Thursday 13 July 2023

தேடலும் கண்டடைதலும்

 இன்று தளத்தில் மக்கள் கல்வி என்ற பதிவினை எழுதி பதிவிட்டேன். 

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ‘’ஸ்கில் இந்தியா’’ வின் கீழ் தென்னை மரம் ஏறுதலுக்கான பயிற்சி இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். ‘’ஸ்கில் இந்தியா’’ இணையதளத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த தளத்தின் இணைப்பு இருந்தது. அதிலும் தேடிப் பார்த்தேன். பின் ‘’தேசிய கயிறு வாரியம்’’ என்ற அமைப்பு இருப்பது ஞாபகம் வந்தது. அதில் பார்த்தேன். பின் ‘’தேசிய தென்னை வாரியம்’’ என்ற அமைப்பின் இணையதளத்துக்கு சென்றேன். அதில் தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள தென்னை மரம் ஏறும் பயிற்சி பெற்றவர்களின் பட்டியலும் அதில் இருந்தது. அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பட்டியலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். ஒரே ஒருவர் இருந்தார். அவருடைய அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். 

காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் அவருக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது. ஒரு வார காலப் பயிற்சி. பயிற்சி பெற்றவர்களுக்கு தென்னை மரம் ஏற உதவும் கருவியும் வழங்கப்படுகிறது என்ற தகவலைத் தெரிவித்தார். அவர் பயிற்சி பெற்ற ஊர் எது என்ற விபரத்தைக் கேட்டுக் கொண்டேன். மேலதிக விபரம் தேவைப்பட்டால் மீண்டும் அழைக்கிறேன் என்று சொன்னேன். அவருடைய ஊர் ஊரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. கூடிய விரைவில் நேரில் சந்திப்பதாகக் கூறினேன். 

‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் இந்த பயிற்சி குறித்த விபரங்களை துண்டுப் பிரசுரமாகத் தயார் செய்து பக்கத்து கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 10,000 துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டால் 1000 இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு நிகழுமாயின் அது ஒரு நல்ல எண்ணிக்கையே. 

ஒரு பயிற்சி வகுப்பில் 15 பேர் இருப்பார்கள் என பயிற்சி பெற்றவர் சொன்னார். ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் கொடுக்க இந்த எண்ணிக்கையே சரியாக இருக்கும் என்பதால் 15 என எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். முதலில் செயல் புரியும் கிராமத்திலிருந்து 15 பேரை அனுப்பி வைக்கலாம் என எண்ணினேன். 

தென்னை மரம் ஏறும் ஒருவருக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 20,000 வருமானம் கிடைக்கும். வறுமையில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு அது நல்ல ஒரு வருமானமே. 

நாட்டில் ஆக்கபூர்வமான வாய்ப்பளிக்கும் நம்பிக்கையூட்டும் பல செயல்பாடுகள் உள்ளன. தேவைப்படும் நபர்களின் கவனத்துக்கு அது முழுமையாக சென்று சேர்வதில் இருக்கும் தகவல் தொடர்பு இடைவெளி தவிர்க்க இயலாதது. அரசு முன்னெடுக்கும் பல விஷயங்களை தேவைப்படும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஒரு முக்கியமான பொதுப்பணியே. 

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மரம் ஏறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர் ஒருவர் மட்டும் இருந்தார். பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் 247 பேரின் பெயர் பட்டியல் இருந்தது. அதற்கு காரணம் , பட்டுக்கோட்டை தென்னை சாகுபடிக்கு பேர் போன பிரதேசம். எனினும் ஒரே நதி பாசனம் பெற்றும் ஒரே வகையான மண் ஆக இருப்பினும் தஞ்சாவூர் சூழ்நிலை நாகப்பட்டினத்தில் இல்லை. கடலூர் மாவட்ட பட்டியலையும் பார்த்தேன். அதில் 15 பேர் இருந்தனர். அதாவது தென்னை மரம் ஏறுபவர்கள் குறைவாக இருக்கும் பிரச்சனை கடலூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ளது. அங்கே பயிற்சி பெற்ற ஆயிரம் பேர் உருவாவார்கள் என்றால் அந்த 1000 பேரும் கணிசமான மாத வருமானத்தை உருவாக்கிக் கொள்ளும் நிலைக்கு செல்வார்கள். அவர்கள் குடும்பத்துக்கு அது பெரிய உதவியாக இருக்கும். 

‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. நாம் சூழலை அவதானிக்கிறோம். அந்த அவதானத்தின் அடிப்படையில் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். முயற்சி சிறு அளவில் வெற்றி பெறும் என்றால் கூட அதனால் பலருக்குப் பலன் இருக்கும்.