Thursday, 9 November 2023

சட்ட விரோத மரம் வெட்டுதல் - பள்ளி வளாகம் - மேலதிக விபரம் அளித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

{சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசுப்பள்ளி வளாகம் ஒன்றில் இருந்த உயிர்மரம் வெட்டப்பட்டடது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் கோட்டாட்சியருக்கும், வட்டாட்சியருக்கும் , மாவட்ட கல்வி அதிகாரிக்கும் புகார் அனுப்பியிருந்தேன். மேலும் மத்திய அரசின் ‘’சி.பி.கி.ரா.ம்.ஸ்’’ இணையதளத்திலும் புகாரைப் பதிவு செய்திருந்தேன். ‘’சி.பி.கி.ரா.ம்.ஸ்’’ புகாருக்கு பதில் அளித்து மாவட்ட கல்வி அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு பதிலை அனுப்பியிருந்தார். அதன் நகல் எனக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த பதில் குறித்து சில விஷயங்களைத் தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு ஆங்கிலத்தில் நான் அனுப்பிய கடிதத்தின் மொழிபெயர்ப்பை கீழே அளித்துள்ளேன்}

அனுப்புநர்

&&&&&

பெறுநர்

மாவட்ட ஆட்சித் தலைவர் 
மயிலாடுதுறை

 ஐயா,

14.10.2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம் , &&&&& வட்டம், &&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின்  வளாகத்தில் இருந்த 10 ஆண்டு அகவை கொண்ட மரம் கட்டிங் மெஷின், இரும்பு ஆயுதங்கள் மற்றும் டிராக்டர் பயன்படுத்தி வெட்டப்பட்டது. அந்த மரத்தை வெட்டுவதில் ஏழு பேர் ஈடுபட்டிருந்தனர். அப்பள்ளியைக் கடந்து செல்கையில் அந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்டதும் &&&&& வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று மேற்படி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் வெட்டப்படுவதைத் தெரிவித்து அதனைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் &&&&& வருவாய் ஆய்வாளரை அலைபேசியில் அழைத்து நிகழும் சம்பவத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்ந்த சம்பவத்தை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டியது குடிமகனாக எனது கடமை என்பதால் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு ஒரு மனுவை அனுப்பினேன். மத்திய அரசாங்கத்தின் ‘’சி.பி.கி.ரா.ம்.ஸ்’’ தளத்திலும் புகாரைப் பதிவு செய்தேன். மாவட்ட ஆட்சியர் சீர்காழி வருவாய் கோட்டாட்சியருக்கு மேற்படி புகாரை அனுப்பி மரம் வெட்டப்பட்ட பள்ளியை நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படியும் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட வருவாய் கோட்டாட்சியர் அனுமதி பெறப்பட்டதா என்பதற்கும் அறிக்கை அளிக்கும்படியும் தெரிவித்து கடிதம் அனுப்பினார். அதன் நகல் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டது. எனக்கும் அனுப்பப்பட்டது. 

09.11.2023 அன்று மயிலாடுதுறை மாவட்ட கல்வி அதிகாரி, ‘’சி.பி.கி.ராம்.ஸ்’’ புகாருக்கான பதிலாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய பதிலின் நகல் எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

மாவட்ட கல்வி அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள பதிலில் இருக்கும் சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 

*****

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று 1 : &&&&& பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் வெட்டப்பட்டுள்ளது. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று 1ல் இருக்கும் சட்டத்துக்கு புறம்பான அம்சம் : பொது இடங்களில் இருக்கும் மரங்கள் மாநில அரசின் வருவாய்த்துறையின் கீழ் வருபவை. பொது இடத்தில் இருக்கும் எந்த உயிர் மரமும் ஏதேனும் ஒரு காரணத்தால்  வெட்டப்பட வேண்டும் என்றாலும் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்து வருவாய் கோட்டாட்சியர் அந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து நேரடியாக களஆய்வு செய்து அனுமதி அளிக்கும்பட்சத்தில் அந்த ம்ரம் வெட்டப்படலாம். அவ்வாறு அனுமதி அளிக்கையிலும் வருவாய் கோட்டாட்சியர் அந்த மரத்தின் பொருள் மதிப்பை அரசாங்கத்துக்குக் கட்டணமாக செலுத்தக் கூறுவார். அந்த தொகை அரசாங்கக் கணக்கில் செலுத்தப்பட்ட பின்பே எந்த உயிர் மரத்தையும் வெட்ட அனுமதி அளிப்பார். இதுவே சட்டபூர்வமான நடைமுறை. 

இத்தனை நெறிமுறைகள் இந்த விஷயத்தில் உருவாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் ஓர் உயிர் மரம் எவ்வகையிலாவது வெட்டப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என்பதை சாமானிய உணர்வின் மூலமே கூட எவராலும் உணர முடியும். சாமானியப் புரிதல் கொண்ட எவருக்கும் புலப்படக்கூடிய விஷய்மே ஆகும் இது. 

மாவட்டக் கல்வி அதிகாரியின் கூற்று (2) : மாவட்டக் கல்வி அதிகாரி மரம் வெட்டப்படவில்லை ; மரத்தின் கிளைகளே வெட்டப்பட்டுள்ளன எனக் கூறியிருக்கிறார். 

மாவட்டக் கல்வி அதிகாரியின் கூற்று (2)ல் இருக்கும் சட்டத்துக்குப் புறம்பான விஷயம் : மேற்படி பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தின் எல்லா கிளைகளும் வெட்டப்பட்டு விட்டன. அந்த மரம் எத்தனை பெரிதாக இருந்திருக்கும் என்பதையும் எத்தனை உயரம் கொண்டதாக இருந்திருக்கும் என்பதையும் வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவைக் கொண்டே கணக்கிட முடியும். மாநில அரசின் வருவாய்த்துறையிடமும் வனத்துறையிடமும் வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவைக் கொண்டு அதன் உயரத்தையும் வெட்டப்பட்ட மரத்தின் கன அளவையும் கணக்கிடுவதற்கான வழிமுறைகள் உள்ளன. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று (3) : பள்ளி மேலாண்மைக் குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டு வெட்டப்பட்டுள்ளதால் இந்த விஷயம் கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் என்னும் குற்றத்தில் வராது. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்று (3)ல் உள்ள சட்டத்துக்குப் புறம்பான விஷயம் : வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி கோரப்படாமல் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இன்றி கிராமத்தில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றின் மரம் வெட்டப்பட்டிருப்பது நூறு சதவீதம் கள்ளத்தனமாக மரம் வெட்டுதலின் கீழ் வரக் கூடியதே. 

மாவட்ட கல்வி அதிகாரியின் கூற்றுப்படி கள்ளத்தனமாக மரம் வெட்டப்படவில்லை எனில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த பள்ளி வளாகத்துக்கான பொறுப்பான அதிகாரி என்ற வகையில் அந்த மரத்தை வெட்ட அவர் அமர்த்திய மரம் வெட்டும் நபர்கள் எவர் எவர் என்ற விபரத்தையும் அவர்களுக்கான ஊதியம் எவ்வளவு வழங்கப்பட்டது என்பதையும் அந்த தொகை பள்ளி கணக்கில் இருந்து எவ்விதம் அளிக்கப்பட்டது என்பதற்கான ரசீதுகளையும் அளிக்க வேண்டும். வெட்டப்பட்ட மரம் விற்பனை செய்யப்பட்டிருப்பின் எவ்வளவு தொகைக்கு விற்பனை நிகழ்ந்தது என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும். 

*****

விஷயங்களைத் தொகுத்துப் பார்க்கும் போது நாம் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். 

(1) . &&&&& கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி மரம் வருவாய் கோட்டாட்சியர் அனுமதி இன்றி வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரம் விறகாக டிராக்டர் டிப்பரில் எடுத்து செல்லப்பட்டு செங்கல் காலவாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

(2) ஓர் உயிர் மரத்தை வெட்டுதல் சட்டத்தின் படி ஒரு குற்றவியல் நடவடிக்கை ஆகும். மேலும் அந்த மரத்தின் பொருள் மதிப்பைக் கருத்தில் கொண்டால் முறைகேடு மற்றும் அரசாங்க சொத்தை அழித்தல் ஆகிய குற்றங்களும் இதனுடன் இணையும். 

(3) மாவட்ட கல்வி அதிகாரியின் சட்டத்துக்குப் புறம்பான கூற்றுகள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பது தெளிவாகிறது.

*****
இந்த கடிதத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறேன். 

(1) 14.10.2023 அன்று &&&&& பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரத்தின் பொருள் மதிப்பை வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். 

(2) மரத்தின் பொருள் மதிப்பு அரசாங்கக் கணக்கில் செலுத்தப்படுவதோடு உச்சபட்சமான அபராதமும் விதிக்கப்பட வேண்டும். 

(3) பள்ளி வளாகத்துக்குப் பொறுப்பான அரசு அலுவலர் என்ற முறையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெட்டப்பட்ட மரத்தின் பொருள் மதிப்பையும் அபராதத்தையும் அவரது ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்ய உத்தரவிட வேண்டும். 

வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவைக் கருத்தில் கொள்ளும் போது வெட்டப்பட்ட மரத்தின் பொருள் மதிப்பு ரூ. 35,000 லிருந்து ரூ. 45,000 வரை இருக்கக்கூடும் என யூகிக்க முடிகிறது. 

பள்ளி மேலாண்மைக் குழுவே பள்ளி வளாகத்தில் இருக்கும் மரத்தை வெட்ட முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என மாவட்ட கல்வி அதிகாரி கூறுவதை மாவட்ட ஆட்சியர்  ஏற்பாரெனில் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு மாவட்டத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் உள்ள மரங்கள் அங்கிருக்கும் தலைமை ஆசிரியர்களால் பொருளியல் தேவைக்காக சட்ட விரோதமாக வெட்டப்படும் அபாயம் உள்ளது. 

&&&&& பள்ளி தலைமை ஆசிரியர் மேல் எடுக்கப்படும் நடவடிக்கை பள்ளி வளாகங்களில் உள்ள உயிர் மரங்களை வெட்ட நினைப்போருக்கு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் விதத்தில் அமைய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,
&&&&&

இடம் : மயிலாடுதுறை
நாள்  : 09.11.2023