இன்று மதியம் 1 மணி அளவில் 09.07.2021 அன்று 14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்துள்ள ஊரின் சன்னிதித் தெருவிலிருந்து எனது நண்பர்களான இளைஞர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அதே தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தை இடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் சில முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறினர். ஆலயத்தைக் காக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த ஆலயம் அதே வீதியில் இருக்கும் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தின் எதிர்க்கரையில் அமைந்துள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கே தொடர்ச்சியாக வழிபாடு நடந்து வருகிறது. இப்போது அந்த ஆலயத்தின் அர்ச்சகர் ஒரு இளைஞர். தினமும் காலை மாலை என இருவேளை ஆலயத்துக்கு வந்து பூசனைகள் மேற்கொள்கிறார். அந்த ஊர் மக்கள் ஸ்ரீமுனீஸ்வரனை தினமும் வழிபடுகின்றனர். பெண்கள் தினமும் காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் வந்து அகல் தீபம் ஏற்றுகின்றனர். செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் ஸ்ரீமுனீஸ்வரனுக்கு திருவிழா நடைபெறுகிறது. ஊர் மக்கள் அனைவரும் அந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
ஆலயத்தைச் சுற்றி பக்தர்கள் சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கின்றனர். ஆலயமும் ஆலய வளாகமும் சுற்றுச்சுவருக்குள் உள்ளது. ஆலய வளாகத்தினுள் சுவாமி பூசனைக்குரிய நந்தியாவட்டை, அரளி ஆகிய பூமரங்கள் உள்ளன. அங்கே சுவாமி சன்னிதிக்கு பக்கத்தில் இரு பெரிய வேப்ப மரங்கள் உள்ளன. அந்த வேப்ப மரங்களை மக்கள் தெய்வமாக வணங்குகின்றனர். ஆலயம் மின் இணைப்பைப் பெற்றிருக்கிறது. மின் கட்டணம் பக்தர்களால் முறையாக செலுத்தப்படுகிறது.
செய்தி கேள்விப்பட்டதும் இங்கே உள்ளூரில் இருக்கும் நாளிதழின் நிருபர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அவர் விபரம் கேட்டுக் கொண்டார். மக்கள் வட்டாட்சியரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ மனு அளித்தால் அதனை செய்தியாக வெளியிட்டு விடலாம் என்று சொன்னார். வெள்ளிக்கிழமையன்று ஆலயத்தை இடிக்க முயல்வார்கள் என ஒரு பேச்சு உலவுவதால் நாளைய தினம் வியாழனே நாளிதழில் செய்தி வெளியாவது உகந்ததாக இருக்கும் எனக் கூறினேன். இது தொடர்பாக மேலும் சில விஷயங்களை விவாதித்தோம். முதலில் இன்று நான் செல்வதாகவும் பின்னர் நாளை நாங்கள் இருவரும் செல்வதாகவும் முடிவு செய்து கொண்டோம். பின்னர் நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன். மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் அறைக்குச் சென்றேன். அவர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றனுக்கு சென்றிருந்ததால் அலுவலகத்தில் இல்லை. அலுவலகத்தில் இருந்த ஊழியர் ஒருவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்த முனீஸ்வரன் கோவிலின் பக்தர். வாரம் ஒருமுறை அங்கே சென்று சாமி கும்பிடுபவர். நான் சொன்ன தகவலைக் கேட்டு பேரதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு மனு அளிக்குமாறு கூறினார். நான் கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
நண்பர்களான இளைஞர்கள் அங்கே எனக்காகக் காத்திருந்தனர். ஆலயம் ஐம்பது ஆண்டுகளாக வழிபடப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தை சட்டபூர்வமாகவே அணுகுவோம். தேவையெனில் நீதிமன்றம் சென்று ஆலயத்தை இடிக்கும் முயற்சிக்கு எதிராக ஒரு தடையுத்தரவைப் பெறலாம் என்று சொன்னேன். வெள்ளிக்கிழமையன்று ஏதாவது நடந்து விடுமோ என தங்களின் அச்சத்தை என்னிடம் தெரிவித்தார்கள். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு விஷயம் சென்றிருப்பதால் நிலைமை கட்டுக்குள் இருக்கும் என அவர்களுக்கு நம்பிக்கையளித்தேன். நாங்கள் 10 பேர் அங்கிருந்து புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் சென்றோம். அருகில் இருந்த கடையொன்றில் காகிதம் வாங்கி வந்து மனுவை எழுதினார்கள். ஐம்பது ஆண்டுகளாக மக்களால் வழிபடப்படும் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் இடிக்கப்படாமல் காக்கக் கோரி விண்ணப்பம். அதனை அலைபேசியில் ஸ்கேன் செய்து கொண்டார்கள். வட்டாட்சியர் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருந்தார். எனவே துணை வட்டாட்சியரிடம் அந்த ஊரின் இளைஞர்கள் மனு அளித்தனர்.
‘’நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம். அதனால் தான் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். 09.07.2021 அன்று அங்கே பொதுமக்கள் பொது இடத்தில் நட்டு வளர்த்து விருட்சமாக்கிய வேம்பு, மலைவேம்பு , புங்கன் முதலிய 14 மரங்கள் வருவாய் கோட்டாட்சியர் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டு செங்கல் காலவாயில் வைக்கப்பட்டன. அது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நாங்கள் மனு அளித்திருந்தோம். வருவாய்த்துறை ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ. 2052 அபராதம் விதித்தது. அந்த அபராதம் ஊராட்சி மன்றத் தலைவரால் செலுத்தப்பட்டது. அரசு பொறுப்பில் இருப்பவர் குற்றச்செயல் ஒன்றனுக்காக குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தியிருப்பதால் அதனை முதன்மை ஆதாரமாகக் கொண்டு அவ்ர் மீது சட்டப்படியான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு ஆட்சியரிடம் நிலுவையில் இருக்கிறது. 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பான முழுமையான கோப்பை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரி முழுமையான தகவல்கள் அளிக்கப்படாததால் மாநில தகவல் ஆணையத்திடம் செய்யப்பட்ட மேல்முறையீடும் நிலுவையில் இருக்கிறது. பொது மக்கள் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை உண்டாக்கும் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் அதே தெருவில் இருக்கும் ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தை இடிப்பேன் என்பதும் அங்கே மக்கள் தெய்வமாக வணங்கும் வேப்ப மரத்தை வெட்டுவேன் என்று கூறுவதும் மக்களை அச்சுறுத்தும் செயல்கள். ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயம் இடிக்கப்படாமலும் அதில் இருக்கும் வேப்ப மரமும் வெட்டப்படாமலும் காக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்று சொன்னோம்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களும் ஸ்ரீமுனீஸ்வரன் கோவில் குறித்து அறிந்திருந்தனர். அவர்கள் கேள்விப்படும் இந்த செய்தி அவர்களைக் கலக்கமடையச் செய்திருப்பதை நாங்கள் கண்டோம். எங்கள் கோரிக்கையை அக்கறையுடன் கேட்டுக் கொண்டதற்கு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி கூறி புறப்பட்டோம்.
நேராக முனீஸ்வரன் கோவிலுக்கு வந்தோம். வெற்றி வினாயகரையும், ஸ்ரீமுனீஸ்வரனையும் அவரது படைக்கலன்களாக சூலத்தையும் அரிவாளையும் வேப்ப மரத்தையும் வணங்கினோம். அப்போது ஒரு பெண் சுவாமிக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு நன்நிமித்தம் என்பதால் ஆலயம் காக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.
இரவு 8.30 மணி அளவில் அங்கிருந்து நண்பர்கள் அலைபேசியில் அழைத்தனர். காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு ( சிறப்புப் பிரிவு) லிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்ததாகவும் விஷயம் குறித்து விசாரித்ததாகவும் கூறினர். ஆலயத்தின் புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர் என்று கூறினர்.