அமைப்பாளர் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வணிக வளாகத்தில் 95 சதவீத பணிகள் பூர்த்தியாகி ஒரு மாத காலம் ஆகிறது. நடுவில் 3 வாரங்கள் எந்த பணியும் இல்லாமல் இடைவெளி. இந்த வாரம் பணி தொடங்க முயன்று அடுத்த வாரத்துக்கு தள்ளிப் போனது. இன்னும் நான்கு நாளைக்கான பணி இருக்கிறது. அனேகமாக அந்த பணிகள் அடுத்த வாரம் நிறைவடையும். மாடிப்படி கேட் பெயிண்டிங் செய்ய வேண்டிய வேலை இருந்தது. முன்னர் பணி செய்த அணி வெளியூரில் இப்போது பணி புரிய சென்று விட்டார்கள். அமைப்பாளர் தனக்குத் தெரிந்த ஒரு பெயிண்டரை இன்று மாடிப்படி கேட்டுக்கு பெயிண்ட் அடிக்க வரச் சொன்னார். கிரீம்சன் ரெட் ஒரு லிட்டர் வாங்கிக் கொடுத்து பணியிடத்துக்கு பெயிண்டருடன் காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். பெயிண்டர் எமரி பேப்பரால் கேட்டை கிளீன் செய்யத் தொடங்கினார்.
‘’அண்ணன் ! கேட் செஞ்ச வெல்டிங் பட்டறையில ரெட் ஆக்ஸைடு அடிச்சுதான் கொடுத்தாங்க. மேலே இருக்க டஸ்ட் மட்டும் கிளீன் பண்ணிட்டு பெயிண்ட் கொடுக்க சீக்கிரம் ஆரம்பிங்க. ‘’ என்றார் அமைப்பாளர்.
ராணுவம் பயங்கரவாதிகளைத் தேடித் தேடி வேட்டையாடுவது போல கேட்டில் பெயிண்டர் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
அமைப்பாளர் கொஞ்ச நேரம் தள்ளி இருந்து விட்டு பிறகு வருவோம் என பணியிடத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றார். நண்பர் வீட்டில் இருக்க 10 சதவீத வாய்ப்பே எப்போதும் இருக்கும். கும்பகோணத்தில் ஒரு மகளின் வீடு இருக்கிறது. மெல்பர்னில் ஒரு மகளின் வீடு இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மூன்று மாதம் மெல்பர்ன் செல்வார். ஊரில் இருந்தால் வாரத்துக்கு மூன்று நாட்கள் கும்பகோணம் செல்வார். அமைப்பாளர் சென்ற நேரம் நண்பரும் அவர் மனைவியும் வீட்டில் இருந்தார்கள்.
‘’சார் ! வணக்கம் சார். ஊர்ல இருக்கீங்களான்னு ஒரு டவுட் டோடயே வந்தேன்’’
‘’இப்ப ஒரு மாசமா ஊர்ல தான் பிரபு இருக்கன்’’
நண்பர் பெரும் செல்வந்தர். எளிமையாக இருப்பவர். ஃபேன் ரெகுலேட்டரை சரி செய்து கொண்டிருந்தார்.
‘’ சார் ! ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கன்ஸ்ட்ரக்ட் பண்ணன்ல சார் . அந்த ஒர்க் 95 பர்செண்ட் முடிஞ்சது சார். சைட்டுக்கு பக்கத்துல 1 கி.மீ ல உங்க வீடு இருக்கு. நான் 5 மாசமா சைட்ல தான் இருக்கன். ஆனா உங்களை ரொம்ப பாக்க முடியலயே.’’
‘’ஏஜ் ஆயிடுச்சு பிரபு அதிகமா வெயில்ல சுத்தறது இல்ல’’
நண்பரின் மனைவி தேனீர் கொண்டு வரவா என்று கேட்டார்கள்.
‘’அம்மா ! ஒரு மாசமா இருமல். பால் , காஃபி , டீ மூணும் சாப்பிடறத விட்டு ஒரு மாசமாச்சு. இப்ப சுக்குப் பொடி தான் வென்னீர்ல கலந்து சாப்பிடறன். பால் ரொம்ப ஹெவியா ஃபீல் ஆகுது. ‘’
நண்பரின் மனைவி வென்னீரில் லெமன் கலந்து கொண்டு வந்து அமைப்பாளருக்குக் கொடுத்தார்.
‘’சார் ! வாங்க பில்டிங் போய்ட்டு வருவோம்’’
நண்பரும் அமைப்பாளரும் பணியிடம் வந்து சேர்ந்தார்கள். பெயிண்டர் இன்னும் கிளீனிங் ஒர்க் ஐ முடிக்கவில்லை.
‘’அண்ணன் ! என்ன அண்ணன் ! இன்னும் பெயிண்ட்டே ஓப்பன் பன்னாம இருக்கீங்க. மணி 11.30. நான் இங்க இருந்து போய் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது. முதல்ல ஒரு கோட் கொடுக்கணும். அது காயணும். அப்புறம் சஃபீஷியண்ட் டயம் கொடுத்து செகண்ட் கோட் கொடுக்கணும். இதோட மெயின் பாக்ஸ் 14 இருக்கு. அதுக்கு பிரைமர் கொடுக்கணும். ஏகப்பட்ட வேலை இருக்கு இன்னைக்கு’’
‘’சம்மர் தான் சார் ! சீக்கிரம் காஞ்சிரும்’’
அமைப்பாளர் நண்பரிடம் ‘’வாழ்க்கை இப்படியே தான் சார் போகுது. நாம இருந்தாதான் சார் வேலை நடக்குது. 10 பேர் வேலை பாத்தா சூப்பர்வைஸ் செய்யலாம். ஒருத்தர் வேலை செஞ்சாலும் சூப்பர்வைஸ் செய்யணும்னா என்ன பண்றது சொல்லுங்க’’
நண்பரை வீட்டில் கொண்டு போய் விட்டார் அமைப்பாளர். தனது வீட்டுக்கு பெயிண்டிங் செய்ய வேண்டும் என்றார் நண்பர். தனக்குத் தெரிந்த பெயிண்டர் ஒருவரை ஃபோன் செய்து வரச் சொன்னார் அமைப்பாளர். அந்த பெயிண்டர் ஏற்கனவே நண்பருக்கு அறிமுகமானவர். பெயிண்டரும் நண்பரும் பெயிண்டிங் பட்ஜெட் பற்றி பேசிக் கொண்டார்கள். அடுத்த வாரம் பணி தொடங்க உத்தேசித்தார்கள்.
அமைப்பாளர் பணியிடத்துக்கு வந்தார்.
அங்கே ஒருவர் அமைப்பாளரை நோக்கி வந்தார்.
‘’சார் ! கடை வாடகைக்கு இருக்கா சார்?’’
‘’அதாவது நான் இந்த பில்டிங் கன்ஸ்டிரக்ஷன் பண்ண இன்ஜினியர். ஓனர் வெளியூரு. நான் சொன்னா ஓனர் கேப்பாரு. நீங்க என்ன பிசினஸ் செய்யப் போறீங்க?’’
‘’பூண்டு வெங்காயம் மொத்த மண்டி வச்சுருக்கன். இந்த இடம் கடைத்தெருவுல மெயின் இடமா இருக்கு. நான் இந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக்கறன்’’
‘’ஓனர் 15,000 வாடகை சொல்லச் சொன்னாரு. ஆயிரம் ரெண்டாயிரம் குறைச்சுக்கலாம்னு சொன்னாரு. அந்த பட்ஜெட் உங்களுக்கு செட் ஆகுமா?’’
‘’அது எனக்கு பரவாயில்லை சார்’’ என்றார் பூண்டு வியாபாரி.
‘’அண்ணன் ! ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சுக்கங்க. 15,000 வாடகை அதிகம்னு பல பேரு அபிப்ராயம் சொல்லுவாங்க. இதை விட கம்மியான வாடகைக்கு இடம் இந்த ஏரியால கிடைக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இது இடம் பக்கா அண்ணன். கவுண்டர் சூப்பர் கவுண்டர். ஜனங்க பார்வைல படற இடம். வாடகை கூட 12,500 செஞ்சுக்கலாம். நான் ஓனர்ட்ட சொல்றன். ஆனா அதுக்கு கீழ டவுன் பண்ண முடியாது. நீங்க யார்ட்டயும் டிஸ்கஸ் பண்ணனுமா?’’
’’ஆமாம் சார் ! ஒய்ஃப் கிட்ட பேசணும்’’
’’என ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்கங்க. எப்ப வேணாலும் காண்டாக்ட் பண்ணுங்க.’’
பூண்டு வெங்காய வியாபாரி புறப்பட்டுச் சென்றார்.
சமண சமயத்தவர் உணவில் பூண்டு வெங்காயம் சேர்ப்பதில்லை என்பது அமைப்பாளர் நினைவுக்கு வந்தது. சமணம் குறித்து கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பின்னர் ‘’நம் வேலை பில்டிங் கட்டிக் கொடுப்பது தானே ? ஏன இந்த வாடகை விஷயமும் நம் பொறுப்பில் வந்து சேர்கிறது?’’ என்ற வினா அமைப்பாளர் மனதில் எழுந்தது. அதற்கு அமைப்பாளர் மனதின் இன்னொரு பகுதி ‘’பிரம்மலிபி’’ என பதில் சொன்னது.
பெயிண்டர் பெயிண்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் உட்கார்ந்திருந்து விட்டு ஒரு கல்யாண மண்டபத்துக்கு சென்றார் அமைப்பாளர். அங்கே இன்று இரவு சிவராத்திரி கொண்டாட்டங்கள். அவரது நண்பர்கள் சிலர் ஏற்பாடுகளில் இருந்தனர். அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டரை சந்திக்கச் சென்றார். அவரிடம் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.
‘’அண்ணன்! அடுத்த பிராஜெக்ட் சேல்ஸ்க்கு உங்க ஹெல்ப் அவசியம் வேணும் அண்ணன்’’ என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
மதிய வேளை அமைப்பாளருக்கு பசிக்கத் தொடங்கியது. பணியிடம் சென்று பெயிண்டருக்கு மதிய உணவுக்கு பணம் கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்றார். நல்ல பசி. சாப்பிட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
மாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டார்.
வழியில் வண்டி நின்று விட்டது. ஸ்டார்ட்டிங் டிரபுள். அமைப்பாளருக்கு சோதனை என வழியில் இருந்த எல்லா மெக்கானிக் ஷாப்பும் மதியம் லஞ்ச்சுக்கு சென்றிருந்தனர். கடைசியாக ஒரு மெக்கானிக் ஷாப்பில் ஆட்கள் இருந்தனர். வண்டியில் ஸ்பார்க் பிளக்கில் சிக்கல். அதனை சரி செய்தனர்.
சைட்டுக்கு வந்ததும் ‘’அண்ணன் ! 14 மரப்பலகை இருக்கு. ஒரு பலகைக்கு 5 நிமிஷம்னு வச்சா ஒரு மணி நேரத்துல 14லயும் பிரைமர் அடிச்சுடலாம். அதச் செய்ங்க’’ என்றார்.
பெயிண்டர் பலகைக்கு பிரைமர் அடிக்கத் தொடங்கினார்.
அப்போது பணியிடத்துக்கு பக்கத்து கடைக்காரர் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்த அலைபேசி எண்ணைக் கொண்டு வந்து தந்தார். ‘’சார் ! இவங்க இடம் வாடகைக்கு வேணும்னு கேட்டாங்க’’
அந்த எண்ணுக்கு ஃபோன் செய்து ‘’ காலைல ஒரு பூண்டு வியாபாரி மாசம் 12,500 வாடகைக்கு ஓ.கே சொல்லிட்டி போயிருக்காரு. உங்களுக்கு அந்த வாடகை ஓ.கே வா ?’’
ஃபோனில் பேசியவர் ‘’ நோ இஸ்யூஸ் சார்’’ என்றார்.
‘’நீங்க என்ன பிசினஸ் செய்ய போறீங்க?’’
’’நகை அடகுக் கடை’’
அமைப்பாளர் ஒரு கணம் மௌனமாகி விட்டு ‘’ நீங்க இப்ப வந்தீங்கன்னா ஷாப் ஓப்பன்ல இருக்கு. நீங்க பாக்கலாம்’’ என்றார்.
கொஞ்ச நேரத்துல அடகுக் கடைக் காரர் வந்து இடத்தைப் பார்த்து விட்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். ‘’ சார் ! ஒய்ஃப்கிட்ட பேசிட்டு சொல்றன் ‘’ எனக் கூறி புறப்பட்டார்.
மாலைப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து மெல்லிய இருள் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. பெயிண்டர் செகண்ட் கோட் அடித்து முடித்திருந்தார்.
அவருடைய அன்றைய ஊதியத்தை அவருக்கு அளித்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார் அமைப்பாளர்.
இன்று செய்ய வேண்டும் என நினைத்த வேலை முழுமையாக முடிந்தது என்ற நிறைவும் மகிழ்ச்சியும் அமைப்பாளருக்கு.
கடந்த சில நாட்களாக வலைப்பூ எழுதவில்லை என்பதால் இன்றைய நாளை ஒரு நகைச்சுவைப் பதிவாக எழுதலாம் என நினைத்தார் அமைப்பாளர். அந்த பதிவுக்கு ‘’இதுதான் எங்கள் வாழ்க்கை’’ என தலைப்பிடலாமா என யோசித்தார். பின்னர் ‘’ ஒருநாள் பாடு’’ எனத் தலைப்பிட்டார்.