சில மாதங்களுக்கு முன்னால் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானது. திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி 21 நாட்கள் உணவு உண்ணாமல் உண்ணா விரதம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் என்றும் 21ம் நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் என்றும் அந்த செய்தி தெரிவித்தது. உண்ணாவிரதம் மேற்கொண்ட 21 நாட்களில் வென்னீர் மட்டுமே அருந்தியிருக்கிறார். வேறு எந்த திட திரவ உணவும் அருந்தவில்லை. அந்த பெண்மணி சமண சமயத்தைச் சேர்ந்தவர். சமணம் உண்ணா விரதத்தை தனது நெறிமுறைகளில் முக்கியமான ஒன்றாக வகுக்கிறது. உண்ணா விரதம் மானுடரின் அக உயர்வுக்கு உதவும் என்பது சமணத்தின் போதனை.
சிப்கோ இயக்கத்தின் நிறுவனரும் காந்தியவாதியுமான சுந்தர் லால் பகுகுணா 90 நாட்கள் வரை உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். மகாத்மா காந்தி வாழ்வில் பலமுறை பல நாட்கள் உண்ணாவிரதமிருந்தவர். அவரது ஒரு உண்ணாவிரதம் 21 நாட்கள் நீண்டது.
மனித உடல் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கக் கூடியது. மனித உடலின் இயங்குமுறை பல நாட்களுக்குத் தேவையான ஆற்றலை பல விதங்களில் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியது. உண்ணாவிரதத்தின் போது உடல் பல ஆண்டுகள் சேமித்திருக்கும் ஆற்றலை எடுத்து செலவிட்டுக் கொள்கிறது.
உடல், மனம், உயிர் என்ற மூன்றின் இணைவே மனித வாழ்வு. உடலும் மனமும் அறியப்படும் அளவில் சாமானியர்களான நாம் உயிரை அறிவது இல்லை. உண்ணா விரதம் அதற்கான மார்க்கம். அதனால் தான் உலகின் அத்தனை சமயங்களும் உண்ணா விரதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
உண்ணாவிரதம் உடலையும் மனதையும் மேலும் உற்று நோக்கி அறிய உதவுகிறது. நாம் நமது சூழலால் உருவான பழக்கங்களால் உடலுக்கு உணவளிக்கிறோம். மூன்று வேளை உணவருந்துவது, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பால், தேனீர் அல்லது காஃபி அருந்துவது, ஒருவேளை உணவுக்கும் இன்னொரு வேளை உணவுக்கும் இடையே சிறு தின்பண்டங்கள் ஏதும் அருந்துவது என நம் சமூகச் சூழலில் நாம் பழகியிருக்கிறோம். யோசித்துப் பார்த்தால் , நாம் எவ்வளவு உணவருந்த வேண்டும் என்பதற்கான பதில் நம் உடல் இலகுவாக ஆரோக்கியமாக இயங்க எவ்வளவு உணவு தேவையோ அவ்வளவு உணவையே அருந்த வேண்டும். எந்த ஒரு சாமானிய மனிதராலும் தன் அனுபவத்தைக் கொண்டே அந்த உணவின் அளவை அறிந்திட முடியும். பழக்கங்களால் கட்டுண்டிருக்கிறது நம் உடல். உண்ணாவிரதம் அந்த பழக்கத்தின் பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு முயற்சியே.
10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருமுறை சஷ்டி விரதம் இருந்திருக்கிறேன். தீபாவளிக்கு மறுநாள் விரதத்தைத் தொடங்கி கந்த சஷ்டி வரை ஆறு நாட்கள் நீர் மட்டும் அருந்தி விரதமிருந்தேன். எனது தொழில் சார்ந்து ஒரு பெரும்பணியை முன்னெடுக்க இருந்தேன். எடுத்த காரியம் சிறப்பாக நிறைவேற மேற்கொண்ட விரதம் அது. அந்த ஆறு நாட்களும் இலகுவாகவே போயிற்று. அதன் பின்னர் , 5 ஆண்டுகளுக்கு முன்னால் நவராத்திரி விரதம் ஒன்பது நாட்களுக்கு இருக்க முயன்றேன். ஐந்து நாள் வரை நீடித்தது அந்த விரதம். ஒரு நீண்ட உண்ணாவிரதத்துக்கு முயன்று அந்த முயற்சியில் சில முறை தோல்வி அடைந்தேன்.
உணர்ச்சிகரமும் கொந்தளிப்பும் கொண்டது எனது அகம். படைப்பூக்கம் கொண்ட மனநிலை அவ்வாறாகவே இருக்க இயலும். நீண்ட உண்ணாவிரதத்தில் மன உறுதியினும் அகச் சமநிலையே முதன்மையானது. எங்கும் செல்லாமல் ஓரிடத்தில் இருப்பது உண்ணாவிரதத்துக்கு உதவிகரமானது. எனினும் இப்போது எனது தொழில் சார்ந்த பல்வேறு செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். தினமும் அவற்றுக்கு நேரம் கொடுத்தே ஆக வேண்டும். தொழில் சார்ந்த பணிகளைத் தவிர மற்ற நேரம் வீட்டில் அறையில் அமைதியாய் இருக்க முடிவு செய்துள்ளேன்.
உணவு இல்லாமல் கூட உடல் இருந்து விடும் ; ‘’உணவு’’ என்பதை ஞாபகப்படுத்தாமல் மனத்தால் இருக்க முடியாது. உண்ணாவிரதத்தில் முக்கியமான தடை உடல் அல்ல ; மனமே. இரண்டு முறை ஒரு வார கால அளவு உண்ணாவிரதமிருந்த அனுபவத்திலிருந்து நான் உணர்ந்தது உடலால் உணவு இல்லாமல் இருந்து விட முடியும். உடல் காற்றிலிருந்தும் சூரிய வெளிச்சத்திலிருந்தும் கூட தனக்கான உணவையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்கிறது என்பதை அனுபவத்தின் சிறு துளியாய் உணர்ந்திருக்கிறேன்.
மகாகவி பாரதியின் ஒரு கவிதை
தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் இனி
என்னைப் புதிய வுயிராக்கி எனக்கேதுங் கவலையறச் செய்து — மதி
தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
பாரதி ‘’புதிய உயிர்’’ என்கிறான். கணமும் ஒளியுடன் உயிர்த்திருப்பது உயிர். பாரதிக்கு அது மேலும் உயிர்ப்புடன் கூடியதாக புதிய உயிராக வேண்டியிருக்கிறது.
வாழ்நாளில் பாதி கடந்து விட்டது. இன்றே கூட மரணத்தை எதிர்கொள்ள நேரலாம். அடுத்த கணம் நடக்க இருப்பது என்ன என்பதை எதிர்கொள்வதிலேயே வாழ்வின் ஆகச் சிறந்த சுவாரசியம் அமிழ்ந்திருக்கிறது.
இந்த உண்ணாவிரதத்தின் காலத்தில் சில நியதிகளை வகுத்துக் கொள்ளலாம் என இருக்கிறேன். அவற்றை எஞ்சிய வாழ்நாள் முழுதும் தொடரவும் விருப்பம் கொண்டுள்ளேன்.
(1) அதிகாலை 2 மணிக்கு எழுதல். இது மகாத்மா காந்தி அடிகளின் வழக்கம்.
(2) பிராத்தனையுடன் நாள் பொழுதைத் தொடக்குதல்
(3) யோகாசனங்கள் செய்தல்
(4) காலையும் மாலையும் ஒரு மணி நேரம் மௌனமாயிருத்தல்.
(5) வசிக்கும் அறையில் எப்போதும் ஒரு தீபச்சுடரை ஒளிரச் செய்திருத்தல்
(6) ஊரில் இருக்கும் ஆலயத்துக்கு தினமும் சென்று தெய்வ சன்னிதியில் தீபம் ஏற்றுதல்
(7) இந்த உண்ணாவிரதத்தின் 23 நாட்களும் தமிழறிஞர் ம. ரா. ஜம்புநாதன் மொழிபெயர்த்த ரிக் , யஜூர், சாம வேதங்களின் மொழிபெயர்ப்பை வாசித்துக் கொண்டிருத்தல். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் ‘’பகவத் கீதை’’ நூலை வாசித்தல். சுவாமி விவேகானந்தரின் முழுத் தொகுதியை வாசித்தல்
பல வருடங்களாக யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளும் இரண்டு நண்பர்களிடம் 23 நாட்கள் உண்ணாவிரதம் குறித்து கூறினேன். போதுமான அளவு வென்னீர் அருந்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். வயிற்றில் சுரக்கும் ஜீரண சுரப்பிகளில் உள்ள என்சைம்களை வென்னீர் கரைத்து விடும். எனவே வென்னீர் மட்டும் அருந்தி பல நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது எல்லா மனிதர்களாலும் முயன்றால் இயலக் கூடியதே என்றனர்.
ஆற்றுவதற்கு கணக்கற்ற பணிகள் இருக்கின்றன. இறைமையின் சிறு கருணை ஒரு துளி கிட்டினால் கூட உண்ணாவிரதத்தை எண்ணிய வகையில் செயலாக்க முடியும்.
பொதுவாக இவ்வாறான பெருமுயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த முயற்சி சிறப்பாக நிறைவுற்றால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். முன்னரே பேசுவது அச்செயல் நிகழ்ந்து விட்டது என்னும் மாயத் தோற்றத்தை மனத்தில் உருவாக்கி விடும். அதுவே செயலை நிறைவு செய்ய இயலாமல் போவதற்கு காரணம் ஆகி விடும். எனது அகம் எழுத்தாளனின் அகம் என்பதால் திட்டமிட்டிருப்பதைக் கூறியிருக்கிறேன்.
இந்த உண்ணாவிரதத்தை எண்ணிய வண்ணம் மேற்கொள்வேன் என என் உள்ளுணர்வு கூறுகிறது. எழுத்தாளனின் உள்ளுணர்வு.
காந்தி ஜெயந்தி அன்று (02.10.2023) உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறேன். விஜயதசமி அன்று (24.10.2023) நிறைவு செய்கிறேன்.