Saturday, 6 January 2024

ஒரு கலைஞனின் தசாவதாரம்


மாபெரும் படைப்பாளியான எழுத்தாளர் சிவராம காரந்த் -தின் சுயசரிதையான ‘’ Ten faces of a crazy mind'' நூலை வாசித்தேன். 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் பிறக்கும் சிவராம காரந்த் இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகள் வரை வாழ்கிறார். உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்த ஒரு முக்கியமான நூற்றாண்டுக் காலகட்டத்தின்  சாட்சியமாக அவரது வாழ்க்கை அமைந்திருக்கிறது. அந்த நூற்றாண்டு முழுக்க அவர் ஆற்றிய செயல்களின் கோட்டுச் சித்திரம் ஒன்றை அந்நூல் முன்வைக்கிறது. எனினும் ஓர் இலக்கிய வாசகன் அதனை வாசிக்கும் போது சிவராம காரந்த் என்னும் பெரும் கலைஞனின் பேருருவையும் அக்கலைஞனின் தசாவதாரங்களையும் உணர்வான். 

இளைஞனான சிவராம காரந்த்-தை காந்திய மதிப்பீடுகள் ஈர்க்கின்றன. இளமைப் பருவத்தில் ஏற்படும் அந்த ஈர்ப்பு அவரது நூறாண்டு வாழ்வு நெடுகிலும் முக்கியமான அடிப்படையாக அமைவதை அவரது நூலை வாசிக்கும் எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். அடிப்படையில் சிவராம் ஒரு கலைஞன். கலை உள்ளம் கொண்டவன். அவனது கலை உள்ளம் காந்தியத்தின் சில கூறுகளை ஏற்க மறுக்கிறது. என்றாலும் காந்தியே அவனது தலைவன் ; அவனது வழிகாட்டி ; அவனது ஆசான். 

காந்தியின் அழைப்புக்கு இணங்க ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுக்கிறார் சிவராம் காரந்த். அந்த காலகட்டத்தில் தனது பிராந்தியத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்கிறார். காந்தியின் சொல்படி ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களின் சமூக பொருளியல் நிலை குறித்து கணக்கெடுப்பை மேற்கொள்கிறார். அந்த நாட்களில் அவர் சந்தித்த கிராம மக்களும் அவர்களுடனான உரையாடலும் வாழ்க்கை குறித்த அவரது பார்வை உருவாவதற்கு அடித்தளமாக அமைகின்றன. அவரது பிராந்தியத்தில் ஒருமுறை பெருவெள்ளம் ஏற்படும் போது நண்பர்களைத் திரட்டி ஒரு குழு அமைத்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார். அதே போல் ஒருமுறை அங்கே பஞ்சம் ஏற்படுகிறது. அப்போது மக்களுக்கு உணவு தயாரித்து வினியோகிக்கும் பணியை பொறுப்பெடுத்து செய்கிறார். கிராமத்துக் குழந்தைகளுக்கு ஒரு வார காலம் பயிற்சி முகாமை மாநிலத்தின் பல பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னெடுக்கிறார் சிவராம் காரந்த். 

குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியங்களை கன்னட மொழியில் எழுதுகிறார் காரந்த். கன்னட அறிவியல் கலைக்களஞ்சியத்தையும் எழுதி வெளியிடுகிறார். 

ஒரு பயணியாக கர்நாட்க மாநிலம் முழுவதும் செல்கிறார் காரந்த். கர்நாட்காவின் கலை என்பது தென் கர்நாடக மைசூர் பிராந்தியத்தினைச் சேர்ந்தது என்ற பரவலான எண்ணம் இருந்த போது ஐஹோல், பதாமி, பட்டக்கல் ஆகிய ஊர்களின் சிற்பக்கலை முக்கியத்துவத்தை கன்னட  சமூகத்துக்கு எடுத்துச் சொல்கிறார் காரந்த். ஹம்பி குறித்து அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ள குறிப்புகள் இப்போது வாசித்துப் பார்க்க வியப்பைத் தருகின்றன. ஹம்பி இப்போது பெரும்பாலும் மறுநிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் இன்றும் பல இடிபாடுகளையும் பாறைக்குவியல்களையும் காண முடியும். அன்று முழுமையான இடிபாடுகளாயிருந்த ஹம்பி குறித்த சித்திரத்தை அளிக்கிறார். ஒரு பயணியாக கன்னியாகுமரி தொடங்கி வாரங்கல் வரை ஒரு பெரிய தென்னிந்திய பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம் , உத்திரப் பிரதேசம் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் விரிவான பயணங்களை மேற்கொள்கிறார். ஈரான், ஆஃப்கானிஸ்தான், ஃபிரான்ஸ் , ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு சிவராம்-க்கு கிடைக்கிறது. ஆஃப்கானிஸ்தான் செல்லும் போது அங்கே இரண்டாயிரத்து நூறு  ஆண்டு பழமையான மிகப் பெரிய உயரம் கொண்ட பாமியான் புத்தர் சிலைகளைக் கண்டதை தனது நூலில் பதிவு செய்கிறார் காரந்த். ( 2001ம் ஆண்டு அவை தாலிபான் பயங்கரவாதிகளால் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தகர்க்கப்பட்டது உலகின் பெரும் கலை சோகங்களில் ஒன்று)

கர்நாடக மாநிலமெங்கும் பல நாடகங்களை மக்கள் மத்தியில் அரங்கேற்றுகிறார் காரந்த். நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றுகிறார். சிவராம் காரந்த் தனது சொந்த ஆர்வத்தால் இளமைக் காலத்துக்குப் பின் நாட்டியம் பயின்று ஒரு நாட்டியக் கலைஞராகிறார். யக்‌ஷ கானம் கலைக்கு புத்துணர்வு தருவதில் முக்கியப் பங்காற்றுகிறார். 

புகைப்படக் கலையில் அவருக்கு ஏற்படும் ஆர்வம் காரணமாக பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து கலைப் பொக்கிஷங்களை அச்சு வடிவில் பதிவு செய்ய தனது முன்னெடுப்புகளை மேற்கொள்கிறார். 

கலைக்களஞ்சியங்கள், குழந்தைகளுக்கான பாடநூல்கள், இலக்கியப் படைப்புகள் என தீவிரமாக இயங்குகிறார் காரந்த். லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி ஆகிய அமைப்புகளில் கர்நாடக மாநில தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்துகிறார். பல பல்கலைக்கழகங்கள் அவருக்கு இலக்கியத்திற்கான ‘’டாக்டர்’’ பட்டம் வழங்குகின்றன. உத்திரப் பிரதேசத்தின் மீரட் பல்கலைக் கழகம் அவருக்கு அறிவியலுக்கான ’’டாக்டர்’’ பட்டம் வழங்குகிறது. சாகித்ய அகாடமி விருதும் ஞானபீட விருதும் அவரது படைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. 

ஒரு முழுமையான கலைஞனின் வாழ்நாளின் பெரும் பகுதி உடன் வந்த வறுமையின் சித்திரமும் இந்நூலில் காணக் கிடைக்கிறது. இடர்கள் எத்தனை இருப்பினும் ஒரு கலை உள்ளம் தன் கலை உணர்வுடன் கலைக்காகவும் மானுடத்துக்காகவும் நில்லாது முன்சென்ற ஒரு கலைஞனின் வரலாற்றை இந்நூல் சொல்லிச் செல்கிறது. 

எழுத்தாளன், சமூகச் செயல்பாட்டாளன், அறிவியலாளன், பதிப்பாளன், புகைப்படக் கலைஞன், நடனக் கலைஞன், சிற்ப ஆர்வலன், புகைப்படக் கலைஞன், தீராப் பயணி என எண்ணற்ற அவதாரங்கள் எடுத்த ஒரு கலைஞனின் கலை வாழ்க்கை வாசிப்பவரை வியக்க வைக்காமல் இருக்காது. 

நூல் : Ten faces of a crazy mind ஆங்கில மொழிபெயர்ப்பு : H.Y. சாரதா பிரசாத் பதிப்பாளர் : Bharathiya vidya bhavan, kulapathi munshi marg, Mumbai , 460007. பக்கம் : 290 விலை : ரூ. 199/-

இந்நூல் தற்போது தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. 

நூல் : ஒரு ஞானக் கிறுக்கனின் பத்து முகங்கள்  / தமிழ் மொழிபெயர்ப்பு : சிற்பி பக்கம் : 408 விலை : ரூ.450 பதிப்பகம் : அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் ,மாக்கினாம்பட்டு, உடுமலை சாலை,பொள்ளாச்சி, 642003.