Thursday 26 October 2023

உண்ணாவிரத நாட்குறிப்புகள் - ( நாள் 3)

கட்டுமானத் தொழிலில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு உகந்த ஏதுவான செயல்முறையை கைக்கொண்டிருப்பார்கள். எங்கள் நிறுவனத்தின் இயங்குமுறை என்பது சில மாறா நியதிகளைக் கொண்டது. பணியின் தரம் ஆகச் சிறந்ததாக ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டும் என்பது எங்கள் முதன்மை நியதி.  பணியாளர்கள் எவராயினும் அவர்களுக்கு தின ஊதியம் அன்றன்றே வழங்கப்பட்டுவிட வேண்டும் என்பது எங்கள் இரண்டாம் நியதி.  பணியிடத்துக்கு மெட்டீரியல் சப்ளை செய்பவர்களுக்கு அவர்கள் சப்ளை செய்த உடனே பணியிடத்திலேயே பேமெண்ட் வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் மூன்றாம் நியதி. எனது தந்தை எனக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் வகுத்தளித்த நியதிகள் அவை. அவற்றை மந்திரமாகவே நாங்கள் கொள்கிறோம். 

இப்போது ஒரு வணிக வளாகத்தின் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது மூன்று வேளையாவது கட்டுமானப் பணியிடத்தில் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டிய நிலை. செங்கல் வரும் ; சிமெண்ட் வரும் ; ஜல்லி வரும். பொறுப்பாளனாகிய நான் அங்கிருந்து அவற்றின் அளவையும் எண்ணிக்கையையும் உறுதி செய்ய வேண்டும். பின்னர் மெட்டீரியலுக்கான பேமெண்ட் அளிக்க வேண்டும். 

எளிய செயல் எனத் தோற்றம் அளித்தாலும் நாள் முழுமையையும் கோரும் பணிகள் இவை. இங்கும் அங்கும் அலைந்து கொண்டேயிருப்பதாக இருக்கும். 

கட்டுமானப் பணி நிகழ்ந்து கொண்டிருக்கையில் எவ்வாறு விரதமிருப்பது என யோசித்தேன். விரதமிருக்க வேண்டும் என்று அகத்தில் உணர்வு தோன்றி நிலை பெற்றிருக்கும் தருணமே சிறப்பானது என்பதால் விரதத்தைத் துவக்கினேன். 

பணியிடத்தில் இருக்கும் போது சிறுது சோர்வு இருந்தது. எனினும் சற்று முயன்று சோர்வைக் கடந்தேன். 

இந்த முதல் மூன்று நாட்களின் அனுபவத்தை அடுத்த 18 நாட்களுக்கான அடித்தளமாகக் கொள்ள வேண்டும். உணவு ஞாபகத்தைக் கடந்து செல்வது என்பது நடந்திருக்கிறது. இனி மௌனத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பேசும் போது உடலின் ஆற்றல் அதிகம் செலவாவதை உணர முடிகிறது. 

இன்று எனது அறையில் அகல்விளக்கு ஒன்றில் ஒரு தீபம் ஏற்ற உள்ளேன். இந்திய மரபில் தீபம் என்பது இறைமையின் நுண் வடிவம். தீப ஒளியின் சான்னித்தியத்தில் இருப்பது என்பது நலம் பயப்பது.