அமைப்பாளருக்கு ஒரு நண்பர். அவர் இரவுலாவி ( நாக்டிரனல்). அதாவது அவர் முழு இரவும் தூங்காமல் விழித்திருப்பார். காலை 6.30க்கு உறங்கத் தொடங்குவார். மதியம் 1 மணி அளவில் விழிப்பார். மதியம் எழுந்ததும் உணவு அருந்துவார். காலை நேரம் தூங்கி விடுவதால் காலை உணவு இல்லை. நேரடியாக மதிய உணவு. பின்னர் 2 மணி அளவில் மீண்டும் உறக்கம். மாலை 5 மணிக்கு எழுவார். ஸ்னானம் முடித்து தயாராவார். முழு இரவும் விழித்திருப்பார்.நண்பர் சங்கீதப் பிரியர். எனவே இரவு முழுதும் இசை கேட்கும் வழக்கம் உண்டு. பல வருடமாக இவ்விதமாகவே பழகி விட்டார். பகலில் இயங்க மாட்டார் என்றில்லை ; பகலிலும் இயங்குவார் ; அது ஒரு விதிவிலக்கு மட்டுமே. அவர் உறங்கும் நேரம் அவ்வப்போது சற்று மாறுபடும். காலை 6.30 என்பது சமயத்தில் காலை 5.30 என இருக்கும் அல்லது காலை 4.30 என இருக்கும். அதிகாலை 4 மணிக்கு முன்னால் அவர் எப்போதும் உறங்கியது இல்லை.
அமைப்பாளருக்கு இரவு 9 மணி ஆனாலே தூக்கம் கண்ணைச் சொக்கும். இருப்பினும் அமைப்பாளரும் இரவுலாவியும் நண்பர்கள்.
இரவுலாவிக்கு ஒரு பூர்வீக நிலம் இருக்கிறது. நூறு வருடம் இரவுலாவியின் குடும்பத்துக்கு சொந்தமாக உள்ள இடம். அந்த இடத்தின் ஆவணங்கள் 100 ஆண்டுகள் தொன்மையானவை என்பதால் அந்த இடத்தின் மூல பத்திரம் தேவைப்படுகிறது. உள்ளூர் பதிவு அலுவலகத்தில் 75 ஆண்டுகள் ஆவணம் மட்டுமே உள்ளது. அதற்கு முன் உள்ள ஆவணங்களை எவ்விதம் பெறுவது என இரவுலாவி முயன்று வருகிறார். அமைப்பாளரின் நண்பர் ஒருவர் இவ்விஷயத்தில் உதவக் கூடும் என அவரிடம் இரவுலாவியை அழைத்துச் செல்கிறார் அமைப்பாளர்.
இரவுலாவி அமைப்பாளரிடம் கேட்டார். ‘’பிரபு ! தீபாவளி முடிஞ்சதும் சென்னை போவோமா?’’
அமைப்பாளர் திடுக்கிட்டு ‘’தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுக்குல்ல எந்த ராஜா எந்த பட்டணமோ. நாம உடனே கிளம்புவோம்’’
‘’மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட் என்ன?’’ இரவுலாவி கேட்டார்.
‘’காலைல விழுப்புரம் பேசஞ்சர் இருக்கு. காலை 6 மணி டைம். 9.10க்கு விழுப்புரம் போயிடும். 9.30க்கு விழுப்புரத்தை பல்லவன் பிடிச்சோம்னா 12.10க்கு சென்னை எக்மோர்’’ அமைப்பாளர் திட்டத்தைச் சொன்னார்.
‘’திருச்செந்தூர் சென்னை காலைல 5 மணிக்கு இருக்கே’’
‘’அதுல ரிசர்வேஷன் பண்ணனும். அன் - ரி ல போக முடியாது; ஒரே கூட்டமா இருக்கும்’’
‘’அன் - ரி யா ? அப்படின்னா என்ன?’’
‘’அன் ரிசர்வேஷனோட ஷாட் ஃபார்ம்’’
‘’சரி ! அப்ப பல்லவனை பிடிச்சுடுவோம்’’
‘’நம்ம டிஸ்கஷன் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிடும். அதுக்கப்புறம் லஞ்ச் முடிக்கறோம். நான் இன்னொரு ஃபிரண்டை மீட் பண்ணனும். அதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்’’
இரவுலாவி ‘’நானும் என்னோட ஃபிரண்டு ஒருத்தரை மீட் பண்ணனும்’’
’’சாயந்திரம் கோயம்பேடு வரோம். ஃபர்ஸ்ட் பஸ்ஸை பிடிச்சு ஊர் வந்து சேர்ரோம்’’
சென்னை வரை பயணித்த அலுப்பு இந்த திட்டமிடுதலிலேயே அமைப்பாளருக்கும் இரவுலாவிக்கும் ஏற்பட்டு விட்டது.
அமைப்பாளர் காலை 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு உறங்கத் தயாரானார்.
இரவுலாவி இன்றைய இரவும் தூக்கம் வராது ; நாளை பகலிலும் தூக்கம் வராது ; நாளை இரவும் தூக்கம் வராது. தூக்கமே இல்லாமல் எப்படி 36 மணி நேரம் இருப்பது என யோசித்து இசை கேட்கத் துவங்கினார்.