Sunday 10 March 2024

பிரம்மாபுரம்

பிரம்மாபுரம் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான ஊர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் பிறந்த ஊர். பக்தி இலக்கிய காலகட்டத்தில் நாடெங்கும் பயணித்து தம் பதிகங்களால் வெகுமக்கள் மனதிலும் உணர்விலும் சைவத்தை நிலை கொள்ளச் செய்தவர்களில் முக்கியமானவர் ஞானசம்பந்தர். ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் அந்த காலகட்டத்தின் முக்கிய நபர்கள்.  அம்மையப்பன் திருஞானசம்பந்தருக்குக் காட்சி கொடுத்து அம்மை சிறு மகவாயிருந்த சம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தது பிரம்மாபுர ஆலய குளக்கரையில் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் திருமுலைப்பால் விழா இங்கே நடைபெறும். 

இன்று பிரம்மாபுரம் ஆலயம் சென்று வர வேண்டும் என்று தோன்றியது. காலை உணவருந்தி விட்டு புறப்பட்டேன். பேருந்தில் செல்ல விரும்பினேன். பேருந்தில் செல்லும் போது நான் என் சக குடிமக்களை அணுக்கமாக அறிகிறேன். பேருந்தின் ஜன்னல் வழி காட்சிகளின் மூலம் சமூகத்தின் பொருளியல் நிலையை பொருளியல் மாற்றங்களைக் காண முடிகிறது. பேருந்தும் ரயிலும் எனக்கு விருப்பமான போக்குவரத்து சாதனங்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று பேருந்து 80 சதவீத பயணிகளுடன் மட்டுமே இருந்தது. செல்லும் போதும் திரும்பி வரும் போதும். 

சில ஆலயங்களுக்கு அங்கே இருக்கும் ஊர்மக்கள் அதிக அளவில் வருகை புரிந்து வழிபடுவார்கள். பிரம்மாபுரம் மக்களுக்கும் அந்த வழக்கம் உண்டு. சில மாதங்களுக்கு முன்னால் குடமுழுக்கு நடைபெற்றது. பிரம்மாபுரம் ஆலயம் பேராலயம். அதில் இருந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சாய்ந்து திருஞானசம்பந்தர் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். சிறு குழந்தை. இறைவனின் பிரியத்துகுப் பாத்திரமான அருட் குழந்தை. சம்பந்தரின் தமிழ் நீரெனப் பரவி நிறைவது ; தீயென மேலெழுவது. சம்பந்தர் பதிகங்களை முழுமையாக ஒருமுறை வாசிக்க வேண்டும் என எண்ணினேன். வாய்ப்பு இருந்தால் காணொளிகளில் இருக்கும் ஓதுவார்கள் பாடிய சம்பந்தர் தேவாரத்தையும் கேட்க விரும்பினேன். 

இன்று கொங்கு நாட்டிலிருந்து திரளான மக்கள் பிரம்மாபுரம் ஆலயத்துக்கு வருகை புரிந்திருந்தனர். அவர்களின் பேச்சு மொழியிலிருந்து அதனை யூகித்துக் கொண்டேன். கொங்கு மக்களுக்கு திருமுறைகள் மேல் பெரும் ஈடுபாடு உண்டு. 

பேரியற்கை என்பது ஒரு பெரும்கடல். நாம் அதன் கரையின் ஒரு துளி மணல்.