இன்று ஞாயிற்றுக்கிழமை சேலம் செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். அதாவது, 6 ஏக்கரில் தேக்கு பயிரிட விரும்பும் விவசாயியின் நிலத்தை நேரடியாகப் பார்வையிட விரும்பினேன். நேற்று தான் அவரிடம் முதல் முறையாகப் பேசினேன். ஓரிரு நாட்களில் சேலம் வருவதாகக் கூறியிருந்தேன். ரயில் அட்டவணையை இணையத்தில் சோதித்த போது காலை 6.20க்கு ஊரிலிருந்து சேலத்துக்கு திருச்சி கரூர் மார்க்கமாக ஒரு ரயில் புறப்படுகிறது என்பதைக் கண்டேன். உடன் விவசாயிக்கு ஃபோன் செய்து நாளையே வருகிறேன் என்றேன். ‘’சுபஸ்ய சீக்கிரம்’’ என்று சொல்வார்கள். நற்செயல்களை உடனே செய்ய வேண்டும் என்கிறது நம் மரபு. அவர் ஞாயிற்றுக்கிழமை முன்னரே திட்டமிட்ட ஒரு பணி இருந்ததால் ஒரு நாள் பயணத்தைத் தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டார். நானும் ஒத்துக் கொண்டேன். தற்போது நமது கட்டுமானப் பணி நிகழும் பணியிடத்தில் பூச்சுவேலை நடைபெறுகிறது. தினமும் ஐந்து பணியாளர்கள் பூச்சுவேலையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை பணியிடத்துக்குச் செல்வோம் என மோட்டார்சைக்கிளில் புறப்பட்டேன். நாளை காலை 6.20க்கு சேலம் கிளம்பினால் நாளை இரவு 9.30க்குத் தான் ஊர் திரும்ப முடியும். நாளை நாள் முழுதும் பணியிடத்தில் இருக்க முடியாது என்பதால் இன்று மாலை நான் செல்வது அவசியமாகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். பணியிடம் வீட்டிலிருந்து தோராயமாக 3.5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற போது ஒரு இளைஞன் ‘’லிஃப்ட்’’ கேட்டான். அவனை ஏற்றிக் கொண்டேன்.
கொஞ்ச தூரம் வண்டி நகர்ந்ததும் அந்த இளைஞனிடம் ‘’எங்கே செல்ல வேண்டும் ‘’ என்று கேட்டேன். ரயில்வே ஸ்டேஷன் என்று சொன்னான். ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில்தான் பணியிடம் இருக்கிறது. எனவே அங்கே ‘’டிராப்’’ செய்கிறேன் என்று சொன்னேன். அவன் உச்சரிப்பு மலையாளம் போல் இருந்தது. நான் அந்த இளைஞனைக் குறித்து விசாரித்தேன்.
அவன் பெயர் ராஜூ பிஸ்வாஸ். அவனது தந்தை பெயர் ராம்குமார் பிஸ்வாஸ். நம் நாட்டின் 51 சக்தி பீடங்களில் முக்கியமானதான ‘’காமாக்யா’’ என்ற தலத்துக்கு பக்கத்தில் தான் ராஜூ பிஸ்வாஸின் பூர்வீக கிராமம். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். பின்னர் கட்டிடத் தொழிலுக்கு வந்து விட்டான். திருவனந்தபுரத்தில் ‘’லாரி பெக்கர்’’ பாணி கட்டிடங்களை நிர்மாணிக்கும் கட்டிட நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறான். அவர்களின் பணி ஒன்று கோயம்புத்தூரில் நடந்திருக்கிறது. அங்கு பணி செய்திருக்கிறான். இங்கும் அந்த நிறுவனத்தின் கட்டிட வேலை நடக்கிறது. ராஜூவும் அவனது நண்பன் ஒருவனும் இங்கே வந்திருக்கிறார்கள். வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதன் பின் ஒரு மாதம் அஸ்ஸாம் செல்வான். பின் திருவனந்தபுரம் வந்து விடுவான்.
கட்டிடத் தொழிலைச் சேர்ந்தவன் என்பதால் அவனை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கும் கட்டிடத் தொழில் என்பதால் அவனுக்கும் மகிழ்ச்சி.
அஸ்ஸாமிய நாவலாசிரியரான ‘’லஷ்மி நந்தன் போரா’’ வை வாசித்திருக்கிறாயா என்று அவனிடம் கேட்டேன். பள்ளி மாணவனாக இருந்த போது அவரது எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் என்று சொன்னான். நான் ‘’லஷ்மி நந்தன் போரா’’ வை அறிந்திருந்தது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது. ஒரே குதூகலமாகி விட்டான்.
ஒருமுறை தில்லி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய நின்று கொண்டிருந்த போது எனக்கு முன்னால் ஒரு வங்காள இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவனை அறிமுகம் செய்து கொண்டு அவனிடம் உரையாடுகையில் எனக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியர்களில் ஒருவர் ‘’தாராசங்கர் பானர்ஜி’’ என்று சொன்னேன். மேலும் ‘’ விபூதி பூஷண் , மைத்ரேயி தேவி, மாணிக் பந்தோபாத்யாய’’ ஆகிய வங்காளப் படைப்பாளிகளின் நாவல் மொழியாக்கத்தை தமிழில் வாசித்திருக்கிறேன் என்று சொன்னேன். அந்த இளைஞன் உணர்ச்சிகரமாகி கண்ணீர் மல்கி விட்டான்.
அஸ்ஸாம் குறித்து மேலும் பேசினோம். ‘’சரத் சந்திர சின்ஹா’’ என்ற காந்தியர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அஸ்ஸாம் முதலமைச்சராக இருந்தவர். அவர் பெயரைச் சொன்னேன். அவனுக்கு ரொம்ப ஆச்சர்யம். ‘’ஹிதேஷ்வர் சைக்கியா பி.கே. மகந்தா தருண் கோகோய் சர்பானந்த சோனாவால் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா’’ ஆகிய எனக்குத் தெரிந்த அஸ்ஸாம் முதலமைச்சர்களின் பெயர்களை சொன்னேன். அவன் நான் அஸ்ஸாமில் நீண்ட நாள் வசித்தவன் என்றே முடிவு செய்து விட்டான்.
என்னுடைய பணியிடத்துக்கு அஸ்ஸாம் குறித்து உரையாடியபடியே வந்து சேர்ந்தோம். ஐந்து நிமிடம் அங்கே இருந்தேன். சிமெண்ட் மூட்டை கால் மூட்டை மட்டுமே எஞ்சி இருந்தது. நாளை காலை சிமெண்ட் கலவை போட சிமெண்ட் மூட்டை வேண்டும் . காலை 9 மணிக்கே சிமெண்ட் வந்து சேர வேண்டும். காலை 8 மணிக்கு ஃபோன் செய்தால் பணி தொடங்கும் முன் சிமெண்ட் வந்து விடும்.
ராஜூவை அழைத்துக் கொண்டு ரயில் நிலையம் சென்றேன். கன்யாகுமரி திப்ரூகர் ரயிலில் கன்யாகுமரியிலிருந்து திப்ரூகருக்கு டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னான். இந்தியாவின் மிக அதிக தூரம் பயணிக்கும் ரயில் என்று அந்த ரயிலைச் சொன்னான் ராஜூ. நான்கு இரவுகள் நான்கு பகல்கள் பயண நேரம். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியுடன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முடிந்து விடும் என்று முன்பதிவு சாளரத்தில் கூறியிருக்கிறார்கள். திரும்பி வந்து விட்டான். நான் ரயில் நிலைய வாசலில் நின்றிருந்தேன். அவன் இந்த விபரம் கூறியதும் நானும் உள்ளே சென்று விசாரித்து உறுதி செய்து கொண்டேன்.
ராஜூ பிஸ்வாஸ் அவனுக்கு சில ஆடைகள் வாங்கும் வேலை இருப்பதால் துணிக்கடைகள் நிறைந்த பட்டமங்கலத் தெருவில் ‘’டிராப்’’ செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அது வீடு திரும்பும் வழியில் இருக்கிறது. வண்டி நகர்ந்து கொண்டேயிருந்தது. பிரியத்துடன் ‘’நாம் தேனீர் அருந்துவோம்’’ என்று சொன்னான். அவன் தேயிலைக்குப் பேர் போன மாநிலத்திலிருந்து வந்தவன் என்பதை நினைத்துக் கொண்டேன்.