Tuesday 12 December 2023

கொல்லிமலை அடிவாரத்தில்

 
நேற்று காலை சேலத்துக்குப் புறப்பட்டேன். நீண்ட தூரப் பயணங்களை நான் எப்போதுமே விரும்புவேன். புதிது புதிதாக மனித முகங்களைப் பார்த்தபடியே செல்வது எப்போதுமே மகிழ்வளிப்பது. புதிய நிலங்களும் உற்சாகம் கொள்ளச் செய்பவை. 

நண்பரின் நிலம் அமைந்திருப்பது கொல்லிமலை அடிவாரத்தில். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கொல்லிமலை சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டில் கொல்லிமலை செல்லும் மலைப்பாதைதான் ஏகப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பேருந்தில் செல்லும் போது வண்டி சட் சட் என வளைகையில் சற்று பரபரப்பாக இருக்கும். மலைப்பகுதி என்பதாலும் வனம் அடர்ந்த பகுதி என்பதாலும் அங்கே நாளின் பெரும்பகுதியிலோ அல்லது ஏதாவது ஒரு நேரத்திலோ வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். சமவெளியில் இருந்து சென்றவர்களுக்கு அந்த குளிர்ச்சி மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். மரங்களில் மிளகுக்கொடி படர்ந்திருக்கும். மரங்களில் படர்ந்திருக்கும் மிளகுக்கொடிகளின் பச்சை மிளகை மென்றவாறு அந்த மலைப்பாதையில் சிறுதூரம் நடந்தது நினைவில் இருக்கிறது. கொல்லிமலை நினைவுகளுடன் அந்த பச்சை மிளகின் மென்காரமும் இணைந்திருக்கிறது. 

நண்பரின் நிலம் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. ஆறு ஏக்கர் நிலமும் முள்வேலியிடப்பட்டிருக்கிறது என்பது அதன் சாதக அம்சம். எனவே ஆடு மாடு நிலத்துக்குள் வந்து செடியை மேயாது என்பது நல்ல விஷயம். மண் செம்மண் கலந்த மண். அதுவும் மிகச் சாதகமான விஷயமே. தேக்கு அந்த மண்ணில் நன்றாக வளரும். 

இரண்டு கிணறுகள் இருக்கின்றன. தண்ணீர் சற்று உப்புத்தன்மை கொண்டது என்று கூறினார்கள். மகாராஷ்ட்ராவில் ‘’டிரென்ச்’’ வெட்டி வயலில் பெய்யும் மழைநீரை கிணற்றிலோ அல்லது குளத்திலோ கொண்டு வந்து சேர்ப்பார்கள். தண்ணீரின் அதி தூய வடிவம் மழைநீரே. அதனை சற்று உப்புத்தன்மை கொண்ட கிணற்றில் கொண்டு சேர்த்தால் சில மாதங்களில் உப்புத்தன்மை முற்றிலும் இல்லாமலாகி விடும். 

ஆறு ஏக்கர் நிலத்தில் 2000 தேக்கு கன்றுகள் நட முடியும். தினமும் ஒரு கன்றுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றினால் ஒரு நாளைக்கு அந்த பண்ணைக்கு 2000 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவை. ஆறு ஏக்கர் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் அந்த நீர்த்தேவை என்பது மிக மிக சொற்பமானது. கிணற்றுநீரை 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி அதில் சில மூட்டைகளில் துளைகளிட்டு மாட்டுச் சாணத்தை நிரப்பினால் அந்த மாட்டுச் சாணம் நீரின் உப்புத்தன்மையை பெருமளவில் கட்டுப்படுத்தி விடும். பொதுவாக நான் விவசாயிகளுக்கு இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவில் செலவாகும் விஷயத்தையே பரிந்துரைப்பேன். விவசாயி குறைந்த அளவு செலவு செய்து அதிக லாபம் அடையும் முறையே நான் பரிந்துரைப்பது. 

பரீட்சார்த்தமாக ஒரு தேக்கு மரக்கன்றை நட்டோம். 

விவசாயியும் அந்த நிலத்தில் பணி புரிபவர்களும் ஒரு மாத காலத்தில் அந்த கன்று எவ்விதம் வளர்கிறது என்பதை அவதானிக்கட்டும் என்பதற்காக ஒரு கன்றை மட்டும் நடச் சொன்னேன். மரக்கன்றுக்கு தண்ணீர் தேவையான அளவு ஊற்றப்படுகிறதா பணியாளர்கள் அந்த கன்றின் வளர்ச்சியில் எவ்விதமான ஆர்வம் காட்டுகிறார்கள் விவசாயிக்கும் பணியாளர்களுக்கும் இந்த ஒரு மாதத்தில் ஏற்படும் ஐயங்கள் என்ன என்பதை இந்த ஒரு மாதத்தில் அறிந்து விடலாம் என்பதால் இவ்விதமான ஒரு திட்டமிடல். 

மரம் என்பது தானாக வளரக் கூடியது என்னும் மனப்பதிவு சமூகத்தில் உருவாகி விட்டது. மரம் தானாக வளரும் தான் ; ஆனால் அதில் இருந்து நமக்கு நாம் விரும்பும் விதத்தில் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அந்த ம்ரத்துக்கு குறைந்தபட்சம் நாம் வாரம் இருமுறையாவது தண்ணீர் ஊற்ற வேண்டும். 

இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியை எடுத்து அதில் மக்கிய சாண எருவை இட்டு தேக்கு கன்றை நட்டு நீர் வார்த்தோம். 

அங்கிருந்து புறப்பட்டேன். ஆறு மணி நேர பேருந்து பயணம். மூன்று மணி நேரம் மலைப்பகுதிகளும் அதை ஒட்டிய நிலங்களும். மூன்று மணி நேரம் காவிரி வடிநிலம். கொங்கு நாட்டில் மூன்று நான்கு நாட்கள் ஒரு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.