Sunday, 24 September 2023

மொழிகள்

 மனித மூளை அதிக எண்ணிக்கையிலான மொழிகளை வெகு லகுவாகக் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டது. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக மனித இனத்துக்கு அத்திறன் வாய்க்கப் பெற்றது. மனிதன் எப்போது தான் எண்ணுவதைப் பேசத் தொடங்கினானோ அப்போதிலிருந்து அவனது மூளை மொழிதலின் ஒலிகளை அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. சிறு குழந்தைகளால் வெகு எளிதாக பெரியவர்களை விட அதிக எண்ணிக்கையிலான மொழிகளைக் கற்க முடியும் ; மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக சிறு குழந்தைகளால் மொழியைப் பயில முடியும். 

தமிழ்நாட்டில் உள்ள ஒரு குழந்தை மலையாள மொழி பயிலும் எனில் அதனால் ஏற்படும் பயன்கள் என்பது பலப்பல. கேரளம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே எழுத்தறிவு சதவீதம் மிக அதிகம் கொண்ட மாநிலம். எனவே அங்கே கல்வி படிப்பு சார்ந்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றன. உலக மொழிகளின் பல இலக்கியங்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கே உள்ள வாசகர்களுக்கு வாசிக்கக் கிடைக்கிறது. வெட்டம் மாணி என்பவர் ‘’புராண கலைக்களஞ்சியம்’’ என்பதை உருவாக்கியுள்ளார். நம் நாட்டின் புராணங்களில் உள்ள அனைத்து பாத்திரங்கள் குறித்த விரிவான கலைக்களஞ்சியம் அது. மலையாள மொழி பயின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரால் மலையாளத்தில் கிடைக்கும் அத்தனை மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க முடியும். 

ஒரு குழந்தை ஜப்பானிய மொழி பயில்கிறது என்றால் ஜப்பானின் கலை, நுண்கலை ஆகியவற்றுடன் மேலான நெருக்கம் கொள்ள முடியும். 

உதாரணத்துக்காக மலையாளத்தையும் ஜப்பான் மொழியையும் குறிப்பிட்டேன். மொழிகள் அதிக அளவில் குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுவது நல்ல உபயோகமான விஷயமே ஆகும். 

இதில் கட்டாயம் எதுவும் இல்லை ; விருப்பப்படுபவர்கள் விரும்பும் மொழியைக் கற்க வாய்ப்பு இருக்க வேண்டும்.