு என்பதை சாதாரணமாகவே உணர முடியும். 

ஒரு பயணியாக நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். விதவிதமான மக்களைப் பார்ப்பது என்பதும் அவர்களுடன் உரையாடுவது என்பதும் அளிக்கும் மகிழ்ச்சியை நாடெங்கும் உணர்ந்திருக்கிறேன். எல்லா ஊரும் எனது ஊரே. எல்லா மக்களும் எனது உறவினர்களே. எல்லா மானுடரும் நலம் பெற்று வாழும் நிலை உலகெங்கும் ஏற்பட வேண்டும் என்ற தீவிரமான விருப்பு எனக்குள்ளது. இந்த பின்னணியுடன் கூடியதே சாதி குறித்த எனது புரிதல்கள். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஒன்றாக மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களிலும் நூல்களை அளித்த போது பல சலூன்களின் உரிமையாளர்கள் கண்களில் நீர் நிறைய நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள். அளிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் நூல்கள். ஆன்மீக நூல்கள் முடி திருத்தும் நிலையத்தில் இருக்கலாமா என சில சலூன்களில் ஐயத்துடன் கேட்டனர். அவர்களிடம் நான் சொன்னேன். ‘’ ஆய கலைகள் 64 என்கிறது இந்திய மரபு. அந்த கலைகள் அனைத்துக்குமான தெய்வம் சரஸ்வதி. ‘’அணிக்கலை’’ என்பது அந்த 64 கலைகளில் ஒன்று. அணிக்கலை நிகழும் இடமே சலூன். சரஸ்வதி கையில் எப்போதும் புத்தகம் இருக்கும். எனவே இது மிகப் பொருத்தமான இடமே’’ என்று சொன்னேன். இதைக் கேட்டு கண்ணீர் மல்கிய சலூன் உரிமையாளர்கள் இருக்கிறார்கள். என் கைகளைப் பற்றிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மிகவும் மன நெகிழ்வுடன் பேசியவர்கள் இருக்கிறார்கள். 

நான் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இதயபூர்வமாக உரையாடியவன். என்னுடைய சந்திப்புகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமே எனது எண்ணங்களை நான் உருவாக்கிக் கொள்கிறேன். மனிதர்களில் மேல் கீழ் என்று பேதம் கற்பிப்பது கடவுளுக்கு எதிரானது என்பதை உறுதியாக நம்புகிறேன். கடவுள் மனிதர்களை நினைத்து மிகவும் வருந்தும் செயல் என ஒன்று இருக்குமாயின் அது மனிதர்களை பேதப்படுத்துவதாகவே இருக்க முடியும். 

இந்தியாவில் சாதி என்பது மாறிக் கொண்டேயிருக்கும் ஒன்று. இங்கே பல விவசாயக் குடிகள் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறார்கள். பல மேய்ச்சல் சாதிகள் நாடாண்டிருக்கிறார்கள். மன்னர்களை விட பெருஞ்செல்வம் கொண்டிருந்த வணிக சாதியினர் இருந்திருக்கிறார்கள். 

மானுடத்தின் நீண்ட கால வரலாற்றில் இந்தியா எவ்வளவோ தூரம் முன்னேறி வந்திருக்கிறது. பண்டைக்காலத்திலும் இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது. இப்போதும் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுகிறது. இந்தியா அளவு மக்கள்தொகை கொண்ட சீனா சர்வாதிகார ஆட்சி முறையைக் கொண்டிருக்கிறது. தனது சொந்த மக்களின் உழைப்பைச் சுரண்டும் நாடு சீனா. சீனாவின் தொழிலாளர்கள் அடிமைகள் என நடத்தப்படுகின்றனர். இன்னும் உலகின் பல நாடுகளில் சர்வாதிகாரமும் மன்னராட்சியும் நடக்கிறது.  

உலகின் பல நாடுகளோடு ஒப்பிடும் போது நமது நிலை மிக மேம்பட்ட ஒன்றே, ஜனநாயகம் எல்லா சாதிகளுக்கும் பொருளியல் வாய்ப்புகளை வழங்குகிறது. உலக மக்கள்தொகைக்கு தேவையான பல விஷயங்களை இந்தியாவில் இருக்கும் சாதிகளால் உற்பத்தி செய்து வழங்க முடியும். வணிகம் இந்திய சாதிகளுக்கு பொருளியல் சுதந்திரத்தை வழங்க முடியும். 

இந்த விஷயங்களை உரையாடலின் போது இளைஞர்களிடம் சொன்னேன்.