இன்று நடைமுறையில் இருக்கும் அரசாங்க வழிமுறைகள் பிரிட்டிஷ் வழிமுறைகளை அடிப்படையாய்க் கொண்டது. பிரிட்டிஷ் முறையில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் மிக அதிகம். அவர்களுக்கு மேல் அவர்களின் மேல் அதிகாரிகள். அதற்கு மேல் அதிகாரம் கொண்டது நீதிமன்றம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் நம் நாட்டின் வரி வருவாயில் 74 சதவீதம் நிலவரியிலிருந்து வசூல் ஆகியிருக்கிறது. எல்லா வகையான நிலத்துக்கும் வரி நிர்ணயித்தலும் வரி வசூல் செய்தலும் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள். எனவே தான் மாவட்ட ஆட்சியர் ‘’கலெக்டர்’ எனப்பட்டார். அதாவது , அவர் வரிவசூலை மேற்கொள்பவர் ; கண்காணிப்பவர். ஒழுங்கு படுத்துபவர். அதனால் தான் மாவட்ட நிர்வாகம் ‘’வருவாய்த் துறை’’ என்றே அழைக்கப்பட்டது.
இடத்தை அளப்பதற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு என மக்கள் எப்போதும் வருவாய்த்துறை அலுவலகத்தை அணுகிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை இருந்தது. வரி நிர்ணயமும் வரி வசூலும் நிதி தொடர்பான விஷயம் என்பதால் அது முறைகேடுகளுக்கான வாய்ப்பை அதிகம் கொண்டது. எனவே அலுவலகத்தை அணுகும் எவரும் தங்கள் கோரிக்கையைத் தெரிவித்து மனு அளிக்க வேண்டும். பிரிட்டிஷ் நம்மை ஆண்ட போது நம் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் 20% . ஐந்தில் ஒருவருக்கே எழுதப் படிக்கத் தெரியும். இந்நிலையில் மனு எழுதிக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்த பலர் உருவானார்கள். இன்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள் முன்பு ஒரு ஸ்டூலில் அமர்ந்து மனு எழுதிக் கொடுத்து அதற்கு ஒரு தொகை நிர்ணயம் செய்து வாங்கிக் கொள்பவர்களைக் காண முடியும்.
லஞ்சம் என்பது வருவாய்த்துறையில் பேருருவம் கொண்டிருப்பது என்பதால் அரசு அலுவலகங்களுக்கு செல்வது என்றாலே பொதுமக்கள் எவருக்கும் ஒரு தயக்கமும் விருப்பமின்மையும் இருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால் அச்சமும் இருக்கும். இந்த அச்சம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு அதிக லஞ்சம் பெற முடியும் என்பதால் அலுவலக ஊழியர்கள் அதனை வளர்த்தெடுப்பார்கள். மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த பழக்கத்தின் விளைவுதான் இன்றும் அரசு ஊழியர்களிடம் தொடர்கிறது.
காலமாற்றங்கள் பல நடந்து விட்டன. பிரிட்டிஷ் ஆட்சி நீங்கி விட்டது. நாம் ஜனநாயகமானோம். நமது கல்வி அறிவு அதிகரித்தது. எல்லா அரசு ஊழியர்களும் பொது மக்களின் பணியாளர்களே என்றானார்கள். எல்லா பணிகளும் இத்தனை காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற காலவரம்பு உண்டானது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்தது. இன்னும் பல பல.
இருந்தாலும் இந்த மனு அளிக்கும் மனநிலை அப்படியே இருக்கிறது. பொறுப்புகளும் கடமைகளும் சட்டத்தால் வழங்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் முழு விபரம் கொண்ட மனுவை அசௌகர்யமாக உணர்கின்றனர். ஒரு மனு தகவல் போதாமைகளைக் கொண்டிருந்தால் தங்கள் தாமதத்திற்கான காரணமாகக் கூறலாம் என்பதால் முழுமையான மனுவை விட முழுமையற்ற மனுவையே அரசு ஊழியர்கள் விரும்புவார்கள்.
எல்லா அலுவலகங்களிலும் ‘’தபால்’’ என்று ஒரு பிரிவு இருக்கும். அந்த அலுவலகத்தின் அடிப்படையான பிரிவு அது. பெறப்பட்ட எல்லா மனுக்களும் தபால் பிரிவில் பதிவு செய்யப்பட வேண்டும். மனுவை அளிப்பவர் யார் யாருக்கு அளிக்கிறார் என்ன தேதியில் அளிக்கிறார் ஆகிய விபரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள் முறைப்படி இவற்றை செய்வதில்லை.
மனுக்களை 99 சதவீதம் ‘’தபால்’’ பிரிவில் பதிவு செய்யவே மாட்டார்கள். எனவே பொதுமக்கள் மனுவும் வெறும் காகிதமும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றே.
ஒரு மனு அரசாங்க அலுவலகத்துக்கு அளிக்கப்படுகிறது எனில் அது தபாலில் அனுப்பப்பட வேண்டும். அதிலும் பதிவஞ்சலில் அனுப்பப்பட வேண்டும். பதிவஞ்சல் ஒப்புகையுடன் அனுப்பப்பட வேண்டும். அஞ்சல் துறை மூலம் வரும் பதிவஞ்சல் தபால்களுக்கு அஞ்சல்துறையிலேயே பதிவேடு உண்டு. யார் அனுப்பிய தபால் யாருக்கு அனுப்பிய தபால் எந்த தேதியில் பட்டுவாடா ஆனது ஆகிய விபரங்களை அஞ்சல்துறை தனது பதிவேட்டில் ஏற்றிக் கொள்ளும். அரசு ஊழியர்கள் பதிவஞ்சலில் வரும் தபால்களை தங்கள் பதிவேட்டில் ஏற்றியே தீர வேண்டும். பதிவஞ்சல் விபரங்கள் கொண்ட கடித உறை கூட அவர்களால் மனுவுடன் இணைத்து வைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
நாம் பொதுவாக இன்னாரிடம் இன்னார் மனு அளித்தனர் என்ற செய்தியை அடிக்கடி வாசிப்போம். காண்போம். மனு அளிப்பதை விட மனுவை பதிவஞ்சலில் அனுப்பி விட்டு மனுவின் நகலை அளிப்பது ஒப்பீட்டளவில் உபயோகமானது.
பதிவஞ்சலில் அனுப்பப்படாத மனு அரசாங்கக் கோப்பில் சென்று சேராமல் இருக்க 99 சதவீத சாத்தியம் உள்ளது.