Sunday 29 October 2023

சுபாவம்

 எங்கள் பகுதியில் சற்று அதிக அளவில் வீதிநாய்கள் உள்ளன. ஆங்காங்கே வீட்டில் இருப்பவர்கள் அதற்கு உணவு தருவார்கள். அவை எப்போதும் ஒன்றுடன் ஒன்று பூசலிட்டுக் கொண்டிருக்கும். ஒன்றைப் பார்த்தால் இன்னொன்று ஓயாமல் குரைக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் மொத்த பகுதியும் அவற்றின் ஆளுகைக்குக் கீழ் வரும். எல்லைத் தகராறுகள் ஏற்படும். ஆக்கிரமிப்புகள் நிகழும். உறக்கம் கலைந்த யாராவது ஒருவர் வீதிக்கு வந்து அவற்றைத் துரத்தி விட்டால் பின்னர் குரைப்புகள் ஓயும். 

எங்கள் பகுதி வீதிநாய்களில் பல எனது நண்பர்கள். அவற்றை என்னால் அடையாளம் சொல்ல முடியும். 

சமீப நாட்களில் எங்கள் பகுதியில் சில பூனைகள் தென்பட்டன. அங்கும் இங்கும் கண்ணில் பட்டன. 

நேற்று ஒரு காட்சியைப் பார்த்தேன். ஒரு பூனை. அதனை ஒரு நாய் கண்டுவிட்டது. ஒரு உறுமலை எழுப்பியது. குரைப்பு அல்ல ; உறுமல். அந்த உறுமல் கேட்டவுடன் மற்ற நாய்கள் அங்கே வந்து விட்டன. பத்து நாய்களுக்கு மேல். பத்து நாய்களின் உடல் மொழியைத் தொலைவில் இருந்து கண்ட பக்கத்து தெரு நாய்களும் இணைந்து கொண்டன. இருபது நாய்கள். இந்த இருபது நாய்களும் நின்ற விதத்தில் அவை யாரைத் தலைவனாக ஏற்கின்றன என பார்வைக்கே தெரிந்தது. சில தளபதி நாய்கள் உருவாயின. வீரர் நாய்கள் உருவாயின. அவை அமைத்திருந்தது ஒரு வேட்டை வியூகம். 

முன்னே ஒரு நாய். அதன் பின் நான்கு நாய்கள். அதன் பின் பதினைந்து நாய்கள். அவை வியூகம் அமைத்திருந்த முறை எப்படியெனின் அந்த பூனை இந்த நாய்களின் வியூகத்துக்குள் சிக்கிட வேண்டும் என்பது போல. 

அந்த பூனை இருந்தது ஒரு வீட்டின் முன்பக்கம் . அந்த வீட்டின் கார் பார்க்கிங் கதவு திறந்திருந்தது. திறந்த கதவின் வழியாகத்தான் நாய்கள் வியூகம் வகுத்தன. பூனைக்கு என்ன நடந்திருக்கிறது என்பது தெரிந்து விட்டது. இருபது நாய்கள் சூழ்ந்திருக்கின்றன. ஆபத்தை முழுமையாகப் புரிந்து கொண்டது. மிதமான வேகத்தில் அங்கே நின்றிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றின் என்ஜின் பகுதிக்குக் கீழே சென்று மறைந்தது. ஒரு நாய் முன்னே வந்தது. வேறு வழியின்றி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து மறைந்திருப்பதாய் நாய்கள் நினைத்தன. ஒரு நாய் மட்டும் முன்னே வருவதைக் கண்டதும் பூனை மறைந்திருந்த நேரத்தில் தான் அவதானித்திருந்த தப்பிக்கும் வழி ஒன்றை நோக்கி மிக அதிக வேகத்தில் ஓட்டம் எடுத்தது. முன்னே சென்ற நாய் துரத்தியது. இருபது நாய்கள் திரண்டு சூழ்ந்திருக்கும் போது அவற்றின் வேகத்தைக் குறைத்து காக்க வைத்தது பூனையின் தந்திரம். முதல் நாய் முன்னே வந்த போதே அனைத்து நாய்களுக்கும் சூழ்ந்து கொள்ள சமிக்ஞை கொடுத்திருந்தால் அனைத்தும் பூனையைச் சுற்றி வளைத்திருக்கும். ஓட்டம் எடுத்த பூனை நாலரை இஞ்ச் சுவர் ஒன்றில் தாவி ஏறி வேகமாக ஓடியது. முக்கால் அடி சுவராக இருந்தால் நாயும் ஏறியிருக்கும். நாலரை இன்ச் சுவர் சிறியது என்பதால் நாய்க்கு அது வசதிப்படாது. முன்னே சென்ற நாய் நின்று விட்டது. அது நின்ற பின் பின்னால் இருந்த நாய்களில் இரண்டு வேகமாக ஓடிப் போய் பார்த்தது. அதற்குள் பூனை எங்கோ போய்விட்டது. வேட்டையின் உடல்மொழியைத் துறந்து நாய்கள் வழக்கம் போல் ஆகின. தலைமை நாய் வேட்டைப் பிரதேசத்தில் இருந்த தூண் ஒன்றில் காலைத் தூக்கி சிறுநீர் கழித்து இது தன் பிரதேசம் என நிறுவியது. 

அனைத்தும் வீதிக்கு வந்தன. 

அந்த வீட்டு பெண்மணி வாசலுக்கு வந்தார். தன் வீட்டின் முன் அமைதியாக குரைத்துக் கொள்ளாமல் இருபது நாய்கள் நிற்பது அவருக்கு வியப்பை அளித்தது. கார் பார்க்கிங் கதவை சாத்தி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். 

வேட்டைக்கான வாய்ப்பு கிட்டாத போது அவை பூசலிட்டுக் கொள்கின்றன. வேட்டை வாய்ப்பு உருவாகும் போது அவற்றின் ஆதி சுபாவத்தை அடைகின்றன. 

இந்த மொத்த சம்பவமும் ஒரு நிமிடத்தில் நடந்திருக்கும். இதைப் பார்த்த நான் சுபாவம் குறித்து யோசித்தேன்.