அமைப்பாளருக்கு ஒரு நண்பர். மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிகிறார். நாகப்பட்டினம் அவரது சொந்த ஊர். அங்கே ஒரு ஓட்டு வீடினை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டினை ஒரு மேல்தளம் அமைத்து கட்டுமானம் செய்ய வேண்டும் என நண்பர் விரும்பி அமைப்பாளரை நாகப்பட்டினம் வரச் சொன்னார். அமைப்பாளர் இன்று காலை நாகப்பட்டினம் கிளம்பிச் சென்றார். அமைப்பாளர் இப்போது கட்டுமானம் மேற்கொண்டிருக்கும் வணிக வளாகத்தில் இன்று பணி உண்டு. மதியம் ஊர் திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் நாகப்பட்டினம் கிளம்பினார். ஊரிலிருந்து நாகப்பட்டினம் 70 கி.மீ எனினும் சுற்றி சுற்றி செல்ல வேண்டும். காலையிலேயே கிளம்பி விட்டார் அமைப்பாளர். செம்பனார்கோவிலில் ஒரு ஹோட்டலில் டிஃபன் அருந்தினார். ஒரு மாதம் முன்பு தனது நண்பர் ஒருவருடன் அந்த ஹோட்டலுக்கு வந்து உணவருந்திய வகையில் அந்த ஹோட்டல் உரிமையாளர் அமைப்பாளருக்கு அறிமுகம். அவரிடம் ‘’அண்ணன் ! மாயூரம் கடைத்தெருவுல ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் செய்யறன்ணன். அதுல கடை ஒன்னு வாங்கி உங்க ஹோட்டலோட பிராஞ்ச் ஒன்னு போடுங்க’’ என்று சாப்பிட வந்த இடத்திலும் தனது ரியல் எஸ்டேட் வேலையைக் காட்டினார் அமைப்பாளர். ஹோட்டல் ஓனர் தனது மகனுக்கு ஃபோன் செய்தார். அமைப்பாளர் சாப்பிட்டு முடிப்பதற்கும் ஓனர் மகன் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. ஓனர் மகன் அமைப்பாளரிடம் ‘’சார் ! அப்பா விஷயம் சொன்னாங்க. நாங்க டவுன்ல இடம் பாத்துக்கிட்டு இருக்கோம். உங்க இடத்தை வந்து பாக்கறோம் ‘’ என்றார். ‘’தம்பி ! நான் இப்ப நாகப்பட்டினம் போறன். மதியம் 3 மணிக்கு வந்துடுவன். அப்ப இந்த வழியாதான் வருவன். அப்ப உங்களை பாத்துட்டு போறன்’’ என்றார்.
நாகப்பட்டினம் போய் சேர்ந்த போது காலை 9 மணி இருந்திருக்கும். நாகைக்கு 5 கி.மீ முன்னே ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி தனது பணியாளர்களுக்கு ஃபோன் செய்தார். அனைவரும் பணியிடத்துக்கு வந்து விட்டனர் என்பதை அறிந்தார். நண்பருக்கு நாகையை நெருங்கி விட்டேன் என குறுஞ்செய்தி அனுப்பினார். நண்பர் ஃபோன் செய்தார். அவரது குரல் கம்மியிருந்தது. அதிகாலை ஊர் வந்து சேர்ந்திருப்பார் போல ; அமைப்பாளர் இவ்வளவு சீக்கிரம் வருவார் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போல. அவரது வீட்டை அடுத்த 10 நிமிடத்தில் சென்றடைந்தார் அமைப்பாளர்.
இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர். ஒரு நிமிடம் ஆகியிருக்கும். அமைப்பாளர் ‘’இடத்தைப் பாக்கலாமா. இடத்தை அளக்கலாமா’’ எனக் கேட்டார். தேனீர் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றார் நண்பர். தேனீர் அருந்தி விட்டு உடனே இடத்துக்கு செல்வோம் என்றார் அமைப்பாளர். பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கேயிருந்து ஒரு பணியாளரை சிறிது உதவுங்கள் என அமைப்பாளர் கேட்டுக் கொள்ள ஒரு பணியாளர் வந்து உதவினார். அவர் உதவியுடன் இடத்தை அளந்து கொண்டார் அமைப்பாளர். அவர்கள் அளந்தது குறைந்தது 80 ஆண்டுகள் வீடாக இருக்கும். சுவர்கள் அனைத்தும் ஒன்றேகால் அடி அகலம் கொண்டவை. அவை மிக வலுவானவை. அந்த சுவர்களின் மேலேயே ஓடுகளை நீக்கி விட்டு ’’கான்கிரீட் சிலாப்’’ அதன் மீது அமைக்கலாம். பின்னர் அந்த சிலாப் மீது இன்னொரு தளத்தை அமைக்கலாம் என முடிவு செய்து கொண்டார் அமைப்பாளர். தமிழில் ஒரு பழமொழி உண்டு : ‘’வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்’’.
பின்னர் இருவரும் வீடு திரும்பினர். அமைப்பாளர் ஆசுவாசமானார். இருவரும் பொதுவான விஷயங்கள் குறித்து பேசினார்கள். நண்பர் கூர்மதி படைத்தவர். அமைப்பாளருக்கு ஒரு தன்மை உண்டு. யாரேனும் ஒரு விஷயம் சொன்னால் அமைப்பாளருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதைத் தெரிவிக்காமல் இருந்து விடலாம் என்று இருக்க மாட்டார். தனது அபிப்ராயத்தைக் கூறுவார். அமைப்பாளர் ஜனநாயகம் என்பதில் எல்லா கருத்துக்களுக்கும் அபிப்ராயங்களுக்கும் இடம் உண்டு என நம்பும் ஜனநாயகவாதி. ஒரு மேற்கோள் உண்டு : ‘’வாயை மூடிக் கொண்டிருப்பது தான் புத்திசாலித்தனம். ஆனால் நம்மால் சும்மா இருக்க முடியாது’’ என. அமைப்பாளர் இந்த மேற்கோளை கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் செயல்படுத்துவது இல்லை.
மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் வெளிப்படுத்தினாலும் அமைப்பாளரின் நண்பர்கள் அமைப்பாளர் மேல் பிரியமும் நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர்கள். அத்துடன் அமைப்பாளருக்கு ஒரு இயல்பு உண்டு. ஒரு விவாதம் நடந்த பின் அதனைக் குறித்து தனிமையில் இருக்கும் போது அமைப்பாளர் யோசிப்பார். அதிலிருந்து புதிய முடிவுகள் சிலவற்றை மேற்கொள்வார். பின்னர் விவாதித்த நபருக்கு ஃபோன் செய்து விவாதத்தின் விளைவாக இந்த புதிய கருத்துக்கு வந்து சேர்ந்தேன் என்று சொல்வார்.
ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்ததில் இருவருக்கும் நேரம் போனது தெரியவில்லை. மதிய உணவு நேரம் வந்து விட்டது. நண்பரின் அம்மா உணவு தயாரித்திருந்தார். மூவரும் அருந்தினர்.
உணவருந்தி அமர்ந்திருக்கையில் ஒரு தட்டில் வெற்றிலை ஏ.ஆர்.ஆர் பாக்கு கொண்டு வந்து வைத்தார் நண்பரின் அன்னை. சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு கொண்டு வைப்பது தஞ்சைப் பகுதியின் வழக்கம். அமைப்பாளர் ‘’சீவல் இருக்கா’’ என்றார். சீவல் தஞ்சைப் பகுதிக்கே உரிய தன்மை. அவர்கள் வீட்டில் சீவல் வாங்கும் வழக்கம் இல்லை. ’’கொட்டைப்பாக்கு இருக்கா’’ என்றார் அமைப்பாளர். அந்த ஊரிலேயே இப்போது யாருக்கும் கொட்டைப்பாக்கு போடும் பழக்கம் இருக்காது. பாக்கு தூள் என்பது கொட்டைப்பாக்கை தூள் செய்வது தானே என்று கூறினார் நண்பரின் அன்னை. சீவலும் கொட்டைப்பாக்கை சீவி உருவாக்குவதுதான் என அமைப்பாளர் நினைத்தார். பின்னர் பாக்குத் தூளையே போட்டுக் கொண்டார்.
சில காலம் முன்னால் வரை, தஞ்சைப் பகுதிகளில் வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வது என்பது ஒரு பெருநிகழ்வு. அதற்கு அத்தனை ஆயத்தங்களும் ஏற்பாடும் நடக்கும்.
அமைப்பாளர் வெற்றிலை சீவல் போடும் பழக்கம் கொண்டவரல்ல. வருஷத்துக்கு ஒரு நாள் வெற்றிலை போட்டால் பெரிது. அவருக்கே இத்தனை எதிர்பார்ப்பு இருந்தால் தஞ்சைப் பகுதியில் போன தலைமுறையில் அந்த பழக்கம் கொண்டவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்த்திருப்பார்கள் என அமைப்பாளர் யோசித்தார்.