அன்புள்ள நண்பனுக்கு,
உனது குழந்தை பிறந்த போது ‘’இன்று நான் ஒரு தேவதையின் வருகையால் ஆசியளிக்கப்பட்டிருக்கிறேன்’’ என்று எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி நினைவில் பசுமையாக இருக்கிறது. குழந்தை பிறந்த சில நாட்களில் உனது வீட்டுக்கு வந்திருந்தேன். சிறு கண்களுடன் மென்சிறு பாதங்களுடன் அதில் இருக்கும் இன்னும் சிறிய மென்மையான விரல்களுடன் அன்றலர்ந்த தாமரை போல குழந்தையைக் கண்ணுற்ற கணத்தை இப்போதும் நினைவில் மீட்டிட முடிகிறது. சில நாட்களுக்கு முன் , உனது வீட்டுக்கு வந்திருந்த போது குழந்தை பள்ளிக்குச் சென்றிருக்கும் விபரத்தைக் கூறினாய். அப்போதிலிருந்து குழந்தையைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன். குழந்தைக்குப் பரிசாக ஏதேனும் அளிக்க வேண்டும் என நினைத்தேன். என் மனதில் பரிசுப்பொருள் என்றால் அது புத்தகம் என்பதாக பதிவாகியிருக்கிறது. எனக்கு புத்தகத்துடன் அதிக பரிச்சயம் என்பது காரணமாக இருக்கலாம். பள்ளி செல்லும் ஐந்து வயது குழந்தைக்கு என்ன புத்தகத்தைப் பரிசளிக்கலாம் என இரண்டு நாட்களாக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது தான் குழந்தை அட்சரங்களுக்குப் பழகியிருக்கும். எனவே சிறு சிறு வார்த்தைகள் கொண்ட படக்கதைகள் குழந்தைக்கு ஆர்வமளிக்கக்கூடும் என எண்ணினேன். ஐந்து வயதுக் குழந்தை என்பதால் வண்ணம் தீட்டும் ஓவிய நூல்கள் குழந்தைக்கு சந்தோஷம் தரும் என்பதால் அவற்றையும் தேர்ந்தெடுத்தேன்.
குகை ஓவியங்கள் சிலவற்றை நான் கண்டிருக்கிறேன். இன்றிலிருந்து 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. உலகில் எங்குமே எந்த மொழியும் உருவாகாமல் இருந்த காலகட்டத்தில் குகையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள் வரைந்தவை. ஓவியம் தீட்டுவது மனிதனுக்கு இயல்பாக வருவது. எல்லா குழந்தைகளும் இயல்பாக ஓவியம் வரைய விரும்புகின்றன. உண்மையில் அட்சரங்களை எழுதுவதை விட ஓவியம் வரைவது குழந்தைகளுக்கு இயல்பானது. பெற்றோர் தொடர்ச்சியாக ஓவியப் பயிற்சி புத்தகங்களை அளிக்க வேண்டும். தினமும் 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் ஓவியம் வரையச் சொல்ல வேண்டும். குழந்தை வரைந்த ஓவியங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். ஓவியம் ஒரு நுண்கலை. அந்த நுண்கலையின் அறிமுகமும் பரிச்சயமும் குழந்தைக்கு அளிக்கும் திறப்புகள் பெரியவை.
மகாத்மா காந்தி தனது இரு கைகளாலும் எழுதும் பழக்கம் கொண்டவர். சற்று முயன்றால் அட்சரம் எழுதத் துவங்கும் எல்லா குழந்தைகளுக்குமே இரு கைகளால் எழுதும் ஓவியம் வரையும் பயிற்சியைத் தர முடியும்.
இப்போது நீ வசிப்பது மாநகரத்தில் என்பதால் ஆகச் சாத்தியமான மொழிகளை குழந்தைக்கு கற்பிக்க வேண்டும். தாய்மொழியில் பேச சரளமாக எழுத ஊக்குவிக்க வேண்டும். குழந்தைக்கு சமஸ்கிருதம் பயிற்றுவிக்க ஏற்பாடுகளைச் செய். கோடானுகோடி மக்களை பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் சமஸ்கிருதம் இணைத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய இதிகாசம் மகாபாரதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் எல்லா மொழியில் இருக்கும் பெரும் படைப்புகளின் துவக்கப் புள்ளியாக சமஸ்கிருதம் இருந்திருக்கிறது. ஐரோப்பாவின் மொழி ஒன்றையும் குழந்தைக்குப் பயிற்றுவிக்கலாம். ஃபிரெஞ்சு மொழி எனது தேர்வு.
குழந்தை பேட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாட தினமும் நேரம் ஒதுக்கும் வகையில் நீ உதவி செய். யோகாசனங்களை நமது நாடு தான் உலகுக்கு அளித்தது. தினமும் 30 நிமிடம் யோகாசனங்கள் செய்யும் வண்ணமான சூழ்நிலையை குழந்தைக்கு உருவாக்கிக் கொடு.
மூன்று மொழிகள், ஓவியம் இசை போன்ற நுண்கலைகளின் அறிமுகம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட குழந்தையின் வாழ்க்கை என்பது ஆகச் சிறந்ததாக அமையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
சிறு வயதில் குழந்தைகளின் ஆர்வமும் விருப்பங்களும் பயிற்சிகளும் எவ்விதம் இருக்கிறதோ அதே விதமாகவே பெரியவர்கள் ஆனதும் அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதே உண்மை. நமது நாட்டில் குழந்தைகளை அதனால் தான் எளிய சூழலில் வாழ்வை அமைத்துக் கொள்ள பயிற்றுவித்தார்கள். தசரத குமாரர்கள் வசிட்டரின் குருநிலையில் பயின்றவர்கள். பாண்டவர்கள் கிருபரிடமும் துரோணரிடமும் பயின்றவர்கள். ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்தில் ஆநிரை மேய்த்து வாழ்ந்தவன். குழந்தைப் பருவத்தில் அவர்கள் பெற்ற பயிற்சியே அவர்களின் செயற்கரிய செயல்களுக்குக் காரணமாக அமைந்தது. குழந்தைகளுக்கு நாம் பல விஷயங்களை அறிமுகம் செய்ய வேண்டும். எந்த விஷயமும் ‘’அறிமுகம் பரிச்சயம் தேர்ச்சி’’ என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. நாம் பத்து விஷயங்களை அறிமுகப்படுத்தினால் அவர்கள் ஆறு விஷயங்களில் பரிச்சயமாகி மூன்று விஷயங்களில் தேர்ச்சி அடைவார்கள். சத்ரபதி சிவாஜியின் உருவாக்கத்தில் அவருடைய அன்னைக்கு தீவிரமான பங்கு இருந்தது. மகாத்மா காந்தியின் உருவாக்கத்தில் அவரது அன்னையின் பங்கு மகத்தானது.
உலகிலேயே நம் நாட்டில் தான் குழந்தைகளை தெய்வ ரூபங்களாகக் காணும் வழக்கம் இருக்கிறது. உலகில் பிறக்கும் எந்த குழந்தையுமே நசிகேதஸ் ஆக துருவன் ஆக அர்ஜுனனாக ஸ்ரீகிருஷ்ணனாக சுகப் பிரம்மமாக ஆகும் திறன் கொண்டது. ஒவ்வொரு குழந்தையும் தெய்வ நிலை எய்தும் நிலைக்கு உகந்த சூழலை உண்டாக்க வேண்டியது உலகத்தார் அனைவரின் கடமை.
குழந்தையின் அகம் கடல் போல விரிந்திருக்கவும் உலகம் எனப் பரந்திருக்கவும் உதவுவது நம் கடமை. நம் அனைவரின் கடமை.
அன்புடன்,
பிரபு