Thursday, 12 October 2023

புத்தகக் கண்காட்சி

 ஊரில் ஒரு புத்தகக் கண்காட்சி அமைத்திருந்தார்கள். சென்று பார்த்து வந்தேன். எனக்கு புத்தகங்களைப் பார்ப்பது என்பது மிகவும் பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே புத்தகத்தின் மீதான வசீகரம் என்பது மிகப் பெரியதாக இருந்திருக்கிறது. எங்கு புத்தகம் இருந்தாலும் அதனை எடுத்து முன் அட்டை பின் அட்டையைப் பார்த்து உள்ளே இருக்கும் பக்கங்களை மேலோட்டமாக ஒரு புரட்டு புரட்டுவது என்பது ஆகி வந்த பழக்கம். அவ்வாறு சில மாதங்களுக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சியில் கண்ட புத்தகத்தின் பெயர் : Jerusalem : The Biography என்ற புத்தகம். அந்த புத்தகத்தின் முன் அட்டைப் படமும் பின்னட்டை வாசகங்களும் அதனை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கின. ஆனால் அப்போது வாங்கவில்லை. பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என இருந்து விட்டேன். சமீபத்தில் இணையத்தில் அந்த புத்தகம் குறித்து வாசிக்க நேர்ந்தது. அது ஒரு முக்கியமான புத்தகம் என அறிந்தேன். புத்தகங்கள் குறித்த ஆர்வத்துடன் இருப்பதும் புத்தகங்களுக்கு மனத்தில் எப்போதும் இடமளிப்பதுமே தொடர்ந்து புத்தகம் வாசிக்கவும் அறிவுச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதற்குமான சிறந்த வழி. ’’கல்வி கரையில ; கற்பவர் நாள் சில ‘’ என்பது அனுபவ உண்மை. என்னிடம் 1000 புத்தகங்கள் இருக்கக் கூடும். எனினும் அவற்றில் நான் இன்னும் வாசிக்காத சில புத்தகங்களும் இருக்கும். இருப்பினும் எங்கேனும் புத்தகக் கடைகளிலோ புத்தகக் கண்காட்சிகளிலோ புதிய புத்தகங்களைக் காணும் போது ஒரு புத்தார்வம் ஏற்படவே செய்கிறது. 

எந்த புத்தகக் கண்காட்சி ஆயினும் அதனை முதலில் வலம் வருவேன். முதல் சுற்றில் புத்தகங்களைக் காண மட்டும் செய்வேன். வாசித்த பல நூல்கள் கண்ணில் படும். அந்த நூல்களை வாசித்த காலமும் வாசித்த சூழ்நிலையும் நினைவுக்கு வரும். அந்த நினைவுகளில் மூழ்கிய வண்ணம் ஒரு சுற்று முடிப்பேன். பின்னர் நான் வாங்க நினைக்கும் புத்தகங்களை இரண்டாம் சுற்றில் ஒரு பாக்கெட் நோட்டில் குறித்துக் கொள்வேன். பின்னர் சில நாட்கள் கழித்து மூன்றாம் சுற்றில் நூல்களை வாங்குவேன். புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை செல்ல ஒரு வாய்ப்பு என்பது நல்ல விஷயம். சென்னை புத்தகக் கண்காட்சியில் கூட இந்த முறைதான் பின்பற்றுவேன். ஒரே தினத்தில் ஊர் திரும்ப வேண்டும் என்றால் கூட காலை முழுதும் புத்தகங்களைப் பார்வையிடுதல். மாலைக்கு மேல் நூல்களை வாங்குதல். 

புனைவுகள் அளவுக்கே அ-புனைவுகளை வாசிக்கும் வழக்கம் எனக்கு உண்டு. அதனால் எனது வாசிப்பு பலதரப்பட்டதாக இருக்கும். 

என் கவனத்தில் வந்த புத்தகங்களின் பட்டியலை இங்கே சொல்கிறேன். சில நாட்களில் அங்கே சென்று நூல்களை வாங்குவேன். அப்போது வாங்கிய நூல்களின் பட்டியலை அளிக்கிறேன். வாசித்த நூலைக் குறித்து அவசியம் எழுதவும் செய்வேன். 

தி.ஜானகிராமனின் அ-புனைவு நூல்கள் சிலவற்றைக் கண்டேன். அவரது சிறுகதை, குறுநாவல், நாவல்கள் பரிச்சயமானவை. அவரது சிறுகதைகள் முழுத் தொகுப்பாகவே வந்திருக்கிறது. அவரது சிறுகதைகளில் பாதி கதைகள் குறித்து நான் குறிப்புகள் வடிவில் எழுதியிருக்கிறேன். இருப்பினும் தி.ஜாவின் வாசித்த பிரதி என்றாலும் அதன் மீது ஓர் ஈர்ப்பும் வசீகரமும் இருக்கவே செய்கிறது. 

நேதாஜி குறித்த நூல் ஒன்றைக் கண்டேன். அதில் சில பக்கங்களை வாசித்தேன். அந்த நூலை வாங்க வேண்டும் என எண்ணம் கொண்டேன். 

’’நகரத்தார் கலைக் களஞ்சியம்’’ என ஒரு நூல். நாட்டுக்கோட்டை செட்டியார் குறித்த நூல். அதில் இருந்த விவரங்களும் தரவுகளும் ஆர்வமூட்டின. அதனை வாசிக்க ஆர்வம் உண்டானது. 

சதாசிவப் பண்டாரத்தார் , நீலகண்ட சாஸ்திரி ஆகியோரின் நூல்கள் இருந்தன. அவர்களின் நூல்களை வாசித்திருக்கிறேன். இருப்பினும் நான் வாசிக்காத சில நூல்கள் இருந்தன. 

குடவாயில் பாலசுப்ரமணியனின் நூல்கள் மிகப் பெரியவை. ஒவ்வொரு முறை காணும் போதும் இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என எண்ண வைப்பவை. 

ஓரிரு நாளில் சென்று நூல்களை வாங்கி வர வேண்டும்.