Sunday 24 September 2023

காவிரி போற்றுதும் - செயல் புரியும் கிராமத்துக்கான திட்டங்கள்

 (1) ’’காவிரி போற்றுதும்’’ ஓர் நுண் அமைப்பு. கிராமம் என்னும் ஒரு சிறு அலகை எடுத்துக் கொண்டு அச்சிறு அலகிற்குள் ஓர் நுண் அமைப்பால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்கிறது. தனது முன்னெடுப்புகள் மூலம் ‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்களை இணைத்துள்ளது. மக்களை ஒற்றுமைப்படுத்த நிகழும் எந்த முயற்சியுமே தன்னளவில் வெற்றியே. மேலும் ‘’காவிரி போற்றுதும்’’ இதுவரை முன்னெடுத்திருக்கும் செயல்கள் எதிர்பார்த்த பலன்களைத் தந்திருப்பதால் ‘’காவிரி போற்றுதும்’’ முயற்சிகள் வெற்றிகரமானவையே. 

சிறு சிறு செயல்கள் மூலம் ஒட்டுமொத்த கிராமமும் பலமுறை இணைக்கப்பட்டிருப்பதால் நாம் மேலும் மேலும் முன்னகர வேண்டும் என்ற ஆவல் கொள்கிறோம். அதன் மூலம் நம் இலக்குகளை பெரிதாக்குகிறோம். விரிவாக்குகிறோம். 

(2) ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கல்வி மையத்தை செயல் புரியும் கிராமத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த கல்வி மையம் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை இயங்கும். அங்கே மொழிகள் கற்றுத் தரப்படும். கணிதம் கற்றுத் தரப்படும். அறிவியல் கற்றுத் தரப்படும். 

காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை இயங்குவதாயினும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கேந்திரிய வித்யாலயா , நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பெறும் ஊதியத்துக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

எந்த சமூகத்தில் ஆசிரியர்கள் மதிக்கப்படுகிறார்களோ அந்த சமூகமே முன்னேற்றம் காணும். 

(3) ‘’காவிரி போற்றுதும்’’ கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் உடல் வலிமையை வளர்க்கும் விளையாட்டு சாதனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, ரிங் பால், ஸ்கிப்பிங் கயிறு , கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் மட்டை , ஷெட்டில் ராக்கெட், பந்து ஆகியவற்றை கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

(4) கிராமத்தில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் இருக்கும் அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் மாதா மாதம் ஒரு தொகையை தனது சார்பில் அளிக்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. கிராம ஆலயங்களில் பூசனைகள் முழுமையாக நிகழ வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். கிராமத்தில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் தினமும் வேத கோஷம் எழ வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்க விரும்புகிறது. 

(5) கிராமத்தில் 1000 நூல்கள் கொண்ட நூலகத்தை அமைக்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. 

(6) கிராமத்தில் இருப்பவர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள விரும்பினால் அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் நல்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. 

(7) கிராம விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டு வளர்த்து  15 ஆண்டுகளில் பயனடைய அவர்களுக்கு உடனிருந்து உதவுவது ‘’காவிரி போற்றுதும்’’ன் அடிப்படையான முதன்மையான திட்டம். 

(8) கிராமத்தில் அதிகபட்சமாக எத்தனை மரங்கள் நட முடியுமோ அத்தனை மரங்களை நட்டு பராமரித்து விருட்சமாக்க வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

நாம் காண்பது பெரும் கனவு. நாம் திட்டமிடுபவை பெரும் செயல்கள். நமது இலக்குகளை நோக்கி நாம் நில்லாது முன்செல்கிறோம்.