ஊரின் கடைத்தெரு ஒன்றில் வணிக வளாகம் ஒன்றை நிர்மாணிக்கும் பணி இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் தளத்தின் கான்கிரீட் போடும் பணி இன்று நடைபெற்றது.
மறுநாள் கான்கிரீட் என்றால் முதல் நாளிலிருந்தே உடலிலும் மனதிலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. காலை 6.30க்கு பணியிடத்துக்குச் சென்றேன். நான் அங்கு சென்று சரியாக இரண்டு நிமிடம் கழித்து மூன்று பணியாளர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அதன் பின்னர் இரண்டு பேர். நான் பணியிடத்துக்கு பைக்கில் வந்த போது எலெக்ட்ரீஷியன் ஃபோன் செய்தார். அவர் வீட்டிலிருந்து கிளம்பி விட்டதாக. அவரும் உதவியாளருடன் வந்து சேர்ந்தார். கம்பி பணியாளர்களின் பணி இரண்டு மணி நேரத்துக்கு மீதம் இருந்தது. அந்த பணியில் அவர்கள் மூழ்கினார்கள். எலெக்ட்ரீஷியன் மின்சார வயர் செல்வதற்கான பி.வி.சி குழாய்களை அமைக்கத் தொடங்கினார்.
பெரும்பணி என்பதால் இன்று தந்தை பணியிடத்தில் முழுமையாக இருப்பார்கள். எனவே வணிக வளாகத்தின் வாசலில் இருக்கும் சிறு குப்பைகளை ஒரு சிமெண்ட் சாக்கில் முழுமையாக சேகரித்தேன். பணியிடம் தூய்மையாக இருந்தது. பணியிடம் தூய்மையாக இருப்பது என்பது அங்கே பணி செய்யும் பணியாளர் உள்ளத்தில் புத்துணர்வை உருவாக்கக் கூடியது. அவ்வாறு தூய்மையாக இருக்கும் பணியிடத்தில் அவர்களின் பணித்திறன் மேம்பட்டு வெளிப்படுவதைக் கண்கூடாக காண முடியும். இந்த பணியிடம் நூற்றுக்கணக்கானோர் நடந்து செல்லும் கடைவீதி. எனவே ஒப்பீட்டளவில் குப்பைகள் கூடுதலாக இருக்கும். சிறு பிளாஸ்டிக் கவர்கள், பாலித்தீன் பைகள், பயன்படுத்தி வீசப்பட்ட சாஷேக்கள் ஆகியவை கீழே கிடக்கும். 15 நிமிடம் மெனக்கெட்டால் எல்லா குப்பைகளையும் ஒரு சிமெண்ட் சாக்கில் சேகரித்து விட முடியும்.
தந்தை பணியிடத்துக்கு வரும் போது பணியிடம் தூய்மையாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்னும் முதலெண்ணம் அவர்களுக்கு உருவாகும். அது அன்றைய நாள் முழுதுக்கும் லகுவான சகஜமான சூழ்நிலையை உருவாக்கும். பல வருடம் அவர்களுடன் இருந்து பணி புரிந்தவன் என்ற முறையில் எனக்கு இது நன்றாகத் தெரியும்.
பணியிடத்தில் தேவையானது எதுவோ அதற்கே அங்கே இடமளிக்கப்பட வேண்டும். தேவையில்லாத ஒன்றனுக்கு அங்கே இடமளிக்கப்படக் கூடாது. கட்டுமானத் துறையில் ‘’இடம்’’ என்பது மிக முக்கியமானது. ஒரு இடத்தை குறிப்பிட்ட விதமாக நிர்மாணிப்பதே கட்டுமானப் பணி.
செவ்வாயன்று சென்னை சென்று விட்டதால் ஒரு முழு நாள் ஊரில் இல்லை. என்னுடைய இருப்பு தேவைப்படவில்லை எனினும் பெரும்பணியான கான்கிரீட் நிகழ இருக்கையில் அதற்கு இரு தினங்கள் முன்பு ஊரில் இல்லாமல் இருந்தது அசௌகர்யமாக உணர வைத்தது. எனினும் முதல் நாள் அதிகாலையில் ஊர் வந்து சேர்ந்து முதல் தினப் பணியில் ‘’ஐக்கியம்’’ ஆகி விட்டேன்.
பணி தொடங்க 11 மணி ஆகும் என யூகித்தேன். காலை வானம் மேகமூட்டமாக இருந்தது. மழைக்காலத்தில் கான்கிரீட் போடும் போது பெருமழை வந்தால் என்ன செய்வது என்னும் தவிப்பு இருக்கும். இருபது பேர் வேலை செய்யும் இடத்தில் மழையால் வேலையை அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ நிறுத்த வேண்டி வந்தால் அனைவரும் உளச்சோர்வு அடைவர். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் சோர்வுற்றால் அதன் தீவிரமும் அடர்த்தியும் பன்மடங்கு கூடி விடும். எனவே மழைக்காலத்தில் கான்கிரீட் என்றால் வானம் பார்த்துக் கொண்டே இருப்போம்.
இருபதடி உயரம் முப்பதடி உயரத்தில் தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. அவ்வாறு தும்பிகள் பறந்தால் மழை வர வாய்ப்புண்டு. எனவே இலேசான கலக்கம் இருந்தது.
முன்னரெல்லாம் காலை 8 மணி , காலை 8.15 , காலை 8.30 மணிக்கு கான்கிரீட் பணியைத் தொடங்குவோம். காலை 8.30 மணிக்கு ஆரம்பிப்பதை தாமதமாக ஆரம்பிப்பதாக எண்ணுவோம். இப்போது காலை 10 , காலை 11 ஆகி விடுகிறது. பணியாளர்கள் அனைவரையும் காலை உணவு அருந்த ஹோட்டலுக்கு அனுப்பி விட்டு நான் வீட்டுக்கு வந்து குளித்து உணவருந்தி உடன் கிளம்பினேன். சில சிறு சிறு பணிகள் பணியிடத்தில் இருந்தன. அவற்றைச் செய்தேன். கான்கிரீட் தொடங்க காலை 11.15 ஆகி விட்டது. நிறைவடைய மாலை 4 மணி ஆனது.
ஆகாசவாணியின் கருணை பெருமழை ஏதும் இல்லை. மதியம் ஒரு மணிக்கு மேல் வெயில் எழவும் செய்தது.
எல்லாருக்குமான பேமெண்ட்டை அளித்து விட்டு புறப்பட்டேன்.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி. தீபாவளி மனநிலை தீபாவளி முடிந்து இரண்டு நாட்களுக்கு பணியாளர்களுக்கு நீடிக்கும். எனவே மீண்டும் பணி தொடங்க புதன் ஆகிவிடும். நீண்ட விடுமுறை என்பதால் அனைவரும் சற்று ஆர்வத்துடன் கலைந்தனர்.
பணியிடம் அமைதியும் தனிமையும் கொண்டது.