சமீபத்தில் நான்கு நண்பர்கள் ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ஒரு சில மணி நேரங்கள் பொதுவான சில விஷயங்கள் குறித்து பேச நேர்ந்தது. நான் எந்த ஒரு விஷயத்தையும் அதன் விரிவான பின்புலத்தின் அடிப்படையில் வைத்து பரிசீலிக்கும் இயல்பு கொண்டவன். எந்த ஒரு விஷயத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியில் புரி்ந்து கொள்வதே அதனை அணுக பயனளிக்கும் உகந்த வழிமுறை என்பது எனது அபிப்ராயம். நாங்கள் பேசக்கூடிய விஷயம் யோகம் குறித்து சென்றது. நால்வரில் ஒருவர் யோகம் குறித்து சில விஷயங்களைக் கூறிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன விஷயங்கள் அகவயமானவை. எங்கள் உரையாடல் புறவயமானது. ஒரு புறவயமான உரையாடலில் அகவயமான விஷயங்கள் கூறப்படும் போது அதன் எல்லைகள் என்ன என்பதை வரையறுத்துக் கொள்வது உபயோகமானது என நான் எண்ணினேன். உரையாடல் யோகம் குறித்து என்பதால் அதன் அடிப்படைகளை யோகம் கடந்து வந்த பாதையை கண்டுகொள்வது என்பது நலம் பயப்பது என்பதால் அது குறித்து எழுத எண்ணினேன்.
Wednesday, 22 November 2023
ஒரு சந்திப்பும் சில சிந்தனைகளும்
யோகம் என்பது பெருங்கடல். ( யோகத்தைப் பெருங்கடல் என கூறுகையிலேயே பெருங்கடல் என எதனை உத்தேசிக்கிறோம் என்பதும் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதும் அவரவர் பெருங்கடல் என எதனை உணர்கிறோம் ; அறிகிறோம் என்பதைப் பொறுத்தானது. இங்கே பெருங்கடல் என நான் சுட்டுவது அலைகளை ; பேரலைகளை ; பேராழங்களை ; கடலில் வாழும் லட்சோபலட்சம் உயிரினங்களை ; கடலில் நிகழும் நீரோட்டங்களை. இவை அத்தனையையும் உத்தேசித்தே பெருங்கடல் என்கிறேன். பெருங்கடல் என்னும் ஒரு வார்த்தைக்கே இத்தனை விளக்கம் தேவைப்படுகிறது. யோகம் என்பதை எத்தனை வார்த்தைகளால் விளக்குவது ). நாம் இன்றைய காலகட்டத்தில் அதன் கரையில் நின்று அதனைக் கண்டு கொண்டிருக்கிறோம். சிலர் அதில் கால் நனைக்கிறார்கள். சிலர் மூழ்கி எழுகிறார்கள். சிலர் ஒரு படகின் மூலம் கணிசமான தூரம் சென்று திரும்புகிறார்கள். சிலர் அதில் நீந்துகிறார்கள். இன்னும் எத்தனையோ செயல்பாடுகள் ; நோக்குகள்.
யோகம் ஒரு ஆசிரியரின் வழிகாட்டலின் படி பயிலப்பட வேண்டிய ஒன்று. உண்மையில் இந்த கூற்று ஆசிரியரைக் குறித்தது அல்ல. மாணவனைக் குறித்தது. நமது பண்பாட்டின் எல்லா அம்சங்களிலும் இருக்கும் முக்கியமான கூறு ஆசிரிய மாணவ உரையாடலே. மாணவன் புறவயமான காரணங்களாலோ அகவயமான காரணங்களாலோ ஆசிரியனிடம் வந்து சேர்கிறான். ஆசிரியர் என்பவர் யார்? அவரின் அடிப்படை குணாம்சம் என்ன? ஆசிரியர் மாணவனை மாணவர்களை மாணவர்களுக்கு எழும் ஐயங்களை மாணவ இயல்புகளை பயிற்சியின் போது மாணவனுக்கு எழும் தடைகளை முழுதும் அறிந்தவர். இந்த விஷயங்களை அவர் தன்னை தன் அனுபவங்களை நிமித்தமாகக் கொண்டும் அறிந்திருக்கலாம் ; இயல்பான உள்ளுணர்வின் மூலமும் அறிந்திருக்கலாம். தன்னிடம் வந்து சேர்திருக்கும் மாணவன் கல்வியில் அதாவது யோகத்தில் அவன் செல்ல வேண்டிய பாதையில் லகுவாக செல்ல உதவிகரமாக இருக்கும் விஷயங்களை மட்டுமே ஆசிரியர் பயிற்றுவிக்கிறார். தனது மார்க்கத்தில் மாணவன் வழிதவறுவானாயின் காலமும் அவனது ஆற்றலும் பெருமளவில் செலவழியும் என்பதால் அவன் கல்வி முழுமையடைய எவற்றைச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்கிறார். யோகம் நம் நாட்டில் நம் மரபில் 3000 ஆண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் ஒவ்வொருவருமே சிறு குழந்தையாய் மொழி அறியாமல் இருப்பதிலிருந்து முனிவர்களும் மானுடர்களும் வருடக்கணக்காக ஊன் உறக்கம் இன்றி வனத்தில் தவம் செய்த கதைகளைக் கேட்டே வளர்கிறோம். நம் ஆழ்மனம் அக்கதைகளால் ஆனது. நம் ஆழ்மனம் அதனைக் கற்பனை மூலம் அறிந்திருக்கிறது என்பது யோகப்பயிற்சிக்கு சாதகமான அம்சமாகவும் இருக்கும் ; சில விஷயங்களில் பாதகமான அம்சமாகவும் இருக்கும். ஒரு ஆசிரியர் பாதக அம்சங்களை நீக்குவார் . சாதகமான விஷயங்களைப் பயன்படுத்தி மாணவனை முன்னகர்த்துவார்.
பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் வரியே ‘’யோகம் என்பது மனச்செயல் நிறுத்தம்’’ என்பதே. உலக வரலாற்றின் எந்த காலகட்டத்திலும் இல்லாத வகையில் இந்த காலகட்டத்தில்தான் ‘’தனிமனிதன்’’ என்னும் கருதுகோள் வலுப் பெற்றிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மனிதர்கள் தங்களை திரளின் ஒரு பகுதியாகவே உணர்ந்திருப்பார்கள். 99.99 சதவீதம் பேர் அவ்விதமே இருந்திருப்பார்கள். ஒரு பெற்றோருக்கு ஆறு அல்லது ஏழு குழந்தைகள் இருந்த காலகட்டம். குடும்பம் என்றாலே இருபது முப்பது உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பம். சமூகம் என்பது அவர்கள் வாழும் ஊர் என வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தனித்த அடையாளமோ தனித்த தேடலோ தனித்த பாதையோ இருந்திருக்கவில்லை. ஊரில் எல்லாருக்கும் உள்ளதே அவர்களுக்கும். இவ்வாறான நிலையிலும் யோகமார்க் கம் ஒரு தனிமனிதனை தனிமனிதனாகவே ஆரம்பநிலையில் அணு கியது. அவன் ஒரு ‘’ஜீவன்’’. எனினும் அவன் சூழலால் அதாவது சமூகச் சூழலால் தனக்கு ஒரு குடும்ப அடையாளத்தை ஜாதி அடையாளத்தை மொழி அடையாளத்தை சூட்டிக் கொண்டிருக்கிறான். இதில் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். யோகம் முழுமைப் புரிதலுக்கான மார்க்கம் என்பதால் இந்த அடையாளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதல்ல. சாமானியர்களுக்கு அதனால் பயன் இருக்கிறது என்பதும் சமூக நெறிகளின் உருவாக்கத்தில் அவற்றுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்பதும் யோகத்தின் ஆசிரியர்களுக்குத் தெரியும். ஒரு யோகசாதகன் இந்த அடையாளங்களைக் கடக்க வேண்டியவன். அவன் தனது மார்க்கத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல அவை அவசியம். எனவே அவற்றை எவ்விதம் சாதகனுக்கு உணர்த்தி அவன் நீக்கிக் கொள்ள உதவுவது என்பது ஆசிரியரின் விருப்பம். அந்த செயல்பாடு இனிமையான அனுபவமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை ; அது அகங்காரத்தை உடைக்கும் செயல். ஒரு மனிதனின் அகங்காரத்தை பலவிதங்களில் உடைப்பது என்பது மிக ஆழமான ஒரு விஷயம். வாள் கொண்டு உடலைக் கிழிப்பது போன்ற செயல் அது. எனவே தான் ஆசிரியர் மாணவனை ஆரம்ப நிலையிலேயே அவனை சேர்த்துக் கொள்ளாமல் திரும்பிச் செல்லும் படி கூறுவதும் மாணவன் உறுதியுடன் காத்திருந்து முழுவதும் ஆசிரியர் மீது நம்பிக்கை வைத்து மன்றாடி ஆசிரியரிடம் சேர்வதும் நிகழ்வதை நம் மரபின் கதைகளில் காண முடியும். ஒரு மாணவன் ஆசிரியரிடம் வந்து சேர்ந்து விட்டான் என்பதாலேயே அவன் கல்வி முழுமை அடைந்து விட்டது என்றோ அவனது கற்றல் சீராக நடக்கிறது என்றோ அர்த்தம் இல்லை. அது ஒரு துவக்கம் மட்டுமே.
யோக மரபு ஒவ்வொரு மனித அகமும் ‘’காம குரோத மோக லோப மத மாச்சர்யம்’’ என்னும் ஆறு இயல்புகளைக் கொண்டது என்கிறது. யோக மரபு காமம் என்று சுட்டுவது பாலியல் என்னும் அர்த்தத்தில் மட்டும் இல்லை என்பது உணர வேண்டியது. காமம் என்னும் சொல் ‘’காமிதம்’’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. காமிதம் என்றால் இனிமை என்று பொருள். காதல் , குடும்ப உறவுகள் என்னும் விரிவான பொருளில் அர்த்தமாகும் விஷயம் அது. ’’மதம்’’ எனக் குறிப்பிடப்படுவது ‘’சமயம்’’ என்னும் பொருளில் இல்லை. மூர்க்கமாக, இருக்கும் நிலையில் இருந்து கொண்டிருக்கும் புரிதலிலிருந்து சிறிதும் மாறாமல் இருக்கும் தன்மையே ‘’மதம்’’ என்னும் சொல்லால் சுட்டப்படுவது. இந்த ஆறு இயல்புகளையும் களைந்து கொள்வது உண்மையை உணர அவசியமானது என்பதால் அவற்றை எவ்வாறு களைவது என்னும் வழிமுறைகளை சாதகனுக்கு அளிக்கிறது யோகமார்க்கம்.
இங்கே ஏன் இத்தனை நெறிமுறைகள் யோகமார்க்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழலாம். மனிதன் பிராணி என்ற நிலையிலிருந்து மனிதன் என்ற நிலையை அடைந்தவன். அவன் மனிதன் என்ற நிலை அடைந்தாலும் இன்னும் பிராணிக்குரிய சுபாவங்களும் இயல்புகளும் அவனுள் நிறைந்திருக்கின்றன. அவனது மேல்மனம் சமூகத்தால் ஒரு அளவு வரை கட்டமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. எனினும் ஆழ்மனம் பல்வேறு விதமான மூர்க்கங்களும் இச்சைகளும் கொண்டது. ஒரு யோகசாதகன் அவற்றை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும். யோகம் உணரும் முறை மட்டும் அல்ல ; அது ஓர் அறிதல் முறையும் கூட. எனினும் ஆழ்மனத்தை எதிர்கொள்ளும் போது மனம் சிதறலாம். மனம் பிறழ்வு கொள்ளலாம். இந்த அபாயங்கள் உள்ளன. ஒரு ஆசிரியர் இந்த அபாயங்களை நீக்கி தன் மாணவனை முன்னகரச் செய்ய வேண்டியவர். எனவே தான் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் தினமும் உடல் உழைப்பை நல்க வேண்டிய நிலை இருந்தது. ஒரு ஊருக்குள்ளேயே தினமும் சாதாரணமாக குறைந்தபட்சம் நான்கிலிருந்து ஐந்து கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியவர்களாக இருந்தனர். கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும். ஆற்றுக்கோ குளத்துக்கோ நடந்து சென்று குளிக்க வேண்டும். ஆற்றிலும் குளத்திலும் நீந்த வேண்டும். இவ்விதமான உடல் உழைப்பை சாமானியமாக அனைவரும் வழங்கிக் கொண்டிருந்தனர். உடல் உழைப்பும் ஓய்வும் மனதை தளர்வாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகித்தது. ஒரு ஊரைத் தாண்டி செல்ல வேண்டிய அவசியம் பெரும்பான்மையானோருக்கு இல்லாமல் இருந்ததும் அவர்களுக்கு மனரீதியிலான ஆதரவை வழங்கியது. உடல் மற்றும் மனம் சார்ந்து யோகத்தை அணுகும் நிலை அன்று பெரும்பாலும் இல்லை.
முன்னர் கூறியது போல , ‘’தனிமனிதன்’’ என்ற கருதுகோள் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் மனம் பலவிதமான சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறது. மனம் என்பதே பற்பல விஷயங்களின் இணைவு என்னும் அடிப்படையில் அதன் இயல்பே நுட்பமும் நுணுக்கமும் கொண்டது. இன்றைய காலகட்டம் அதை மேலும் நுண்மையாக்குகிறது. வாகனங்கள் மற்றும் சாலைகளின் பெருக்கம் மனிதர்களுக்கு பொருளீட்டுவதின் சாத்தியங்களை அதிகரித்திருக்கிறது. பொருள் ஈட்டுவதே வாழ்வின் உச்ச பட்சமான இன்பம் என்றும் வெற்றி என்றும் 99.99 சதவீதத்தினர் எண்ணுகின்றனர். வணிகம் என்பது பெரும் போட்டி என்றே அர்த்தமாகிறது இந்த காலத்தில். சமூகங்கள் தோன்றியதிலிருந்து இது தான் பொதுவான நிலை என்றாலும் இப்போது அந்த நிலை பலமடங்கு எடை கொண்டு மனிதன் மனத்தில் ஊடுறுவியிருக்கிறது.
குறைவான உடல் உழைப்பு கொண்ட சிக்கலான மன அமைப்பு கொண்ட தனிமனிதன் யோகமார்க்கத்தின் முன் வந்து நிற்கிறான். பல்லாயிரம் ஆண்டுகளாக இது அனைவருக்கும் உகந்த பாதை அல்ல என்று மாணவனை திருப்பி அனுப்பிய யோகமார்க்கம் இப்போதைய மனிதனை என்ன செய்யும் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். மிக அளிதில் திருப்பி அனுப்பிவிடும் என்றாலும் அதில் சில வேறு சாத்தியங்களும் உள்ளன.
நாம் இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். யோக மார்க்கம் ஒரு அறிதல் முறை என்பதனால் அது ஒரு விஞ்ஞானமும் கூட. சாதகர்களின் 3000 ஆண்டு அனுபவங்களைக் கண்டு மார்க்கத்தை மேலும் மேலும் மேம்படுத்தியிருக்கிறது. மார்க்கத்தை ஏன் மேம்படுத்த வேண்டும் ? இந்த இடத்தில் தான் ஆசாரியார்களின் கருணை முக்கிய விஷயமாகிறது. தான் வாழ்நாள் முழுதும் அளித்து உணர்ந்து கொண்ட உண்மை தன் மாணவர்களுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அனுபவமாக வேண்டும் என ஆசாரியார்கள் விரும்புகிறார்கள். எளிய உயிர்கள் மேல் அன்பும் பிரியமும் கருணையும் கொள்ளும் உயர்ந்த நிலையில் இருக்கும் ஆசாரியார்கள் மானுடர்களுக்கு அளிக்கும் நற்கொடை அது. இருள் பாதையை விலக்கி ஒளிமயமான பாதையிலேயே மாணவன் கல்வியை முழுமை அடையச் செய்ய முயலும் நிலை அது. அதனால் மாணவனை நிராகரிப்பதை நிராகரிப்பாகக் கருதாமல் அதனை ஆசிரியர் மாணவனுக்கு வைக்கும் ஒரு தேர்வாகவே கருத வேண்டும். எனவே தான் மாணவன் ஞானம் பெற குருவை முழுமையாகச் சரணடைய வேண்டும் என்கிறது நம் மரபு. ஆசானைச் சரணடைதல் என்பதே மாணவன் பெற வேண்டிய முதற்கல்வி என்கிறது நம் மரபு.
இன்றைய காலகட்டத்தின் மனிதனுக்கு முழு சரணடைதல் சாத்தியமா? இந்த காலகட்டத்தின் மனிதன் என்றல்ல எந்த காலகட்டத்தின் மனிதனுக்கும் சரணடைதல் என்பது பெருமுயற்சி செய்து அடைய வேண்டிய ஒன்றே. இன்றைய காலகட்டத்திலிருப்பவனுக்கு அது பல மடங்கு மேலும் தேவைப்படுகிறது.
முன்னர் யோகசாதகர்கள் தன் முழு வாழ்நாளையும் அளித்து யோகத்தைப் பயிற்சி செய்தனர். இன்று ஒரு நாளில் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ யோகசாதனையில் ஈடுபடும் வகையில் சாதனா முறைகள் உள்ளன.
மானுடர் அனைவரும் விடுதலை பெற வேண்டும் என்பது ஆசாரியார்களின் அருள்வேட்கை. எனவே மாணவன் இன்னும் முழுமையான மாணவ நிலையை அடையவில்லை என்றாலும் ஆத்மசாதகனுக்குரிய தீவிரம் அவனுக்குக் கைகூடவில்லை என்றாலும் ஓர் அன்னை தன் குழந்தையை ஏற்றுக் கொள்வது போல மாணவனை ஏற்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின் மனிதன் தன்னை சமூகப் பொருளாதார அடையாளங்களுடன் தீவிரமாக பிணைத்துக் கொண்டிருக்கிறான். தான் அவ்வாறு பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே உணர முடியாமல் இருக்கிறான். அவன் பெருஞ்சுமையை சுமப்பதால் சோர்ந்து போயிருக்கிறான். அவனுக்கு மனஅமைதி என்னும் இளைப்பாறல் தேவை. யோக மார்க்கம் ஒரு வைரக் கடைத்தெரு எனக் கொண்டால் அதில் மன அமைதி என்பது சிறு கண்ணாடித் துண்டு. அதுவும் அங்கே இருக்கிறது.