Wednesday 25 October 2023

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - (நாள் 1)

 உண்ணாவிரத நாட்குறிப்புகள் (நாள் 1)

விஜயதசமி அன்று துவங்கும் செயல் முழுமையடையும் என்பது நமது நாட்டின் நம்பிக்கை. 2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்கினேன். 22 நாட்கள் நீடித்த அப்பயணம் நிறைவான அனுபவமாயிருந்தது. இப்போது மனதில் எண்ணினால் கூட பயணித்த பிரதேசங்களை நினைவில் மீட்டிட முடியும் என்னும்படியான உளப்பதிவுகள் அவை. லெபாக்‌ஷி, ஹம்பி, நாகபுரி, ஜெய்ப்பூர், தில்லி, மீரட் ஆகியவை மயிலாடுதுறைக்கு அண்டை ஊர்கள் என நினைக்கத்தக்க அளவில் அகநெருக்கம் கொண்டுள்ளன. மானுடப் பெருவெள்ளத்தின் பிரவாகத்தை அப்பயணத்தில் கண்டேன். உலகின் மகத்தான கனவுகள் காணப்பட்ட நாட்டில் அலைந்து திரிந்திருக்கிறோம் என்ற உணர்வே பேருவகையை அளிக்கிறது. உலகின் மகத்தான மனிதர்கள் வாழ்ந்த மண்ணில் பயணித்திருக்கிரோம் என்னும் பெரும்பேறு எளியவனான அடியேனுக்கு வாய்க்கப் பெற்றது. 

அந்த பயணத்தின் போது நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். ஒரு நாளைக்கு 250 கி.மீ பயணித்தாலும் உடல் வழக்கமாக உட்கொள்ளும் அளவு உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். வெயில், முகத்தில் மோதும் காற்று , மணிக்கணக்காக இரு சக்கர வாகனம் இயக்குதல் என பல அம்சங்கள் இருப்பினும் பசி பெரிதாக இல்லை என்பதை உணர்ந்தேன். புதிய நிலக்காட்சிகளையும் புதிய மனித முகங்களையும் காண்பதின் மகிழ்ச்சி உடலில் பசி இல்லாமல் செய்திருக்கக் கூடும். உடலும் மனமும் துல்லியமான ஒருங்கிணைப்புடன் அப்போது இருந்தன. தாபாக்களில் ஒரு ரொட்டியும் ஒரு ‘’தால் ஃபிரை’’யும் ஆர்டர் செய்வேன். ஒரு ரொட்டி என்பது இரண்டு துண்டுகள். பருப்புக் கூட்டு தொடுகறி. இரு எலுமிச்சைத் துண்டுகள் அளிப்பார்கள். பல நாட்கள் இது மட்டுமே உணவு. இரவில் வாழைப்பழங்களை மட்டும் உண்டு விட்டு பல நாட்கள் இருந்திருக்கிறேன். எங்கோ ஓரிடத்தில் ருசிக்காக பலவகை உணவுகள் ஆர்டர் செய்து உண்டதுண்டு. அதுவும் பயணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி என. பயணத்தில் உருவான உணவு குறித்த அவதானம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது. 

சமீபத்தில் சமணத் தலங்கள் சிலவற்றுக்கு செல்ல நேர்ந்தது. அங்கு தரிசித்த தீர்த்தங்கரர்களின் சிலைகள் அகத்தில் பல அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன. நிறைநிலை எய்திய அவர்களின் பாதங்களை என் சென்னியில் சூடிக் கொண்டிருந்தேன். நாடெங்கும் சமணத் துறவிகளை எனது பயணத்தின் போது கண்டதுண்டு. நடந்து சென்று கொண்டேயிருப்பார்கள். எந்த வாகனத்திலும் பயணிக்காத நெறி கொண்டவர்கள். எத்தனை தொலைவாயினும் நடந்தே செல்பவர்கள். அவர்களைக் காண நேர்கையில் அகம் பணிந்து வணங்குவேன். கரம் உயர்த்தி ஆசீர்வதித்து கடந்து செல்வார்கள்.

மகாத்மா காந்தி மீது ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் மகாத்மாவுக்கு சமண நெறிகள் மீதிருந்த தீராப்பற்றை அறிந்திருந்தேன். மகாத்மா பிறந்த பிரதேசமான குஜராத் வைணவமும் சமணமும் மிக மிக நெருக்கம் கொண்ட பகுதி. சமண தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதர் கீதாசாரியன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சகோதர முறை கொண்டவர். இருவரும் சம காலத்தவர்கள் ஆவர். ராம் ராம் ராம் என வாழ்நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தவர் மகாத்மா. தினமும் பகவத்கீதையை வாசித்தவர். மகாத்மா தனது வாழ்வில் உண்ணா நோன்பை ஒரு முக்கியமான பகுதியாக கொண்டிருந்தார். அவரது நீண்ட உண்ணா நோன்பு 21 நாட்கள் நீடித்தது. 

21 நாட்கள் நீடிக்கும் ஒரு உண்ணா விரதம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. உலகின் எல்லா சமயங்களும் உண்ணாவிரதத்தை வலியுறுத்துகின்றன. 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ள விரும்பினேன். அதற்கு முன் ஒரு நாள் கூட உண்ணாமல் இருந்ததில்லை. என்னால் சில மணி நேரங்கள் கூட பசி பொறுக்க முடியாது என்பது ஓர் உண்மை. இருப்பினும் அந்த ஆறு நாட்களும் நீர் மட்டும் அருந்தி உண்ணா நோன்பிருந்தேன். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததும் உணவு அருந்தினேன். அது ஒரு நல்லனுபவமாக இருந்தது. அதன் பின் நவராத்திரி விரதம் இருக்க முயன்றேன். ஒன்பது நாட்கள் நீர் மட்டும் அருந்தி விரதமிருக்க வேண்டும். ஐந்து நாட்கள் மட்டுமே விரதமிருக்க முடிந்தது. அதன் பின் எந்த விரதமும் இருக்கவில்லை. ஒரு நாள் கூட. 

என் அம்மா என்னிடம் ஒரு விஷயம் சொல்வார்கள். விரதமிருக்க விரும்பினால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் உணவருந்தாமல் இருக்குமாறு சொல்வார்கள். ஒரு வருடத்தில் 52 நாட்கள் விரதமிருந்ததாகும் ; மேலும் எல்லோருக்கும் உகந்ததாகவும் இருக்கும் என்று. இந்த 21 நாட்கள் விரதத்தை நிறைவு செய்த பின் வாரம் ஒருநாள் விரதம் இருக்க உள்ளேன்.