Sunday 12 November 2023

தீபாவளி தரிசனம்

இன்று சிதம்பரத்தை சுற்றியுள்ள ஐந்து தலங்களில் சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 

எனது நண்பர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயிலில் சிதம்பரம் வந்து விடுவதாகக் கூறினார். நானும் அவரும் சிதம்பரத்தில் சந்திப்பதாகத் திட்டம். நான் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். சிதம்பரம் ரயில் நிலையத்தில் அவர் ரயில் வருவதற்கு சில நிமிடம் முன்னதாக சென்று சேர்ந்தேன். 

ஷேத்ராடனம் செய்யும் ஒரு மலையாளக் குடும்பம் அங்கே இருந்தது. மூத்த குடிமக்களான ஒரு தம்பதி அந்த மலையாளக் குடும்பத்தின் கைக்குழந்தையிடம் மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்த அனைவருமே அவர்கள் மலையாளி என்றே நினைத்தோம். அவர்கள் இருவரும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் பூர்வீகமும் திருவெண்காடு. துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்ய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். ஐப்பசி மாதம் முடிய இருக்கும் நிலையில் இன்னும் காவிரி நீர் கடைசி ரெகுலேட்டரை வந்தடையவில்லை. எனவே திருச்சி அம்மா மண்டபத்துக்கு காவிரி ஸ்நானத்துக்காகச் செல்கிறார்கள். நண்பர் ரயிலில் வந்திறங்க மூத்த தம்பதி வண்டியில் ஏற ரயில் புறப்பட்டது. நாங்கள் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினோம். 

முதலில் சென்றது திருமயிலாடி என்ற தலம். முருகன் யோகத் திருக்கோலத்தில் வடக்கு நோக்கி நின்றிருக்கும் தலம். சிறு ஆலயம். எனினும் மிகவும் தொன்மையானது. ஒரு காலத்தில் கௌமார மரபைச் சேர்ந்த பலருக்கு அந்த ஆலயம் ஒரு மையமாக அமைந்திருக்கும் என்று தோன்றியது. சப்தமாதர் சன்னிதி அங்கே இருந்தது. ஆலயத்தில் ஒரு பெரிய வன்னிமரம் இருந்தது. வில்வ மரம் அங்கே ஸ்தல விருட்சம். ஆலயத்தில் இருந்த பணியாளரிடம் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஆலயத்துக்கும் ஊருக்கும் மரக்கன்றுகள் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். தனது அலைபேசி எண்ணை அளித்தார். கந்த சஷ்டி வரை ஆலயத்தில் பல விதமான பூஜைகள் இருக்கும் ; எனவே சஷ்டிக்குப் பின் இது குறித்து பேசுவோம் என்றார். மிக ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர் இருந்தது நம்பிக்கை அளித்தது. 

அங்கிருந்து சிதம்பரம் அருகில் உள்ள சிவபுரி என்னும் தலத்துக்குச் சென்றோம். சிற்றாலயம். அதே ஊரில் திருநெல்வாயில் என்ற ஆலயம் இருந்தது. அங்கே பைரவ வழிபாடு விசேஷமானது. இரண்டு ஆலயங்களிலும் சேவித்தோம். பின்னர் அருகில் இருக்கும் திருவேட்களம் என்னும் சிவ ஆலயத்துக்குச் சென்றோம். அங்கிருந்து தில்லை காளியம்மன் ஆலயம். நேரம் மாலை 6 ஆகியிருந்தது. 

நண்பரை சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் ஏற்றி விட்டு விட்டு நான் ஊர் திரும்பினேன்.