பாரதம் ஞானபூமி. மானுட வெள்ளத்தில் அபூர்வத் துமிகளாக எழுந்து ஞானவானில் சூரியன்களாக ஒளிவிடும் ஞானிகள் உலகம் முழுமைக்குமான ஞானத்தை அளித்த தேசம். எதை அறிவதன் மூலம் யாவும் அறியப்படுகிறதோ அதனை முற்றறிந்த ஞானிகள் தங்கள் எல்லையில்லாப் பெருங்கருணையின் விளைவாக சாமானிய மனிதர்களை நோக்கிப் பேசினார்கள் ; வழிகாட்டினார்கள். ஞானிகள் அறிந்தது பெருமலைகள் என அகன்றும் பரந்தும் உயர்ந்தும் இருப்பது எனில் சாமானியர்களின் புரிதல்கள் மீச்சிறு மண் துகளென சிறியவை. எனினும் ஞானிகள் சாமானியர்களிடம் அவர்களின் சாமானிய விசனங்களை நோக்கி பேசினார்கள். மண்ணைப் பற்றியிருக்கும் மனிதரிடம் எல்லையில்லா வெளி குறித்து பேசினார்கள். எல்லையின்மையுடன் இயைந்து இருப்பதற்கான மார்க்கங்களைக் காட்டினார்கள்.
நூறு கோடி மனிதர்கள் உளர் எனில் அவர்களில் ஒருவரே முழுமையை உணர்ந்த ஞானியாகிறார். அவ்வாறெனில் நூறு கோடி மனிதர்களுக்கு ஞானம் கிட்டாது என்பது அதன் அர்த்தமா என யோசிப்போமெனில் ஒரு ஞானிக்கு சாத்தியமானது நூறு கோடி மனிதர்களுக்கும் சாத்தியம் என்பதே அதன் உள்ளுறை என்பதை உணர முடியும்.
கங்கை பிரவாகம் எடுத்து ஓடுகிறது. பனிமலைகளில் தொட்டால் உடலை உறைய வைக்கும் பனிநீராய் பெருகி தம் வேகத்தால் பாறைகளை உருட்டி பல கிளை நதிகளை இணைத்துக் கொண்டு நூறு நூறு காதங்களுக்குப் பயணிக்கிறது. கங்கையில் அந்தி வணக்கம் செய்பவர்கள் உண்டு. மூழ்கி எழுபவர்கள் உண்டு. கங்கை நீரைக் கொண்டு நிலம் திருத்தி விவசாயம் செய்பவர்கள் உண்டு. படகின் மூலம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்பவர்கள் உண்டு. கங்கை பிரவாகிக்கிறது ; பிரவாகிப்பது அதன் தன்னியல்பு. பிரவாகித்துப் பெருகுவது மூலம் பல்வேறு சாத்தியங்களை உருவாக்கித் தருவது அதன் விளைவு. ஞானிகளும் அவ்விதமானவர்களே. ஞானிகளின் கருணையும் அன்புமே சமூகத்தின் நியதிகளாக அறங்களாக மேன்மைகளாக விளங்குகிறது. சூரியனின் நுண் வடிவே தீபம். சிறிய தீபம் வீடொன்றின் இருள் நீக்குகிறது. வீட்டுக்கு உரியவன் வீட்டுக்குள் நுண் சூர்யன் ஒன்றைப் பதிட்டை செய்கிறான். தீபம் ஏற்றுதலை நுண் சூரியப் பதிட்டை என உணர்ந்து கொண்டு செய்பவனும் உண்டு. அதை அவ்வாறு உணராமல் செய்பவனும் உண்டு. தீபம் இருவருக்கும் ஒரே ஒளியையே அளிக்கும். ஞானிகளின் ஞானமும் அவ்வாறானதே.
நம் தேசம் மானுடனாய்ப் பிறந்த அனைவருமே நிறைநிலை எய்த வேண்டும் என்னும் இலட்சிய நிலை நோக்கி மானுடத்தை இட்டுச் செல்வதை தனது இயங்குமுறையாகக் கொண்டது. உலகம் என்பது மானுடர் நிறைநிலை எய்துவதற்கான செயற்களம் என வகுத்தளித்துள்ளது. நாம் கால் வைத்து நடக்கும் நம் மண் ஞானம் தேடிப் பயணித்த ஞானிகளின் காலடிச் சுவடுகளால் ஆனது.
சாமானிய மானுடர்களின் அகம் சமூக அடையாளங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது. இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன், இன்ன மொழி பேசுபவன், இன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவன், இன்ன உத்யோகம் பார்ப்பவன் என இவ்விதமான அடையாளங்களுக்கே தங்கள் முழு வாழ்வையும் அளித்து விட நேர்கிறது. சாமானியர்கள் இந்த அடையாளங்களின் சிறையில் இருக்கிறோம். சிறையில் இருக்கிறோம் என்பதையே அறியாத நிலையில் இருக்கிறோம். இந்த அடையாளங்களை நீக்கிக் கொள்கையில் விடுதலை என்பது சாத்தியமாகிறது.
ஆசிரியனின் வாழ்வை மாணவன் எழுதுவது என்பது நம் நாட்டின் மரபு. மாணவனின் ஞானப் பாதையில் அது முக்கியமான சேருமிடங்களில் ஒன்றாக அமைகிறது.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஞானசூரியன். அவருடைய அருளின் கருணையின் சிறு துளி கூட எந்த எளிய உயிருக்கும் வீடுபேறு நல்கக் கூடியது. அத்தகைய கருணா மூர்த்தியின் சரிதத்தை அவரது மாணவரான சுவாமி சுத்தானந்த பாரதியார் ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி தனது ஆசானின் புகழை வாழ்வை சிறப்பை எழுதியிருக்கிறார் சுவாமி சுத்தானந்த பாரதியார்.
ஞான ஆசிரியரின் வாழ்வைக் கேட்பவர்கள் அதில் சிறு கல்லாக புல்லாக பொருளாக எளிய எறும்பாகக் கூட அந்த மாகதையின் உள்ளே தங்களை உணர வாய்ப்பு உண்டு என்கிறது நமது மரபு. வாசிக்கும் எவரையும் அவ்விதம் உணர வைக்கும் நூல் சுவாமி சுத்தானந்த பாரதியாரின் ‘’ஸ்ரீ ரமண விஜயம்’’.
ஸ்ரீ ரமண விஜயம் , ஆசிரியர் : சுவாமி சுத்தானந்த பாரதியார் பதிப்பகம் ; ஸ்ரீரமணாஸ்ரமம் , திருவண்ணாமலை