சேலம் அருகே தங்கள் வயலில் முழுமையாக தேக்கு நட உள்ள விவசாயிகளுக்கு எழுதிய கடிதம் :
அன்புள்ள நண்பர்களுக்கு,
வாரத்துக்கு இரண்டு நாட்கள் தேக்கங்கன்றுகளுக்கு நீர் வார்க்கப்படுவதை உறுதி செய்யவும். கன்றுகள் நடப்பட்டு தோராயமாக 10 நாட்கள் ஆகின்றன. இது மார்கழி மாதம் என்பதால் போதுமான சூரிய ஒளி கிடைக்காமல் வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும். அதனால் சோர்வு கொள்ள வேண்டாம். நாம் தாவரம் தரைக்கு மேல் எவ்விதம் வளர்கிறது என்பதையே கண்ணால் காண்கிறோம். ஆனால் நடப்பட்ட எல்லா செடிகளுமே துவக்க நாட்களில் வேர் விடுகின்றன. வேர் ஊன்றுகின்றன. அது மண்ணுக்குள் நிகழ்வதால் அதனை நாம் காண முடியாது. கன்றின் இலைகள் அத்தனையும் உதிர்ந்தால் கூட புதிதாக இலைகள் முளைத்து எழும்.
இந்த மூன்று கன்றுகள் எவ்விதம் வளர்கின்றன என்பதை உன்னிப்பாக கவனிக்கவும். அந்த கவனமே அனுபவமாக மாறி 2000 கன்றுகள் நடப்பட்டு அவை நல்ல முறையில் வளர உதவும்.
நான் தினமும் நமது வயல் குறித்தும் அதில் வளர்ந்து கொண்டிருக்கும் 3 கன்றுகள் குறித்தும் நினைத்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
அன்புடன்,
பிரபு