சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் பதிவு செய்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பதிவு செய்ய வேண்டிய அதிகாரி ''Please see the attached file'' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எந்த ஆவணத்தையும் இணைக்கவில்லை. அந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை புகார்தாரரின் பார்வைக்குக் கொண்டு வராமல் இருக்க முயற்சித்துள்ளார்.
புகார் பள்ளி வளாகத்தில் இருந்த உயிர்மரம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரால் வெட்டப்பட்டது தொடர்பானது. சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பதிவு செய்ய வேண்டிய அதிகாரி ஏன் மேல்நடவடிக்கை ஆவணத்தை மறைக்க வேண்டும்? குற்றம் இழைத்தவருக்கும் பதிவு செய்ய வேண்டிய அதிகாரிக்கும் எவ்விதத்தில் தொடர்பு? இதற்கான பதிலை எவரும் யூகித்து விட முடியும்.
இப்போது அந்த அதிகாரி மீது புகார் தெரிவித்து புகார் கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதனை அவருக்கு அனுப்பி விளக்கம் கேட்கும். என்ன விளக்கம் கொடுப்பார்? ‘’கிளரிக்கல் எரர்’’ என சொல்லக் கூடும். அவ்வாறாயினும் சுட்டிக் காட்டப்பட்ட பின்னர் அதனை பதிவேற்ற முயல வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய முடியாது எனில் அந்த ஆவணத்தை தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். நான் குறுஞ்செய்தி வந்து தளத்தில் கண்ட சில நிமிடங்களில் அந்த புகார் பதிவெண்ணைத் தெரிவித்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடம் கேட்டிருந்தேன். அவர்கள் அந்த தபாலையும் அவருக்கே அனுப்புவார்கள். அதற்கும் பதில் கூற வேண்டும்.
நேற்று தில்லியிலிருந்து சி.பி.கி.ரா.ம்.ஸ் தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. 011 எனத் தொடங்கும் எண். அது தில்லியின் எஸ்.டி.டி இலக்கம். பேசியவர் ஒரு மலையாளி. எனினும் சரளமாகத் தமிழில் பேசினார். புகார் தீர்க்கப்பட்ட விதம் புகார்தாரரான உங்களுக்கு திருப்தி தருகிறதா எனக் கேட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த ஆவணத்தையும் பதிவேற்றவில்லை என்பதை நீங்கள் உங்கள் லாக்-இன் மூலம் அறிய முடியும். பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு முறையை அவர்கள் நாசமாக்குகிறார்கள் என்று சொன்னேன். நாங்கள் தமிழக மாநில அரசின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்கிறோம் என்று கூறினார்கள்.
இது குறித்த தபால்களை எனது மின்னஞ்சலில் டைப் செய்து வழக்கமாக பிரிண்ட் அவுட் எடுக்கும் கடைக்கு அனுப்ப மின்னஞ்சலில் அனுப்பும் முகவரியை டைப் செய்தேன். ‘’அனுப்புக’’ என்ற கட்டளையை மெயிலுக்கு அளித்தேன். மெயில் ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டியது. அதாவது , ‘’உங்கள் கடிதத்தில் 'PLEASE FIND THE ATTACHED FILE'' என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த ஃபைலையும் இந்த மின்னஞ்சலில் இணைக்கவில்லையே. இணைக்க மறந்து விட்டீர்களா? இப்போது இணைக்கிறீர்களா?’ என்று கேட்டது’’.
திருக்குறளில் நயத்தக்க நாகரிகம் என்ற வார்த்தை உண்டு. ஒரு எந்திரத்துக்குக் கூட அது இருக்கிறது என எண்ணினேன்.