Saturday, 16 September 2023

பண்ணையைப் பார்வையிடுதல்

 சென்ற வாரம் என்னைத் தொடர்பு கொண்ட ஐ.டி கம்பெனி உரிமையாளர் இன்று ‘’காவிரி போற்றுதும்’’ ஆலோசனையின் படி 3 ஏக்கரில் 900 தேக்கு மரங்கள் நடப்பட்டுள்ள பண்ணையைப் பார்வையிடுவதற்காக சென்னையிலிருந்து வந்திருந்தார். அவருடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் வந்திருந்தனர். ஊரின் நுழைவாயிலில் அவர்களை என்னுடைய மோட்டார்சைக்கிளில் எதிர்கொண்டு தேக்கு பண்ணைக்கு அழைத்துச் சென்றேன். தேக்கு மரங்கள் 15 அடி உயரம் வளர்ந்திருக்கின்றன. அவ்வப்போது பெய்யும் மழை அவற்றின் வளர்ச்சிக்கு துணையாய் இருக்கிறது. 

ஆர்வத்துடன் பண்ணையைப் பார்வையிட்டனர். அவர்களுக்கு மரப்பயிர் என்பது மிகவும் புதிது. நடும் போது மரக்கன்று எவ்வளவு உயரம் இருக்கும் என்று கேட்டனர். அரை அடி அதாவது 15 செ.மீ இருக்கும் என்று சொன்னேன். 15 செ.மீ உயரம் கொண்டிருந்த மரக்கன்று ஒரு வருடத்தில் 15 அடி உயரம் வளர்ந்து விடுமா என்று ஆச்சர்யப்பட்டனர். 

ஒருமுறை ஒரு வனவியல் பேராசியர் ஒருவரின் அலைபேசி எண்ணை விவசாயத் துறையில் விஞ்ஞானியாக இருக்கும் எனது நண்பர் அளித்தார். அந்த பேராசியரைத் தொடர்பு கொண்ட போது அவர் என்னிடம் சொன்னார். ‘’ நமக்குத் தேவை அந்த தாவரத்தின் 10 அடி உயரத் தண்டு மட்டுமே ‘’ என்றார். தேக்கினை பூமியிலிருந்து 10 - 15 அடி வளர்ச்சியை உறுதி செய்தாலே போதுமானது. நாம் எதிர்பார்க்கும் பலன் அதிலேயே கிடைத்து விடும். 

வாரத்துக்கு மூன்று நாட்கள் தேவையான நீர் அளிக்கப்படுமானால் தேக்கின் வளர்ச்சி என்பது மிகச் சிறப்பாக இருக்கும். 

பொருளியல் பலன் என்பது விவசாயிக்குக் கிடைத்தால் தான் விவசாயம் ஒரு தொழிலாக நீடித்து இருக்கும். விவசாயிக்குப் பொருளியல் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் முயல்கிறோம்.