Saturday, 23 September 2023

லௌகிக அலைகள்

 18 ஆண்டுகளுக்கு முன்னால் , கட்டுமானப் பணிக்கு வந்தேன். இன்ன வேலையை இன்ன விதமாகத்தான் செய்ய வேண்டும் என்ற கறாரான அணுகுமுறையே இத்துறைக்குச் சரியானது என்ற சரியான புரிதல் கொண்ட பணி பயிலும் சூழ்நிலை எனக்கு வாய்த்தது. நம்மால் திட்டமிடப்படுகிறது ; நாம் செயல்படுத்துகிறோம் எனினும் நம் கண்ணுக்குத் தெரியாத ஊழ் நம்முடன் இருப்பதை நம் முன் இருப்பதை நம்மைச் சூழ்ந்து இருப்பதை எங்கள் துறையில் நாங்கள் உணர்ந்து கொண்டே இருப்போம். 

ஒரு கான்கிரீட்டிங் வேலை நடைபெறுகிறது எனக் கொள்வோம். 100 மூட்டை சிமெண்ட் தேவை. நாம் ஹார்டுவேர் கடையில் ஆர்டர் செய்திருப்போம். அவர்கள் கம்பெனிக்கு ஆர்டர் செய்திருப்பார்கள். இன்ன நாளில் வேண்டும் என தேதியை சொல்லியிருப்போம். நமது பணியிடத்தில் அன்று கான்கிரீட்டிங் வேலைக்காக 20 பணியாளர்களை வரச் சொல்லியிருப்போம். சிமெண்ட் வண்டி வந்து சிமெண்ட்டை இறக்க வேண்டும். அரியலூரிலிருந்து சிமெண்ட் வண்டி கிளம்பியிருக்கும். வந்து சேர வேண்டிய இடத்துக்கு 7 கி.மீ முன்னால் வண்டி பஞ்சர் ஆகியிருக்கும். குறித்த நேரத்துக்கு வண்டி வந்து சேர்ந்திருக்காது ; நீண்ட பணிக்குத் தயாராக வந்திருக்கும் பணியாளர்கள் சோர்வை வெளிப்படுத்துவார்கள் . கூச்சல் இடுவார்கள். கலைந்து போகத் துவங்குவார்கள். ஹார்டுவேர் கடைக்காரர் அவரது அன்றைய பணியில் மூழ்கி விடுவார். அது இயல்பானது தான். வண்டி டிரைவர் பஞ்சர் ஒட்ட முயற்சி செய்து கொண்டிருப்பார். இப்போதாவது அலைபேசி இருக்கிறது. முன்னர் அதுவும் இருக்காது. வேறு இடத்தில் 100 மூட்டை சொல்லலாம் என்றால் வேறு கடைகளில் அத்தனை மூட்டை ஸ்டாக் இருக்காது. அங்கும் இங்கும் அலைய வேண்டும். ஒரு பெரிய வலைப்பின்னலில் எங்கோ நிகழும் சிறு நிகழ்வு உருவாக்கும் எதிர் விளைவுகளை மௌனமாகப் பார்ப்பது அன்றி வேறு வழி இருக்காது. வாழ்க்கையும் அவ்வாறான தன்மை கொண்டது தானே? எதிர்பார்த்த நேரத்துக்கு 3 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் தாமதமாக வண்டி வந்து சேரும். பின் மாலை வரை கான்கிரீட்டிங் செய்து பணியை நிறைவு செய்வோம். ஒரு முறை இவ்வாறு நிகழ்ந்த பின் மறுமுறை இவ்வாறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சி செய்வோம். அனுபவம் என்பது இதுதான். தொடர் அனுபவங்களின் பின்னர் நாங்கள் ஒன்றை உணரத் தொடங்குவோம். ஊழ் என்பது நம்மைச் சூழ்ந்து எங்கும் உள்ளது. அந்த உணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் ஆழமாகச் சொல்லிக் கொள்வோம். ஊழ் வலியது என்பதற்காக நாம் நம் முயற்சிகளை குறைத்துக் கொள்ளக் கூடாது ; ஊழ் வலியது என்பதால் நாம் நம் முயற்சிகளையும் திட்டமிடல்களையும் மேலும் தீவிரமாக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வோம். 

காலை 7 மணிக்கெல்லாம் கட்டுமானப் பணியிடத்துக்குச் சென்று நடந்த கட்டுவேலை அல்லது கான்கிரீட் அல்லது பூச்சுவேலையில் தண்ணீர் ஊற்றி கியூரிங் செய்ய வேண்டும். காலை விழிப்பு கியூரிங் செய்ய வேண்டும் என்ற நினைப்புடனே நிகழும். இப்போதும் காலை எழுந்ததும் பணியிடத்துக்குச் சென்று கியூரிங் செய்கிறேன். பணியாளர்கள் காலை 9 மணிக்கு வருவார்கள். வந்ததும் கியூரிங் செய்வார்கள் எனினும் காலை 7 மணிக்கு நான் ஒருமுறை செய்தால்தான் எனக்குத் திருப்தி. 

மெட்டீரியல் ஆர்டர் செய்வது, அன் லோடு ஆன மெட்டீரியலுக்குப் பணம் கொடுப்பது, பணியை மேற்பார்வையிடுவது என காலையில் துவங்கும் பணி நிறைவாக இரவு 8 மணி ஆகி விடும். உணவு உண்டு படுத்து உறங்கினால் மீண்டும் ஒருநாள் . மீண்டும் அதே பணி. 

இந்த நாள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது தான் ஒரு சிவில் பொறியாளனின் பிராத்தனையாக இருக்கும். 

ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உண்டான நாளிலிருந்து இதே பிராத்தனை தானே இருக்கிறது !