Wednesday, 27 September 2023

செல்வ நிலையம் : ஒரு மாமனிதனின் கதை

 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் மதுரையில் ஒரு மனிதன் பிறக்கிறான். தனது இளம் வயதில் ‘’வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப’’ கப்பலேறி மலேசியா செல்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஈட்டிய பொருளுடன் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மலேசியா செல்கிறான். ஊழின் மாயக்கரம் அவனையும் அவன் உடனிருந்தோரையும் அவன் வாழ்ந்த நாட்டின் மக்களையும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே அலைக்கழிக்கிறது. தனது வணிக நிறுவனத்தின் உரிமையாளரிடம் கப்பலில் நாடு திரும்ப அனுமதி கேட்கிறான் அந்த மனிதன். உரிமையாளர் அனுமதி அளிக்க மறுக்கிறார். நிகழ்த்த விரும்பிய பயணம் நிகழாமலேயே போகிறது. கப்பலில் பயணிக்காத அந்த மனிதனுக்கு ஊழ் நீண்ட வாழ்நாளை அளிக்க இருந்தது அந்த மனிதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சில நாட்களில் தெரிய வந்தது. அவன் பயணிக்க இருந்த கப்பல் நடுக்கடலில் ஜப்பான் விமானப்படைத்  தாக்குதலுக்கு ஆளாகி அதில் பயணித்த ஒருவருமே உயிர்பிழைக்கவில்லை. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘’இந்திய தேசிய ராணுவ’’த்தில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த மனிதனுக்கு நேதாஜியுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தித் தருகிறார் அந்த மனிதர். 

உலக அரசியலின் பல்வேறு திருப்பங்களுக்குப் பின் இரண்டாம் உலகப் போர் முடிவடைகிறது. அந்த மனிதர் ஊர் திரும்புகிறார். களங்கமற்ற ஒரு மாவீரனுடன் உடனிருந்தவர். வாழ்வும் சாவும் முட்டி மோதும் படுகளங்களைக் கடந்து வந்தவர். சிவில் வாழ்க்கையில் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொள்கிறார். 

அவரது வீட்டின் பெயர் ‘’செல்வ நிலையம்’’. ‘’ஸ்ரீநிவாஸம்’’ என்பதனை அவர் செல்வ நிலையம் என தமிழில் பெயரிட்டிருக்கலாம். அவர் வீட்டின் முன்னே இரு வேப்ப மரங்கள். அந்த வேப்ப மரம் நூற்றுக்கணக்கானோருக்கு நிழல் அளிப்பது போல தனது வாழ்வில் பல எளிய மனிதர்களுக்கு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கியிருக்கிறார் அந்த மனிதர். 

தனது பேரக்குழந்தைகளின் அக உலகில் தனது அன்பின் நீர்மையாலும் அன்பின் உயிர்மையாலும் நிறைகிறார் அந்த மனிதர். தனது எல்லா பேரக் குழந்தைகளுக்கும் மொழிகளும் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர்களுக்கு யோகத்தின் துவக்க நிலைகளை அறிமுகப்படுத்தி ஆன்ம மார்க்கத்தைக் காட்டுபவராகவும் விளங்குகிறார். 

அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் என உணர்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவருடனான நட்பை விலைமதிப்பில்லா அரிய ஒன்று என எண்ணுகின்றனர் அவரது நண்பர்கள். 

அவரது முதல் பேத்தி எழுத்தாளர் சுபஸ்ரீ எழுத்தில் அந்த மாமனிதர் வாழ்வை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த மாமனிதரை எண்ணி பெரும் உளஎழுச்சியும் உளநெகிழ்வும் கொள்கிறான். பாட்டனாருக்கும் பேத்திக்குமான ஒரு உரையாடல்  : வீட்டின் முன்னால் நிற்கும் வேம்ப மரத்தின் நிழலில் காகங்களும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் கூடி கிறீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. தவிட்டுக் குருவிகள் ’’சுப்ரி சுப்ரி’’ என அழைப்பது சுபஸ்ரீயை என தாத்தா சொல்ல அந்த சிறு குழந்தை தவிட்டுக் குருவிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறது.  எழுத்தாளர் சுபஸ்ரீயின் சொற்களில் இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் இடம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு கணமும் கோடானுகோடி மனிதர்களின் வாழ்வில் கோடானுகோடி உணர்ச்சிகள் அலைமோதி அதன் விளைவாய் கோடானுகோடி நிகழ்வுகள் நிகழ்கின்றன. அருநிகழ்வாக சுபஸ்ரீ சித்தரிக்கும் சம்பவம் போன்றும் நடக்கின்றன. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்கும் நிகழ்வு குறித்து எழுத்தாளர் சுபஸ்ரீ எழுதியிருக்கும் பகுதி மிகவும் உயிர்ப்பானது ; உணர்ச்சிகரமானது. 

தனது வலைப்பூவில் எழுத்தாளர் சுபஸ்ரீ தனது ஞான ஆசானான தனது பாட்டனார் குறித்து எழுதியிருக்கும் பதிவுகள் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழின் முக்கியமான நூலாக அது நிலை பெறும்.

https://manaodai.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE