அமைப்பாளர் காஞ்சிபுரம் செல்ல ஒரு வார காலமாக ஏற்பாடு செய்கிறார். இருப்பினும் ஏற்பாடுகளில் ஏதேனும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அடுத்தடுத்து முயன்று ஏதேதோ செய்து பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. மனம் தளராமல் முயற்சியைத் தொடர்ந்தார்.
ஏன் தள்ளிப் போகிறது என்பதை அமைப்பாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கிய காரணம் ரயிலிலோ அல்லது பேருந்திலோ இரவுப் பயணம் செய்வதை அமைப்பாளர் தவிர்க்க விரும்புகிறார். இரவுப் பயணத்தின் உடல் அசதி மறுநாள் பகலில் இருக்கும் என்பது காரணம். செல்ல வேண்டிய ஊருக்கு பகலில் பயணம் செய்தால் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் கூடுதலாக தேவைப்படும். கட்டுமானத் தொழிலில் இருக்கும் அமைப்பாளருக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் என்பது சாத்தியமில்லை.
இன்று காலை கிளம்பினார் அமைப்பாளர். அவருடைய உறவினர் அவரை செங்கல்பட்டில் பிக் - அப் செய்து கொண்டு மாலை 4 மணியிலிருந்து இரவு 9.30 வரை காஞ்சி ஆலயங்களை சேவித்து விட்டு பின்னர் இரவு சென்னை திரும்பி உறவினரின் வீட்டில் உறங்கி விட்டு நாளை காலை 4 மணி அளவில் புறப்பட்டு 5.30 அளவில் காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஆலயங்களை சேவிப்பதாகத் திட்டம். திட்டம் நல்ல திட்டம்தான்.
இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டரை சந்தித்து அமைப்பாளர் சொன்ன இடம் ஒன்றுக்கு பர்சேஸர் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். பின்னர் தற்போது நடக்கும் வணிக வளாகக் கட்டுமானத்துக்கு 1000 செங்கற்கள் வந்து சேர வேண்டும். அதன் வருகையை உறுதி செய்தார். இன்று வணிக வளாக வேலை நடப்பதாக இருந்தது. பணியாளர்கள் தெருவில் ஒரு துக்கம். எனவே இன்றைய வேலை ‘’கேன்சல்’’. இன்று ஒரு பார்ட்டிக்கு அமைப்பாளர் இடம் காட்ட வேண்டும். நாளை மறுநாள் காட்டலாம் என இருந்து விட்டார்.
காலை உணவு அருந்தி விட்டு பயணம் புறப்பட்டார். வழக்கம் போல் அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து கையில் வைத்துக் கொண்டார். இப்போது ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். 700 பக்க புத்தகம். 300 பக்கம் வாசித்திருக்கிறார். எனவே பேருந்துப் பயணத்தில் வாசிக்கலாம் என கையில் எடுத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டார். பைக் வீட்டில் இருப்பது தானே வீட்டில் இருப்பதாக வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கும் என நம்பும் அமைப்பாளர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். கொஞ்ச தூரம் நடந்திருப்பார் ; அமைப்பாளரின் நண்பர் ஒருவர் வந்து ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். பேருந்து நிலையம் சென்றடைந்தார். பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு வழியே சென்னை செல்லும் பேருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நடத்துநர் அதன் படியில் நின்றிருந்தார். அமைப்பாளர் செங்கல்பட்டு என்றார். நடத்துநர் ‘’சீட் இல்ல சார். வண்டி ஃபுல் ‘’ என்றார். பின்னர் ஒரு சிதம்பரம் பேருந்தில் ஏறி சிதம்பரம் சென்று சேர்ந்தார். சென்னையில் இருக்கும் உறவினருக்கு அலைபேசியை ஆன் செய்து ஃபோன் செய்தார். அப்போது அவர் நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. இரண்டு நிமிடம் முன்னால் அழைத்திருந்தாலோ இரண்டு நிமிடம் கழித்து அழைத்திருந்தாலோ ஃபோன் சுவிட்ச் ஆஃப் என இருந்திருக்கும். அவர் அழைத்த நேரமும் ஃபோன் ஆன் ஆகியிருந்த நேரமும் ஒன்றாக இருந்திருக்கிறது. வெளியூர்க்காரர் . ஊருக்கு வருகிறார். அமைப்பாளர் உடனிருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அமைப்பாளர் சரி என்று விட்டார்.
எந்த பேருந்தில் சிதம்பரம் வந்தாரோ அதே பேருந்தில் ஏறி ஊர் திரும்பினார். இடம் காட்ட வேண்டிய பார்ட்டிக்கு இன்று மாலை இடத்தைப் பார்க்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பினார். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த போது காலையில் யார் லிஃப்ட் கொடுத்து பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டாரோ அவர் அந்த பாதை வழியே வந்தார்.
‘’என்ன சார் இங்க இருக்கீங்க’’ என வியப்புடன் கேட்டார்.
அமைப்பாளர் சொன்னார் ‘’ட்ரிப் கேன்சல்’’.
நண்பர் அமைப்பாளரை வீட்டில் ‘’டிராப்’’ செய்து விட்டு சென்றார்.