Wednesday, 27 September 2023

விழிப்பு

 நாம் ஒரு நாளில் எட்டு மணி நேரம் வரை உறக்கத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். ஒரு நாளில் மூன்றில் ஒரு பாகம். லௌகிகம் அளிக்கும் எடையை நாம் உறக்கத்தின் மூலம் ஈடு செய்து கொள்கிறோம். பகல் பொழுது லௌகிகத்துக்கானது எனக் கொண்டால் இரவு 8 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில் ஆற்றுவதற்கான லௌகிகச் செயல்பாடு என ஏதும் இல்லை. அந்த 12 மணி நேரத்தில் 4 மணி நேரத்தை உறக்கத்துக்கு அளித்தால் நாம் பயில வேண்டும் - பழக வேண்டும் என விரும்பும் விஷயங்களை அந்த 8 மணி நேரத்தில் வைத்துக் கொள்ள முடியும். வழக்கமான லௌகிகப் பணிகளுக்கான நேரம் காலை 8 மணியிலிருந்து இரவு 8. எழுத்து, வாசிப்பு, மௌனம், யோகப் பயிற்சிகளுக்கான நேரம் இரவு 8 மணியிலிருந்து காலை 8. 

இவ்வாறு யோசிப்பது மூலம் இவ்வாறு பரிசீலிப்பது மூலம் நான் இவற்றைச் செய்து விட்டேன் என்றோ இவற்றை என்னால் எளிதில் செய்ய முடியும் என்பதோ பொருள் அல்ல. சில சாத்தியங்களை நான் யோசித்துப் பார்க்கிறேன். பரிசீலிக்கிறேன். அவ்வளவே. 

இரவு 10 மணிக்கு மேல் என்னால் சில நிமிடங்கள் விழித்திருப்பது என்பதே மிகவும் சிரமமானது. காலை 5 மணிக்கு எழுவேன். இப்போது அதனை இரவு 10 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 2 மணிக்கு எழும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். 

அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணி வரையிலான நேரத்தை யோகாசனங்களுக்கு யோகப் பயிற்சிகளுக்கு பிராத்தனைக்கு மௌனத்துக்கு வாசிப்புக்கு எழுத்துக்கு அளிக்க முடியும்.