அமைப்பாளருக்கு இரண்டு நாட்களாக பல் கூச்சம் இருந்தது. சரியாகச் சொன்னால் நான்கு நாட்கள். எனினும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் உணரத் தொடங்கினார். இரண்டு நாட்களாக மிகத் தீவிரமான அலைச்சல். இயல்பாகவே அலையக் கூடிய ராசி உள்ளவர் என்றாலும் இந்த இரண்டு நாட்களும் மிகத் தீவிரம். எந்த சந்திப்பையும் தவற விட முடியாது. எந்த பணியையும் ஒத்தி வைக்க முடியாது. இங்கிருந்து அங்கே ; அங்கிருந்து இங்கே என காலை முதல் இரவு வரை இரண்டு நாட்களாக அலைந்து கொண்டேயிருந்தார். நேற்று தான் பற்கள் தீவிரமாகக் கூச்சம் கொண்டிருப்பதை தீவிரமாக உணர்ந்தார். உடல் என்பதே ஈறுகளும் பற்களும் தான் என்னும் விதமாக உடலை உணர்ந்து கொண்டிருந்தார். இன்று காலை 3 சந்திப்புகள். ஊர் திரும்புகையில் மணி மதியம் 1.30. ஒரு பல் மருத்துவமனையினுள் நுழைந்தார்.
செவிலிப் பெண் அமைப்பாளரின் பெயரையும் ஊரையும் அலைபேசி எண்ணையும் எழுதிக் கொண்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
மருத்துவர் பற்கள் மருத்துவ நாற்காலியில் அமரச் சொன்னார். அமைப்பாளருக்கு எப்போதும் அந்த நாற்காலியைக் காண்கையில் அது புதிர்த்தன்மை கொண்டதாக இருப்பதாகத் தோன்றும். அதில் அமர்ந்து கொண்டார். ஓஷோ ஒரு முறை பற்களுக்காக ஒரு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. காலை மாலை என ஒரு வார கால சிகிச்சை. அந்த 14 சிகிச்சை நேரத்தில் அவர் அவருக்கு மிகவும் பிடித்தமான 168 புத்தகங்களைக் குறித்து அந்த அறையில் இருந்த சில சீடர்களிடம் உரையாடினார். அது ‘’ Books I have loved'' என்ற நூலாகத் தொகுக்கப்பட்டது. அமைப்பாளருக்கு அது மிகவும்பிடித்த நூல். அந்த நூலின் ஞாபகம் அமைப்பாளருக்கு வந்தது.
மருத்துவர் அமைப்பாளரிடம் என்ன செய்கிறது என்று கேட்டார்.
‘’பற்களும் ஈறுகளும் மிகவும் கூசுகிறது டாக்டர்’’
‘’வலி இருக்கா?’’
‘’அதை வலி என்று சொல்ல முடியாது . பல் வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். இது ஒரு விதமான தீவிரமான கூச்சம்’’
மருத்துவர் ஒரு லென்ஸை வைத்து பற்களை சோதித்தார். மருத்துவர் ‘’ஆ’’ சொல்லுங்க என்றார்.
அமைப்பாளர் ‘’ஆ’’ என வாயைத் திறந்தார்.
மருத்துவர் ‘’ஈ’’ சொல்லுங்க என்றார்.
அமைப்பாளர் ‘’ஈ’’ என்று வாயைக் காட்டினார்.
இரண்டு வயதில் அம்மா இப்படித்தான் அட்சரம் சொல்லித் தந்திருப்பார் இல்லையா என அமைப்பாளர் யோசித்தார். பின்னர் பள்ளி ஆசிரியையும் சொல்லித் தந்திருப்பார். இப்போது ஒரு மருத்துவர் சொல்லித் தருகிறார் என அமைப்பாளர் எண்ணினார்.
’’உங்கள் பற்களில் ஏதும் பிரச்சனை இல்லையே ‘’ என்றார் மருத்துவர்.
‘’டாக்டர் ! கூச்சம் தாங்க முடியவில்லை’’
‘’நான் ஒரு டூத் பேஸ்டும் ஜெல்லும் தரேன். அத 3 நாள் யூஸ் பண்ணுங்க. சரியாயிடும். நீங்க பிரியப்பட்டா உங்க பற்களையும் ஈறுகளையும் கிளீன் பண்ணிக்கலாம்’’
‘’டாக்டர் ! என்கிட்ட இப்போ 1000 ரூபாய் பணம் இருக்கு. அது போதும்ல’’
‘’ஓ.கே நோ இஸ்யூஸ்’’
அமைப்பாளருக்கு அப்பாடா என்றிருந்தது.
பற்களைத் தூய்மைப்படுத்த மருத்துவ உபகரணங்களை ஏற்பாடு செய்தார் மருத்துவர்.
‘’உங்களுக்கு பிளட் பிரஷர் இருக்கா?’’
’’நார்மல் டாக்டர்’’
நீங்க வெஜிடேரியனா ? நான் வெஜிட்டேரியனா?’’
‘’வெஜிட்டேரியன்’’
‘’ஸ்மோக் பண்ணுவீங்களா?’’
அமைப்பாளர் வேகமாக தலையை அசைத்து இல்லை இல்லை என்றார்.
‘’ஆல்கஹால்?’’
அமைப்பாளர் ‘’நோ நோ ‘’ என்றார்.
ஒரு சிறு அமைதி ஏற்பட்டது. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி ‘’டாக்டர் நான் ஒரு டீ டோடலர்’’ என்று மருத்துவரிடம் கூறினார்.
’’நீங்க டூத் பேஸ்ட் பயன்படுத்தறீங்களா ? டூத் பவுடரா?’’என்று மருத்துவர் கேட்டார்.
மருத்துவர் ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறார் என அமைப்பாளருக்குப் புரிந்து விட்டது. கூச்சம் அதிகமாக இருந்ததால் காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போது திரிபலா சூரணத்தை வென்னீரில் கலந்து வாய் கொப்பளித்து விட்டு கிளம்பியிருந்தார். அந்த சுவடுகள் லென்ஸ் மூலம் பார்க்கும் போது தெரிந்திருக்கும் என நினைத்துக் கொண்டார்.
மருத்துவர் பிசின் போன்ற ஒன்றை ஈறுகளில் தடவினார். சில நிமிடங்களில் ஈறுகள் மரத்துப் போய் விட்டன. ஒரு ஊசி போன்றிருந்த உபகரணம் மூலம் பற்கள் தூய்மை செய்யப்பட்டன. அமைப்பாளர் கண்களை மூடிக் கொண்டார். நீர் பாய்வதன் விதவிதமான சப்தங்கள் எழுந்தன. சில நிமிடம் ஆனது. இவ்வளவு நேரம் நீர் பாய்கிறது. தொண்டைக்குள் இறங்கவில்லை. வாயில் சேர்ந்து இருக்குமோ என்ற ஐயம் அமைப்பாளருக்கு எழுந்தது. பரீட்சை ஹாலில் எக்ஸ்ட்ரா பேப்பருக்கு கையை மெல்ல உயர்த்துவது போல உயர்த்தினார்.
மருத்துவர் ‘’என்ன”’ என்றார்.
ஈறுகள் மரத்துப் போயிருந்ததால் அமைப்பாளரால் பேச முடியவில்லை. பற்கள் மருத்துவ நாற்காலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறு வாஷ் பேசினை நோக்கிச் சென்றார். ஆனால் துப்புவதற்கு வாயில் நீர் ஏதும் இல்லை. என்ன என்று புரியவில்லை அமைப்பாளருக்கு.
‘’கிளீன் பண்ணும் போது இந்த நீடில் வழியா தண்ணி வரும். சிஸ்டர் அந்த சக்ஷன் டியூப் வழியா கலெக்ட் ஆகற எல்லா தண்ணியையும் ரிமூவ் பண்ணிடுவாங்க.’’ என்றார் டாக்டர்.
நவீன மருத்துவத்தில் ‘’எலும்பு முறிவு மருத்துவமும்’’ ’’பல் மருத்துவமும்’’ உச்ச பட்ச சாதனைகள். அவை மானுடத்துக்கு அளித்த தீர்வுகள் மிகப் பெரியவை என எண்ணினார் அமைப்பாளர்.
மூடிய கண்ணைத் திறக்காமல் இருந்தார் அமைப்பாளர். பத்து நிமிடம் ஆகியிருக்கும். தூய்மைப் பணி முடிந்தது. மவுத் வாஷ் கொடுத்து வாயைக் கொப்பளிக்கச் சொன்னார் மருத்துவர். அமைப்பாளரும் அப்படியே செய்தார்.
‘’இப்ப எப்படி இருக்கு’’
‘’டாக்டர் கூச்சம் சுத்தமா இல்ல’’
‘’மவுத் வாஷ்ஷால வாய் கொப்பளிச்சதால அப்படி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல திரும்ப கூசும். இந்த ஜெல்-ல காலைலயும் நைட்டும் ஈறுல மட்டும் அப்ளை பண்ணுங்க. இந்த டூத் பேஸ்ட்டால காலைலயும் சாயந்திரமும் பல் தேய்ங்க. மூணு நாள்ல சரியாயிடும்’’
அமைப்பாளரும் செவிலியும் வெளியே வந்தனர். செவிலி மருத்துவ ஆலோசனை, பற்கள் தூய்மைப்படுத்துதல், ஜெல், பேஸ்ட் என நான்குக்கும் சேர்த்து ரூ. 890 எனச் சொன்னார். அமைப்பாளர் தன்னிடம் இருந்த 1000 ரூபாயில் 100 ரூபாய் வைத்துக் கொண்டு 900 ரூபாய் தந்தார்.
அப்போது அமைப்பாளர் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. செவிலியிட்ம் டாக்டரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றார். செவிலி உள்ளே அழைத்துச் சென்றார்.
‘’டாக்டர் காலைல எழுந்ததும் நான் முதல்ல செய்யறது பிரஷ் பண்றது. பல வருஷமா பிரஷ் வச்சு செய்யறன். பற்களை கிளீன் பண்றதுல வேற ஏதும் மெத்தட் இருக்கா? ‘’
டாக்டர் யோசித்தார். செவிலியிடம் ‘’அந்த டீத் இரிகேட்டர் கொண்டு வாங்க’’ என்று சொன்னார். அவர் ஒரு உபகரணத்தைக் கொண்டு வந்தார். அது ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் அளவில் இருந்தது
‘’இப்ப நாம பற்களை கிளீன் பண்ணோம்ல அதே டெக்னிக். செல்ஃபோன் சார்ஜ் பண்ற மாதிரி சார்ஜ் பண்ணிக்கலாம். தண்ணீர் , வென்னீர் , உப்பு போட்ட வென்னீர் இந்த மூணுல ஒன்னு யூஸ் பண்ணலாம்.’’
‘’மூணு நாளைக்குப் பிறகு வந்து இம்ப்ரூவ்மெண்ட் இருக்கான்னு சொல்ல வரும் போது வாங்கிக்கறன்’’ என்றார் அமைப்பாளர்.
‘’இதோட விலை ஃபோர் தௌசண்ட்’’
அமைப்பாளர் ‘’அப்படியா’’ என்றார். வழக்கமான சூழ்நிலை என்றால் அமைப்பாளருக்கு மயக்கம் வந்திருக்கும். இன்று அவருக்கு உடல் என்றாலே பற்களும் ஈறுகளும் தான் என்பதால் அது பெரிய விலை என்று தோன்றவில்லை.
வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். வண்டி 50 மீட்டர் போயிருக்கும். ஆயுர்வேதத்தில் ஒரு முறை இருக்கிறது. அதாவது , காலை எழுந்தவுடன் வாயில் சற்று அதிகமாக நல்லெண்ணெயை எடுத்துக் கொண்டு வாயில் பற்கள், ஈறுகள், நாக்கு, தொண்டை வரை நனையுமாறு வாய்க்குள் கொப்பளிக்க வேண்டும். ஐந்து நிமிடம் வாய்க்குள்ளேயே கொப்பளித்து விட்டு பின்னர் வெளியே துப்பி விட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் பலமாகும்.
எவராலும் எளிதில் சொல்ல முடியும். அமைப்பாளரின் மனச்சாய்வு எந்த திசையில் செல்லும் என. நல்லெண்ணெய் பக்கமா அல்லது டூத் இரிகேட்டர் பக்கமா என.