Saturday 25 November 2023

ஆலயம் காக்கப்பட்டது

 


ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தை இடிக்க முயற்சி நடக்கிறது எனக் கேள்விப்பட்ட நிமிடத்திலிருந்து இப்போது வரை அந்த ஆலயத்தைக் காக்க பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்த ஆலயம் முழுமையாகக் காக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து இதை அறிந்தவர்கள் இதில் ஈடுபட்டவர்களுக்கு முழுமையாகத் தெரியும் என்றாலும் செயல்கள் எவ்விதம் நிகழ்ந்தன என்பதை காலக்கிரமமாக வகுத்துக் கொள்வது எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள உதவும் என்பதால் அதனை பட்டியலிடுகிறேன். 

(1) 09.07.2021 அன்று அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் அங்கிருந்த புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த வேம்பு, மலைவேம்பு , புங்கன் ஆகிய 14 மரங்களை ஜே.சி.பி வாகனம் மூலம் வேரோடு பிடுங்கி தனது செங்கல் காலவாய்க்கு எரிபொருளாகப் பயன்படுத்தினார். அந்த நெடிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கப்படும் வீடியோக்களை காணும் போது எவருக்குமே உள்ளம் பதறும். அந்த வீதியில் அப்போது ஆண்கள் பணிக்குச் சென்றிருந்தனர். வீட்டில் பெண்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக நீரூற்றி வளர்த்த மரங்கள் ஏன் இப்படி வெட்டப்படுகின்றன எனக் கேட்ட போது  அவர்களிடம் சிகரெட் புகைத்தவாறு ‘’நான் ஊராட்சி மன்றத் தலைவன். என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. அதுவும் பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது. பெண்கள் வீட்டு அடுப்பங்கரையில் இருக்க வேண்டியவர்கள். யாரிடமும் வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள். என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது’’ என்று கூறியிருக்கிறார். இது நடந்தது ஒரு வெள்ளிக்கிழமை. 

(2) சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கழித்து திங்கட்கிழமை அந்த தெருவாசிகள் நாற்பது பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கிராம மக்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்காமல் திருப்பி அனுப்ப முயற்சி செய்தார். மக்கள் நீண்ட காத்திருப்புக்குப் பின் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நிகழ்ந்த உண்மையை எடுத்துக் கூறினர். 

(3) பொதுமக்கள் புகாரின் விளைவாக வருவாய்த்துறை அவருக்கு ரூ. 2052 அபராதம் விதித்தது. வெட்டப்பட்ட 14 மரங்களின் பொருள் மதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஊராட்சி மன்றத் தலைவர் தனது அரசியல் செல்வாக்கால் மரங்களின் மதிப்பை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்தார். இருந்தாலும் அவர் அரசுப் பொறுப்பை வகித்து ஒரு குற்றச்செயலுக்காக ரூ.2052 அபராதம் செலுத்தியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நிலுவையில் உள்ளது. 

(4) புராதானமான விஷ்ணு ஆலய சன்னிதித் தெரு மக்களின் மீது அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் இருந்தது. 

(5) 14 மரங்கள் வெட்டப்பட்டதிலிருந்து 20 நாட்களில் அந்த வீதியில் 100 மரங்கள் நடப்பட்டன. அவை இந்த இரண்டு ஆண்டுகளில் நன்கு வளர்ந்து பதினைந்து அடி உயரம் வரை சென்றுள்ளன. 

(6) பத்து மாதங்களுக்கு முன்னால் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தின் கரையில் இருக்கும் பெரிதாக வளர்ந்த மரங்களை வெட்ட அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் முயன்றார். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 

(7) ஓர் அரசுக் கட்டிடம் கட்ட இடம் தேவை என்று அரசாங்கத்தில் இருந்து சென்ற வாரம் ஒரு தபால் வந்திருக்கிறது. கட்டிடம் கட்ட உகந்த இடங்களின் பட்டியல் கொண்ட ஒரு கோப்பினை  ஊராட்சி மன்றம் உருவாக்கியிருக்கிறது. அதில் ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடமும் கட்டிடம் கட்ட உகந்த இடமாக கூறப்பட்டிருக்கிறது. 

(8) ஸ்ரீமுனீஸ்வரன் கோவிலின் சாவி சன்னிதித் தெருவில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர் தனது பணியாளர் ஒருவரை அனுப்பி ஆலய வளாகத்தில் இருக்கும் வேப்ப மரத்தை வெட்ட வேண்டும் என்றும் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயத்தை இடிக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார். இது நடந்தது 22.11.2023. அதாவது புதன்கிழமை காலை நேரத்தில் 

(9) மதியம் 1 மணி அளவில் எனக்கு செய்தி வந்தது. நான் விரைந்து சென்றேன். செய்தித்தாள்கள் நிருபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். நிருபர் தாசில்தாருக்கு ஃபோன் செய்து கிராமத்தில் நடப்பது என்ன என்று கேட்டார். தாசில்தார் நிருபர் கூறியே விபரம் அறிந்தார். நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தேன். 

(10) மாலை 5 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 பேர் சென்று ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் இடிக்க நடைபெறும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி மனு அனுப்பினர். அந்த மனுவை ஸ்கேன் செய்து அலைபேசி மூலம் நண்பர்களுக்கு அனுப்பினர். அது ஊர் முழுக்க பரவி விட்டது. காவல்துறையினருக்கும் விஷயம் தெரிந்து விட்டது. CID (SB) பிரிவு போலிஸார் மனு அளித்த இளைஞர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு முழு விபரத்தைக் கேட்டறிந்தனர். 

(11) ஊர் முழுக்க செய்தி பரவியது. எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயத்தை இடிக்கும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயன்றார். நாங்கள் பலரைச் சந்தித்து உதவி கேட்டோம். அனைவரும் அவரவர்க்குத் தெரிந்தவர்களிடம் பேசினார்கள். ஆதரவுகள் பெருகத் துவங்கின. 

(12) இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் அருகே சென்று ஆலயத்தைப் பார்த்து விட்டு ( அதாவது வெளியிலிருந்து / ஆலயத்தின் சாவி தெருவாசி ஒருவரிடம் இருந்தது. அவரிடம் நாங்கள் காலை மாலை பூசனைக்கு மட்டுமே ஆலயக் கதவைத் திறக்க வேண்டும் என்றும் பூசனை முடிந்ததும் உடமே ஆலயத்தின் சாவியை எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தோம். நாங்கள் எதிர்பார்த்த படியே அவரும் நடந்து கொண்டார். ) கோப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடம் கட்டிடம் கட்ட உகந்த இடம் அல்ல என எழுதி அந்த கோப்பினை மூடி விட்டனர். 

ஆலயத்தைச் சூழ்ந்த ஆபத்து நீங்கி ஆலயம் முழுமையாகக் காக்கப்பட்டுள்ளது. 

ஆறிரு தடந்தோள் வாழ்க                                                                            அறுமுகம் வாழ்க