இங்கே எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரை பத்தாண்டு காலமாக நான் அறிவேன். அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் அவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். ஐந்து ஆண்டுகள் அங்கே இருந்தார். பின்னர் இங்கு வந்து ஒரு வெல்டிங் பட்டறை ஆரம்பித்தார். பட்டறை நல்ல விதமாகப் போகிறது. அவ்வப்போது அவரை சந்திப்பேன். இன்று அவரது பட்டறைக்குப் போயிருந்தேன். அவர் ‘’காவிரி போற்றுதும்’’ ஆற்றும் பணிகள் குறித்து அறிவார். இன்று என்னிடம் நன்னிலம் அருகில் தனக்கு 3 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று கூறினார். அவரிடம் விவசாய நிலம் இருப்பது எனக்கு இது நாள் வரை தெரியாது ; அதாவது நிலத்தை அவரது மூத்த சகோதரர்தான் இத்தனை நாள் குத்தகைக்கு விவசாய்ம் செய்திருக்கிறார். ஆதலால் இது குறித்த பேச்சு எழுந்ததில்லை. இன்று அவர் என்னிடம் சொன்னதும் அந்த 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுமாறு சொன்னேன்.
‘’அண்ணன் ! நாம எல்லாருமே வேலை செய்றது சம்பாத்தியம் வேணும்ங்கறதுக்காகத் தான். பட்டறைல எவ்வளவு கடுமையா எத்தனை நாள் உழைச்சிருப்பீங்க. இந்த உழைப்புல 10 சதவீதம் தேக்குக்குக் கொடுத்தா போதும். நாமல்லாம் காலைல வேலை செய்யற இடத்துக்கு வந்தா இன்னைக்கு எத்தனை வேலையை செஞ்சு முடிச்சோம்னு நினைச்சு சந்தோஷப்படற ஆளுங்க அண்ணன். சிருஷ்டி ஸ்திதி சம்ஸ்காரம்னு நம்ம மரபு சொல்லுது. இரும்புத் தொழில்ல நீங்க அடைஞ்ச அனுபவம் இது தான் அண்ணன். நாளைக்கே உங்க நிலத்தைப் போய் பார்ப்போம். வயலை மேடாக்கி தேக்கு நடுவோம். வெல்டிங் பட்டறை வேலைக்கான மெனக்கெடுல 10 பர்செண்ட் தான் தேக்கு வயல்ல வேலை. தண்ணீர் ஊத்தறதும், கவாத்து செய்யறது மட்டும் தான் வேலை. நமக்குத் தேவை அந்த தாவரத்தோட 10 அடி உயரத் தண்டுதான். உங்களுக்கு நான் கூட இருந்து கைட் பண்றன். எண்ணி 15 வருஷம் அண்ணன். உங்க கைக்கு பத்து கோடி ரூபாய் வந்து சேரும். இது நிச்சயம்’’ என்றேன்.
அண்ணன் கண் கலங்கி விட்டார்.
’’நாளைக்கு காலைல 9.30க்கு நான் பட்டறைக்கு வந்துடறன். நாம ரெண்டு பேரும் போய் நாளைக்கு வயல பாத்துட்டு வர்ரோம்’’ என்றேன்.
நண்பர் ஆமோதித்தார்.
‘’காவிரி போற்றுதும்’’ என்ன செய்திருக்கிறது என்ற கேள்வி எனக்கு அவ்வப்போது எழும். நண்பர் உளம் பொங்கி எழுந்த கண்ணீரே அதற்கான பதில் என அப்போது எண்ணிக்கொண்டேன்.