சமீபத்தில் இரு நூல்களை வித்யாசமான இரண்டு சூழ்நிலைகளில் வாசித்தேன்.
முதல் புத்தகம் வி.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் தீர்ப்பும்’’ என்ற நூல். ஊரிலிருந்து பண்ணுருட்டி வரை செல்ல வேண்டியிருந்தது. மதியம் பேருந்தில் செல்வதாக திட்டம். பேருந்து நிலையத்திற்கு புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தான் தபால் மூலம் அந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. பின்னட்டை வாசகத்தை வாசித்தேன். நடுவே ஒரு பக்கத்தை வாசித்தேன். அந்த நூலைக் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பேருந்து நிலையத்துக்குக் கையிலேயே கொண்டு சென்றேன். பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் ஏறிய பேருந்துக்கு முன்னால் ஒரு பேருந்து கிளம்ப யத்தனித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் அதில் எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. எனவே அமர இடம் இருந்த அடுத்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். அமர்ந்த உடன் வாசிக்க ஆரம்பித்தேன். முதல் வரியிலிருந்தே நூலில் ஆழ்ந்து விட்டேன். முதல் வண்டி கிளம்பிப் போனது ; நான் இருந்த வண்டி மேலும் பயணிகளை ஏற்றிக் கொண்டது ; வண்டி ஊர் எல்லையைக் கடந்தது என எதுவுமே நினைவில் இல்லை . வாசித்துக் கொண்டேயிருந்தேன். நடத்துநர் டிக்கெட் என நினைவுபடுத்தினார். டிக்கெட் வாங்கிக் கொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். சிதம்பரம் சென்று சேர்வதற்குள் அந்நூலின் மூன்றில் ஒரு பகுதியை வாசித்திருந்தேன். சிதம்பரத்தில் பண்ணுருட்டி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறினேன். நடத்துநர் கீழே நின்றிருந்தார். அவரிடம் சென்று டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டேன். வண்டி கிளம்ப 20 நிமிடம் ஆகும் என்றார். பரவாயில்லை என்று சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டேன். ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டு வாசிப்பைத் தொடர்ந்தேன். பேருந்தில் என்ன நடந்தது என்பது என் கவனத்தில் இல்லை. வாசித்துக் கொண்டேயிருந்தேன். நூலுக்குள் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. வஞ்சம், பொறாமை, துரோகம், கண்ணீர் , கொலை, ரத்தம் என பல பல நிகழ்வுகள். நூலை முழுமையாக வாசித்து முடித்த போது பண்ணுருட்டி இன்னும் 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது என மைல்கல் காட்டியது. அதாவது நூறு கிலோ மீட்டர் பயண தூரத்தில் நூலை வாசித்திருக்கிறேன். பின்னர் நண்பர்களிடம் அந்த நூலின் நிகழ்வுகளை ஒரு கதையெனச் சொன்னேன். குறைந்தது 15 பேரிடம் சொல்லியிருப்பேன். பேருந்து பயணத்தின் போது ஜன்னலின் வழியே வெளிக்காற்று முகத்தில் மோதிய நினைவைத் தவிர வெளிக்காட்சி எதையும் கண்ட ஞாபகம் கூட இல்லை. முழுவதும் நூலில் மூழ்கியிருந்தேன்.
சென்ற வாரம் சென்னை செல்ல வேண்டியிருந்தது. நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். அங்கே ஒரு நண்பர் எனக்கு ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’ நூலை வாசிப்பதற்காக அளித்தார். அன்று இரவு ரயிலில் ஊர் திரும்ப ரயில் நிலையம் வந்தோம். ரயில் நாங்கள் சென்று பதினைந்து நிமிடம் கழித்து வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டோம். அமர இடம் கிடைத்தது. ரயில் புறப்பட 30 நிமிடம் இருந்தது. அப்போதே அந்த நூலை வாசிக்கத் தொடங்கினேன். ரயில் புறப்பட்டது தெரிந்தது. ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் வண்டி ரொம்ப நேரம் நிற்பதாகத் தோன்றியது. நண்பரிடம் ‘’செங்கல்பட்டு நிலையமா?’’ என்று கேட்டேன். நண்பர் தாம்பரம் என்றார். தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருந்தேன். வண்டி சீர்காழியை அடைந்த போது நூலை முழுமையாக வாசித்திருந்தேன். ஆறு மணி நேரப் பயணம். ஒரு முழு நூலின் வாசிப்பும் நிறைவு பெற்றிருந்தது.
வாசிக்கும் நூலுடன் ஒத்திசைவது என்பது நூல் வாசிப்பில் மிகவும் முக்கியமானது. நம்மால் எளிதில் ஒத்திசையக்கூடிய நூல்களைக் கண்டடைந்து தொடர்ச்சியாக வாசிப்பது என்பதும் வாசிப்பில் முக்கியமானது.