Saturday, 2 March 2024

கரு காக்கும் அன்னை

எனது சகோதரன் எனக் கூறத் தக்க அளவிலான எனது நண்பன் சென்னையில் வசிக்கிறான். அவனது மனைவிக்கு சென்ற மாதம் வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்புக்கு முன்பிருந்தே நான் நண்பனிடம் திருக்கருகாவூர் ஆலயத்துக்கு வந்து முல்லைவன நாத சுவாமியையும் கர்ப்பரட்சாம்பிகை அம்மனையும் வழிபட கூறிக் கொண்டேயிருந்தேன். சென்ற வாரம் அவன் வருகை புரிவதாய் இருந்தது ; அவனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனைகள் இருந்ததால் தவிர்க்க இயலாமல் அவனது வருகையை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று. இன்று காலை சென்னையில் சென்னை - திருச்சி சோழன் விரைவு வண்டியில் புறப்பட்டு வந்தான். நான் அந்த ரயிலில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஏறிக் கொண்டேன். என்னிடம் மயிலாடுதுறை - பாபநாசம் ரயில் பயணச் சீட்டு இருந்தது. பாபநாசத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். பாபநாசத்தில் மதிய உணவு அருந்தி விட்டு அங்கிருந்து ஒரு ஆட்டோவில் திருக்கருகாவூர் சென்று சேர்ந்தோம். பாபநாசமும் திருக்கருகாவூரும் 6 கி.மீ தூரத்தில் உள்ளன. 3 மணி அளவில் திருக்கருகாவூர் ஆலயம் சென்றடைந்தோம். அம்மன் சன்னிதியை ஒட்டி வெறும் தரையில் சற்று தலை சாய்த்தோம். ஆலயங்களில் இவ்வாறு காத்திருப்பது கடவுளின் நிழலில் இளைப்பாறுவதற்கு ஒப்பானது. ஆலயங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்பது அதுவே. 

நடை திறந்ததும் முல்லைவன நாதரை வணங்கினோம். முல்லை வன நாதர் புற்று மண்ணால் ஆனவர். சுயம்பு. முல்லை வன நாதர் அத்தனை அழகு படைத்தவர். முல்லை வன நாதரை வணங்கி விட்டு அம்மனை வழிபடச் சென்றோம். 

மனிதர்களால் சிறு அளவிலேனும் ஒரு அன்பை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றால் அது தாயின் அன்பு மட்டுமே. அம்மையப்பன் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமானவர்கள். 

கர்ப்ப ரட்சாம்பிகை முன்னால் குழுமியிருந்தவர்கள் அனைவருமே இளம் தம்பதியினர். மக்கட்பேறு வேண்டி இறைவனை வழிபட வந்திருந்தார்கள். இங்கே வந்து வழிபட்டுச் சென்ற பின் குழந்தைப் பேறு வாய்க்கப்பெற்றவர்கள் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்த வந்திருந்தனர். குழந்தைகளால் நிரம்பிய ஆலயத்தைக் காணவே சந்தோஷமாக இருந்தது. நண்பன் ஆலயத்தில் நெய்தீபம் ஏற்றினான். 

மாலை 6 மணி வரை அங்கே இருந்து விட்டு பின்னர் பட்டீஸ்வரம் புறப்பட்டோம். அங்கே ஆலயம் சென்று துர்க்கையை வணங்கினோம். 

நண்பனுக்கு இரவு 9 மணிக்கு உழவன் ரயிலில் ஊர் திரும்ப வேண்டியிருந்தது. எனவே தாராசுரம் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலேறி மயிலாடுதுறை வந்து சேர்ந்தோம். இரவு உணவு அருந்தி விட்டு நண்பன் புறப்பட்டான். நானும் வீடு வந்து சேர்ந்தேன்.