2023ம் ஆண்டு தொடங்குகையில் இந்த ஆண்டில் 1000 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டு 1000 மணி நேர வாசிப்பு சவாலில் பங்கு கொண்டேன். 365 நாட்கள் நிறைவாக உள்ள இந்நிலையில் விரும்பிய இலக்கில் பாதியை எட்டியுள்ளேன் என்பது மகிழ்ச்சியையே தருகிறது. எந்த போட்டியுமே நம்மை நாம் அறிவதற்கான ஒரு வாய்ப்பே. எனவே அதில் நாம் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாசிப்பு சவாலில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
நானாவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாழ்க்கைமுறை என்னுடையது. படைப்பூக்கச் செயல்பாடுகள். அறிவுச் செயல்பாடுகள். வணிகச் செயல்பாடுகள். பொதுப்பணிகள் என என் மனம் எப்போதும் ஏதேனும் ஒரு தீவிரமான இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கும். அவை என் வாசிப்பின் மீது பாதிப்பைச் செலுத்தக்கூடியவை. இருப்பினும் தினமும் வாசிப்புக்கு கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கியம் வாசிக்கும் போது அந்த படைப்பு அளிக்கும் அனுபவம் என்பது வாசகனை சில நாட்கள் இறுக்கிப் பிடித்திருக்கும். அந்த பிடி தீவிரமானது. இலக்கியத்தின் நுட்பமே அதுதான். அவ்வாறான நாட்களில் சில நாட்கள் ஏதும் செய்ய இயலாமல் போகும். உண்மையில் அவ்வாறான தருணங்களும் இந்த ஆண்டில் நிகழ்ந்தன.
இந்த வாசிப்பு சவாலில் நான் உணர்ந்த தடை என ஒன்று உண்டு. அது நுண்ணியது. மென்மையானது. அதாவது, என்னால் வாசிப்பையும் நேரத்தையும் இணைத்துக் கொள்வதில் ஒரு போதாமையை உணர முடிந்தது. நூல் வாசிப்பில் நேரப் பிரக்ஞை என்பதை எப்போதும் இணைத்து வைத்துக் கொண்டது இல்லை. வாசிக்க நேர்ந்த முதல் நூலிலிருந்தே நூலை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்துத் தான் பழக்கம் இருக்கிறதே தவிர ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் என கணக்கிட்டுக் கொண்டதில்லை. எனவே அது சார்ந்தும் சில அகத்தடைகள் இருந்தன. ஸ்டாப்வாட்ச் போன்ற உபகரணங்கள் பயன்படுத்தினால் இதனைக் கடக்க முடியும் என்று தோன்றுகிறது.
இலக்கை முழுமையாக எட்ட முடியாமல் போய் விட்டதே என எந்த வருத்தமும் இல்லை. இந்த முயற்சியில் நாம் சில விஷயங்களைக் கவனித்திருக்கிறோம். கற்றிருக்கிறோம். அடுத்த முயற்சியில் ஊக்கத்துடன் ஈடுபட இது உதவும் என்னும் நினைவு பெருமகிழ்ச்சியையேத் தருகிறது. கற்றல் என்பது இந்த உணர்வே என்பதை ஒரு வாசகனாக நான் அறிவேன்.
வாசகன் ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க வேண்டிய நூல்கள் இன்னும் இன்னும் இருக்கிறதே என்னும் எண்ணமே கொள்வான்.
கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.