Saturday, 23 December 2023

சுந்தரவனம் : தொலைந்து போவதும் காணாமல் போவதும்


சமீபத்தில் வெளியான, சுந்தரவனம் நாவலை வாசித்தேன். ( நாவலாசிரியர் : சுஷில் குமார் பாரதி). 

ஒரு மனித உயிர் மண்ணில் உடலாக வந்திறங்குகிறது. ஆனால் அது உடல் மட்டும் தானா? உடலாக உருவம் கொள்வதற்கு முன்னே அது இன்னொரு உடலில் உயிராக அசையத் தொடங்குகிறது. உடலா உயிரா உயிரசைவா எது மூலமானது என்னும் கேள்வியும் எது முதன்மையானது என்னும் கேள்வியும் மனித குலத்துக்கு எப்போதும் உள்ள கேள்விகள். உடலும் உயிரும் உயிரசைவும் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பே அன்றாட வாழ்க்கையை மனிதனுக்குச் சாத்தியமாக்குகிறது என்றாலும் சாமானிய மனிதன் இம்மூன்றில் எதனையும் அறிய முயல்வதில்லை. அதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு அமைவதும் இல்லை. அத்தகைய சந்தர்ப்பத்தை அவன் உருவாக்கிக் கொள்வதும் இல்லை. அப்படி ஒன்றை உருவாக்கிக் கொள்ள அவன் விரும்புவதும் இல்லை. சாமானிய வாழ்க்கை உடலை வலி மூலமும் நோய் மூலமும் தீவிரமாக உணர்கிறது. உயிரை மரணத் தறுவாயில் சில கணங்கள் உணர்கிறது. பெரும்பாலான மனிதருக்கு அத்தருணத்திலும் உணர இயலாமல் போகிறது. உலக வழக்கின் ஒரு பகுதியான இந்த பின்புலத்தை தனது நாவலின் பின்புலமாகக் கொண்டு சுந்தரவனத்தை எழுதியிருக்கிறார் சுஷில் குமார் பாரதி. 

சமுத்திரத்தில் அலைகளென விரைந்து விரைந்து எழுகின்றன மானுட உயிர்கள். பெரும்பாலான அலைகள் ஒன்று போல் அமைய மிகச் சிறு அலைகள் மாறுபடுகின்றன. அதைப் போல மிகச் சிறு மனிதர்கள் வாழ்க்கை ஏதோ ஒரு கணத்தால் ஏதோ ஒரு கணத்தின் மாறுதலால் சாமானிய வலிகளுக்கு அப்பால் இருக்கும் தீவிரமான வலியை தீவிரமான இம்சையை தீவிரமான அசௌகர்யத்தை அடைகின்றன. உண்மையில் அது ஒரு சித்ரவதை. மீண்டும் மீண்டும் உக்கிரம் கொள்ளும் சித்ரவதை. உண்மையில் அது ஒரு புதைகுழி. மீள நினைத்து சிறு அசைவு கொண்டாலும் பல மடங்கு ஆழத்துக்குள் இழுத்துக் கொள்ளும் புதைகுழி. 

நோய்மையும் வலியும் அழுகையும் கூக்குரலும் அரற்றலும் நிறைந்த மானுட வாழ்வின் ஒரு பகுதிக்குள் விருப்பம் இல்லாமல் வந்து சேர்ந்து விடுகிறான் ஒரு கலைஞன். அவன் அந்த பகுதியை விரும்பவில்லை ; தவிர்க்க நினைக்கிறான். ஆனால் தன்னைத் தாண்டிய ஒரு மாயம் அவனை அங்கே இட்டுச் சென்று விடுகிறது. தன்னைச் சுற்றி படர்ந்து விரிந்திருக்கும் வலைக்குள் சிக்கியது தெரியாமல் சிக்கி தன்னுணர்வால் அதனை புரிந்து கொள்ள முயன்று தன்னளவில் அந்த கலைஞன் என்ன புரிந்து கொண்டான் என்பதே சுந்தரவனம் நாவல். 

மானுட மனத்தின் இருள் பகுதிகளின் உணர்வுகளில் ஒன்றான அச்சத்தை வாசகன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வரியிலும் உணரும்படி எழுதப்பட்டிருக்கும் சுஷில் குமார் பாரதியின் பிரதி அந்த ஒரு கூறால் மட்டும் கூட தமிழ் நாவல் பரப்பில் தனக்குரிய பிரத்யேகமான இடத்தைப் பெறுகிறது. இந்த ஒட்டுமொத்த நாவலும் ‘’ஆட்டோமேட்டிக் ரைட்டிங்’’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது என்று தோன்றியது. சுஷில் குமார் பாரதி இந்த நாவலை ஒரே அமர்வில் எழுதியிருக்கக் கூடும். அல்லது இந்த நாவலை எழுதத் துவங்கியதிலிருந்து நிறைவு செய்தது வரை அவர் மனத்தில் இந்த நாவல் மட்டுமே இருந்திருக்கக் கூடும். 

விரல் விட்டு எண்ணக் கூடிய சில கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு மானுட வாழ்வின் அடிப்படையான சில விஷயங்களைக் குறித்து அடர்த்தியுடனும் தீவிரத்துடனும் கையாண்டிருப்பதன் மூலம் தனது படைப்புத்திறனின் முக்கியத்துவத்தை ஐயத்திற்கு இடமின்றி நிறுவியிருக்கிறார் எழுத்தாளர் சுஷில் குமார் பாரதி. 

குறை மாதத்தில் பிறக்கிறது ஒரு குழந்தை. உயிர் தங்குமா என்பது தெரியாத நிலை. பிள்ளை வரம் கேட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடையாய் நடக்கிறாள் ஒருத்தி. மலை உச்சியிலிருந்து கீழே குழித்து சாகக் கிடக்கும் ஒருவனை உயிர்ப்பிக்கிறார்கள் ஆதிவாசிகள். உயிரைக் குறித்து அணுகி அறிய நேரும் சாமானியனுக்கு அந்த அனுபவமும் அந்த புரிதலும் இனிமையான அனுபவமாக மட்டும் இருக்கிறதா ? அவனுக்கு ஒவ்வொரு கணமும் வலி தரும் அவன் வாழ்வை நரகமாக்கும் பகுதியும் அந்த அனுபவத்தில் இருக்கிறதா ? இவ்வாறான பலவிதமான கேள்விகளை சுந்தரவனம் நாவல் எழுப்பிக் கொண்டு அதற்கான பதில்களை வாசகனே தனது கற்பனை மூலம் சென்றடைந்து கொள்ளட்டும் என விட்டுவிடுகிறார் நாவலாசிரியர். 

எந்த வாசகனும் இந்த நாவலை ஒரே அமர்வில் வாசிப்பான் ; அல்லது இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து வாசித்து முடிக்கும் வரை இந்த நாவலுக்குள்ளேயே தொலைந்து போயிருப்பான். 

நாவல் : சுந்தரவனம் ஆசிரியர் : சுஷில் குமார் பாரதி பக்கம் ; 269 விலை : ரூ.325
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம் ( www.yaavarum.com)