Thursday, 12 October 2023

லாக்கர் ( நகைச்சுவைக் கட்டுரை)

 அமைப்பாளரின் நண்பர் ஒருவருக்கு நெருக்கமான உறவினர் ஆடுதுறையில் வசிக்கிறார். அவர் வீட்டில் வசித்த அவரது உறவினர் ஒருவர் ஓராண்டுக்கு முன்னால் காலமாகி விட்டார். அவர் திருமணமாகாதவர். அவரது சேமிப்புக் கணக்குக்கு அமைப்பாளரின் நண்பரின் நெருக்கமான உறவினரை வாரிசாக நியமித்திருந்தார். அவர் காலமானதும் ஒரு வருடம் கழித்து நாமினிக்கு அவர் சேமிப்புக் கணக்கிலிருந்த பணம் கிடைத்தது. காலமானவர் தனது வங்கி லாக்கரின் சாவியையும் உறவினரிடமே ஒப்படைத்திருந்தார். உறவினர் காலமாகி ஒரு வருடத்துக்குப் பின் நிகழும் நீத்தார் சடங்குகள் முடிந்த பின் அவரது வங்கிக் கணக்கு விஷயங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என இருந்து விட்டனர். ஒரு வருடம் கழித்து வங்கிக்குச் சென்ற போது அக்கவுண்ட் ஹோல்டரின் மரணம் சம்பவித்து ஏன் ஒரு வருடம் கழித்து வருகிறீர்கள் என கேட்டு அந்த விஷயத்தை வழக்கம் போல் நிலுவையில் வைத்து விட்டார்கள். பின்னர் ஒரு சிறிய போராட்டத்துக்குப் பின் அந்த தொகையை நண்பரின் உறவினர் கைவசப்படுத்தியிருக்கிறார். அவரிடம் வங்கி ஊழியர்கள் மரணித்த வாடிக்கையாளரின் லாக்கருக்கு வாடகை கட்டுங்கள் எனக் கேட்டு அந்த தொகையை வங்கி லாக்கருக்காக வரவு வைத்து ரசீது கொடுத்திருக்கிறார்கள். லாக்கரில் உள்ள உடைமைகளை கேட்ட போது அதில் யாருமே நாமினி இல்லை ; அதனை வழங்குவதில் நிறைய நடைமுறைகள் உள்ளன என வங்கியில் கூறியிருக்கின்றனர். நண்பரின் உறவினருக்கு பலரும் பலவிதமான அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டு உறவினர் சோர்ந்து விட்டார். விஷயம் கடைசியாக அமைப்பாளர் கவனத்துக்கு வந்தது. அமைப்பாளர் நேற்று அவர் வீட்டுக்குச் சென்றார். 

அமைப்பாளரின் நண்பருக்கு சித்தப்பா அவர். எனவே அமைப்பாரும் அவரை சித்தப்பா என்றே அழைப்பார். 

நாற்காலியில் அமர்ந்தார் அழைப்பாளர். சித்தப்பா குடும்பமே அவர் எதிரில் அமர்ந்தது. சித்தப்பா, சித்தி, அவர்கள் மருமகள், கைக்குழந்தைகளான இரு பேரன்கள். கைக்குழந்தைகளான இரு பேரன்கள் அமைப்பாளருக்கு மற்றவர்கள் காட்டும் பிரியத்தைக் கண்டதும் இவர் குடும்பத்துக்கு முக்கியமான ஒருவர் என யூகித்து அமைப்பாளரிடம் மிகவும் சினேகம் பாராட்டத் துவங்கினர். இருவரும் ஓரிரு மழலைச் சொற்களையே உச்சரிக்கின்றனர் என்றாலும் தனக்குத் தெரிந்த சொற்களை அமைப்பாளரிடம் கூறி உரையாட அழைத்தனர்.  அமைப்பாளருக்கு அந்த இரு குழந்தைகளைக் கண்டதும் கண்ணதாசனின் ‘’சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’’ என்னும் பாடல் மனதில் ஓடத் துவங்கியது. 

‘’ஒரு ஒயிட் பேப்பர் கொடுங்க’’ அமைப்பாளர் கேட்டார். 

சித்தி ஒயிட் பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். 

ஒயிட் பேப்பரில் பென்சில் வைத்து ஸ்கேலால் மார்ஜின் இட்டு தான் அமைப்பாளர் எழுத ஆரம்பிப்பார். அமைப்பாளருக்கு அவருடைய சின்ன வயதில் ஒயிட் பேப்பரில் மார்ஜின் போட்டுதான் எழுத வேண்டும் என்று யாரோ சொல்லி விட்டார்கள். அதை இன்றளவும் எள்ளளவும் பிசகின்றி பின்பற்றி வருகிறார். அமைப்பாளரின் எழுது மேஜையில் எது இருக்கிறதோ இல்லையோ ஸ்கேலும் கூரான ஹெச் பி பென்சிலும் இருக்கும் ; இப்போது மடிக்கணினியில்தான் எழுதுகிறார் என்றாலும்.

‘’மார்ஜின் போட ஸ்கேலும் பென்சிலும் வேணும்’’ அமைப்பாளர் கேட்டார். 

சித்தி பென்சிலை தேடி எடுத்து விட்டார்கள். ஸ்கேல் அகப்படவில்லை. ஆனால் மார்ஜின் போட அவர்கள் வேறொரு வஸ்துவை கொண்டு வந்தார்கள். அது அவர்கள் வீட்டு பூஜை ஷெல்ஃபில் இருந்தது. 

அமைப்பாளர் அதைப் பார்த்தவுடன் ‘’ஆ ! இது ரூலர். உங்க அப்பாவுடையதா ?’’ என்று கேட்டார். 

சித்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘’ஆமாம் . அப்பாவுடையது. அவர் இதைத்தான் மார்ஜின் போட யூஸ் பண்ணுவார்.’’ என்று கூறினார். 

ரூலர் என்பது தேக்கு மரத்தாலானது. உருளை வடிவம் கொண்டது. வழ வழ என பளபளப்பாக இருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. 1980களில் கண்ணாடி ஸ்கேல் வந்த பின் ரூலர் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. 

சித்தியின் அப்பாவின் தொழில் ரியல் எஸ்டேட். கிரயப் பத்திரம் எழுதித் தருவது உண்டு என்பதால் அவர் வீடு எப்போதும் ஜே ஜே என இருக்கும் என சித்தி கூற அமைப்பாளர் கேட்டதுண்டு. அவர் பயன்படுத்திய ரூலரை அவருடைய ஞாபகமாக தனது வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கிறார் சித்தி. 

வெள்ளைக்காகிதத்தில் ரூலர் கொண்டு மார்ஜின் போட்டார் அமைப்பாளர். பேப்பரில் மார்ஜின் போட்டதுமே மனதில் அமைப்பாளருக்கு ஒரு நிதானம் கூடும். விஷயம் ஒரு ஒழுங்குக்குள் வருவதாக ஒரு நினைப்பு. 

பிள்ளையார் சுழி போட்டார். அதன் கீழே ‘’கணபதி துணை’’ என எழுதினார். வீட்டில் அனைவருக்குமே அதைக் கண்டதும் ஏதோ தெய்வ காரியம் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. 

’’இறந்தவருடைய அப்பா பெயர் என்ன? ‘’

சித்தப்பா பெயரைச் சொன்னார். அது தசரத குமாரர்களில் ஒருவர் பெயர். அப்பெயரை எழுதிக் கொண்டார். 

’’இறந்தவருடைய அம்மா பெயர் என்ன ?’’

சித்தப்பா சொல்ல அமைப்பாளர் அதனையும் எழுதிக் கொண்டார். பின்னர் இறந்தவர் பெயரையும் அவரது மற்ற விபரங்களையும் பேப்பரில் எழுதினார். எழுதி முடித்ததும் விஷயம் ஒரு வடிவத்துக்குள் இருப்பதாக அமைப்பாளருக்குத் தோன்றியது. 

அந்த விஷயத்துக்குள் சித்தப்பா குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் இருந்த ஒரு குடும்பப் பூசல் இருந்தது. அது குறித்து சித்தப்பா குடும்பத்தின் பேரக் குழந்தைகள் தவிர மற்ற மூவரும் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி தங்கள் அபிப்ராயங்களைக் கூறத் தொடங்கினர். 

அமைப்பாளர் ‘’ஸ்டாப் ! ஸ்டாப் ! ஸ்டாப்’’ எனக் கூறி அவர்கள் மூவரையும் மௌனமாக்கினார். 

‘’நான் சொல்றத கவனமா கேளுங்க. இப்ப ஃபேமிலி விஷயம் நாம டீல் பண்ற விஷயத்துக்குல்ல வராது. ஃபேமிலி விஷயத்துல நாம கவனம் செலுத்துனா பேங்க் விஷயத்துக்கு நாம கொடுக்க வேண்டிய கவனம் குறைஞ்சிடும். நாம முதல்ல பேங்க் ஐ டீல் பண்ணுவோம். அது முடிஞ்சப்பறம் மத்த விஷயத்தை சால்வ் பண்ணுவோம்’’ 

அமைப்பாளர் சொன்னதால் சரி என ஒத்துக் கொண்டார்கள். 

‘’இப்ப அந்த பேங்க் லாக்கர்ல என்ன இருக்குன்னு நமக்குத் தெரியாது. அதுல நகை இருக்கலாம். பணம் இருக்கலாம். எம்ப்டியா கூட இருக்கலாம். இந்த விஷயத்துல முதல் ஸ்டெப் அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கறது. எம்ப்டியா இருந்தா விஷயமே ஒன்னும் இல்ல. கொஞ்சமா நகையிருந்தாலும் யாரும் மெனக்கெட போறதில்லை. அதுனால அத முதல்ல தெரிஞ்சுக்கணும்’’

‘’பேங்க்ல லாக்கர்ல என்ன இருக்குன்னு சொல்ல மாட்டோம்னு சொல்றாங்களே’’ சித்தி சொன்னார். 

‘’நீங்க விஷயத்தை விளக்கி எழுத்துபூர்வமா கேட்டீங்களா?’’

‘’இல்லை . நேரா போய் பேசினோம்’’

‘’அந்த அதிகாரி கடமையைச் சரியா செய்றவரா இருந்தா உங்க கோரிக்கை என்னன்னு எழுத்துபூர்வமா கொடுங்கன்னு கேட்டிருக்கணும். அப்படி இல்லாம தர முடியாதுன்னு எப்படி சொல்லலாம். நாம முதல்ல நம்ம கோரிக்கையை பேங்க் மேனேஜருக்கு அனுப்புவோம்’’ 

சித்தி ‘’சரி’’ என்றார். 

’’வங்கி அதிகாரிகளையும் இரண்டு சாட்சிகளையும் வைத்துக் கொண்டு லாக்கரை ஓப்பன் பண்ணி அதுல உள்ள திங்க்ஸ் லிஸ்ட் ஐ முதல்ல கேட்போம். அப்புறம் அதை கிளைம் பண்ணுவோம். ஒருவேளை லாக்கர் எம்ப்டின்னா இந்த விஷயம் இதோட முடிஞ்சிடும். உள்ள ஏதாவது திங்ஸ் இருந்தா அத லிஸ்ட் பண்ணிக்குவோம். அதுவே விஷயத்தை ஒரு ஸ்டெப் ஃபார்வர்டு பண்ணிடும். அதுக்கு அப்புறம் தேவைன்னா கோர்ட்டுக்கு போய் நாம விஷயத்தை சால்வ் பண்ணிடலாம்’’

அமைப்பாளரின் திட்டமிடல் சரியாக திசையில் தான் இருக்கிறது என சித்தி குடும்பத்தினர் எண்ணினர். அமைப்பாளரும் எண்ணினார். 

‘’அப்புறம் ஒரு விஷயம். நாம மனுவை மேனேஜருக்கு மட்டும் அனுப்பக் கூடாது. மேனேஜர், சோனல் மேனேஜர், ஜெனரல் மேனேஜர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்னு ஐந்து பேருக்கு அனுப்பிடுவோம். விஷயம் சீக்கிரமா ஒரு முடிவுக்கு வரும்’’

அனைவரும் ஒத்துக் கொண்டார்கள். மனுவை இன்னொரு பேப்பரில் தெளிவாக அமைப்பாளர் எழுதி சித்தப்பாவிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டார். 

‘’மனுவை 5 காப்பி ஜெராக்ஸ் எடுக்கணும்’’

‘’இன்னைக்கு லோக்கல்ல முழு கடையடைப்பு’’

‘’சரி ! நான் ஊருக்குப் போய் ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிடறன்’’ 

அமைப்பாளர் மனுவை உறையில் இட்டு அதனை மேஜை மீது வைத்து விட்டு ஆசுவாசமானார். ஆசுவாசமான சில நிமிடங்களில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. 

’’சித்தி ! எனக்கு ஒரு விஷயம் தோணுது. இந்த விஷயத்துல நான் அவுட் சைடர் தான். நான் பேங்க்குக்கு போய் சம்பந்தப்பட்ட ஊழியரோட விஷயத்தைச் சொல்லி பேசி பாக்கறன்’’

சித்தப்பா குடும்பத்துக்கு அது நல்ல யோசனை என்று பட்டது. சம்மதித்தினர். 

அமைப்பாளர் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்றார். அங்கே இருந்த அதிகாரி அமைப்பாளருக்கு முன்னரே பரிச்சயம் ஆனவர். எவ்வாறெனில் அந்த ஊழியர் பணி புரிந்த வங்கிக் கிளையின் இன்னொரு ஊழியர் மீது பொது காரணம் ஒன்றுக்காக அமைப்பாளர் ஒரு புகார் கொடுத்து அந்த ஊழியர் அதிலிருந்து மீள படாத பாடு பட்டது அவருக்குத் தெரியும். 

‘’சார் நீங்களா?’’

‘’நானேதான். ஸ்மால் வேர்ல்டு பாருங்க’’ அமைப்பாளர் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னார். 

‘’நாங்க என்ன ரூல்ஸ்னு பாக்கறோம் சார்’’

‘’அப்ப இந்த விஷயம் ஆரம்பிச்சு இத்தனை நாளா இன்னும் ரூல்ஸ் என்ன புரொசிஜர் என்னன்னு பாக்கலயா?’’

’’ஒரே வேலை சார்’’

‘’அவங்க டிமாண்ட் ஐ மனுவா அனுப்பலாமான்னு கேட்டாங்க. நான் தான் ஒரு தடவை நேரா பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தன். அவங்க பேங்க் ரூல்ஸ்க்கு முழுமையா கட்டுப்படுவாங்க. என்ன புரொசிஜரோ அத ஃபாலோ பண்ணுவாங்க. இந்த விஷயத்துல சீக்கிரமா ஒரு முடிவு எடுங்க’’

அமைப்பாளர் சித்தி வீட்டுக்குத் திரும்பி வந்தார். மதிய உணவு தயாராக இருந்தது. அருந்தி விட்டு மனுவை 5 பேருக்கு அனுப்ப ஊருக்குக் கிளம்பினார் அமைப்பாளர்.