Tuesday 5 September 2023

நடுக்காவேரி

 நண்பன் கே.எஸ் ஐ சிதம்பரத்திலிருந்து ஊருக்கு காரில் வரச் சொன்னேன். நேற்று முந்தின தினம் தென்னாற்காடு மாவட்டத்தில் சுற்றியது போல இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றலாம் எனத் திட்டமிட்டேன். நேற்று முந்தின தினம் ஞாயிற்றுக்கிழமை. அன்று கட்டுமானப் பணியிடத்தில் விடுமுறை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணி நடைபெறும். சென்ற வாரம் பணிகள் கடுமையாக இருந்ததால் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டோம். அதனைப் பயன்படுத்தி நான் அன்றைய தினத்தில் பயணத்தை வைத்துக் கொண்டேன். மறக்க முடியாத பயணமாக அது அமைந்தது. 

நேற்று நண்பனுக்கு மாநில அரசு அலுவலகம் ஒன்றில் சிறு பணி ஒன்று இருந்தது. கொஞ்ச நேரத்தில் முடிந்து விடும் எனக் கணித்திருந்தான். ஆனால் நேற்று காலை அரசு அலுவலகம் சென்றவன் மாலை 5 மணிக்குத்தான் பணி முடிந்து வீடு திரும்பினான். நான் நேற்று கட்டுமானப் பணியிடத்தில் இருந்தேன். 

இன்று காலை 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வருவதாகச் சொன்னான். காலை 9.15 மணி அளவில் கட்டுமானப் பணியிடத்துக்கு பணியாளர்கள் வருவார்கள் ; அவர்கள் வந்ததும் பணியைத் துவக்கி வைத்து விட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு பயணம் புறப்படலாம் என்பது என் எண்ணம். ‘’கொஞ்ச நேரம்’’ என்பது சிவில் என்ஜினியர்கள் கணக்கில் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு மணி முப்பது நிமிடம் வரை. நண்பன் பொறுமையாகக் காத்திருந்தான். இன்று மூன்று பணியாளர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் மதியம் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு புறப்பட்டேன். 20 சிமெண்ட் மூட்டைக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது ; பணியிடத்துக்கு அருகில் உள்ள சிமெண்ட் கடையில் பணம் கொடுத்து விட்டு கிளம்பினோம். 

நண்பன் பசி பொறுக்க மாட்டான். இருப்பினும் ஊருக்கு அருகில் ஐ.டி நிறுவன ஊழியர் வயலில் 14 மாதங்களுக்கு முன் நடப்பட்டு இப்போது 15 அடி உயரத்தில் இருக்கும் தேக்கு மரங்களைக் காணச் சென்றோம். நண்பன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான். பின்னர் மெயின் ரோட்டில் இருந்த இன்னொரு தேக்கு தோப்பையும் காட்டினேன். 

அங்கிருந்து ஆடுதுறை சென்றோம். அப்போது காலை 11 மணி ஆகி விட்டது. அங்கே இருந்த பழமையான ஹோட்டல் ஒன்றில் காலை உணவு உண்டோம். எங்கள் பயணத்தை எங்கள் நட்பின் பொழுதைக் கொண்டாடும் விதமாக முதலில் கோதுமை அல்வா ஆர்டர் செய்தோம். அந்த ஹோட்டலின் பூரி மசால் மிகவும் பிரபலம். அதனை ஆர்டர் செய்து உண்டோம். அதன் பின்னர் நெய் பொடி இட்லி சாப்பிட்டோம். வயிறு ‘’ஃபுல்’’ ஆனது. 

அங்கிருந்து தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்கும் இலக்கிய நண்பர் ஒருவரைக் காணச் சென்றோம். அவர் வீட்டில் மாலை 4 வரை பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் கவிதை எழுதுபவர் என கே. எஸ் ஸிடம் சொல்லியிருந்தேன். நண்பரின் கவிதைகளை அவரிடமிருந்து பெற்று அவரிடம் தனது அபிப்ராயங்களை கே. எஸ் ஆர்வத்துடன் கூறிக் கொண்டிருந்தான். தொடர்ந்து எழுதுமாறு கூறினான். நண்பர் வீட்டிலேயே மதிய உணவுண்டோம். அவர் வீட்டில் யாரும் இல்லை ; ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். நண்பர் சுவையான பருப்பு சாம்பார் வைத்திருந்தார். கெட்டித் தயிர் இருந்தது. சாம்பார் சாதமும் தயிரை மோராக்கி மோர் சாதமும் சாப்பிட்டுக் கிளம்பினோம். 

கிளம்பும் கணம் வரை அடுத்து எங்கு செல்வது எனத் திட்டமிடவில்லை. அந்த கணத்தில் ‘’திருப்பூந்துருத்தி’’ செல்வது என முடிவெடுத்தோம். திருவையாறு அருகே உள்ள தலம் திருப்பூந்துருத்தி. இறைவனின் பெயர் புஷ்பவனேஸ்வரர். பெயருக்கு ஏற்றார் போல ஆலயம் பூந்தோட்டமாக உள்ளது. அந்த ஆலயத்தின் சூழ்நிலையும் அமைதியும் மனத்தையும் உணர்வையும் தொட்டது. அந்த ஆலயத்தின் ஊழியர்களிடம் ஆலயம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் இன்னும் சில நாட்களில் நாள் முழுக்க ஆலயத்தில் இருக்கும் வகையில் வருகிறேன் என்று சொன்னேன். அங்கே நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. 

காரில் நடுக்காவேரி என்ற ஊரின் வழியாக திருக்காட்டுப்பள்ளி வந்து கல்லணை பூம்புகார் சாலையைப் பிடித்தோம். நடுக்காவேரி ஊரைக் கடக்கும் போது என் மனம் பொங்கி கண்கள் கலங்கி விட்டன. அத்தனை பசுமை நெல்வயல்களிலும் வாழைத் தோட்டங்களிலும். அன்னை காவேரியின் கருணையை முழுமையாகப் பருகும் ஊர்கள் நடுக்காவேரியும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும். இன்னதென்று கூற இயலாத உணர்வால் என் கண்கள் கலங்கின. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் உடைந்து அழுதிருப்பேன். கல்லணை பூம்புகார் சாலை வந்ததும் மனம் வழமையான நிலைக்குத் திரும்பியது. பல முறை சென்று வந்து பழகிய சாலை என்பது காரணமாக இருக்கலாம். 

நண்பன் கே.எஸ் தமிழ்ச் சமூகவியல் சார்ந்து பல கேள்விகளை எழுப்பினான். என்னுடைய பார்வைக் கோணத்திலிருந்து எனது பதில்களைச் சொன்னேன். 

இரவு 9 மணி அளவில் ஊர் திரும்பி கட்டுமானப் பணியிடத்துக்கு வந்தோம் . இன்று நடந்த பணி என்ன என்று பார்த்தேன். நண்பனை சிதம்பரம் அனுப்பி விட்டு நான் பைக் எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். 

நாளை மாலை 4 மணி அளவில் சிதம்பரம் வருவதாகக் கூறினேன். தில்லை காளி அம்மன், நடராஜர், சிவபுரி, திருவேட்களம் ஆகிய சிதம்பரத்தைச் சுற்றியுள்ள ஆலயங்களுக்கு செல்வதாக முடிவெடுத்தோம்.