கோவிட் தொற்று காலத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒரு செயலை முன்னெடுத்தோம். கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி போடப் பட்ட போது செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் நேரில் ஒருமுறை சந்தித்து கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். அவ்வாறு சந்திக்கையில் எட்வர்ட் ஜென்னர் தடுப்பூசியை உருவாக்கிய விதம் , ஜென்னர் கண்டுபிடிப்பால் அம்மை நோய் இறப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது, கோவிட்டுக்கு இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி, நம் நாட்டில் தயாராகியிருக்கும் தடுப்பூசி உலகின் பல நாடுகளுக்கு தானமாக வழங்கப்பட்டது ஆகிய விபரங்களைக் கூறி கிராமத்தில் இருக்கும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மக்கள் தடுப்பூசி குறித்து தங்களுக்கு இருக்கும் ஐயங்களை கேட்டார்கள். அதற்கு நாம் விளக்கங்கள் அளித்தோம். ஒரு நாளைக்கு ஐம்பதிலிருந்து எழுபது வீடு என்ற கணக்கில் கிராமத்தில் இருந்த ஐந்நூறு வீடுகளையும் சந்தித்ததால் தடுப்பூசி குறித்த பேச்சு அந்த கிராமத்தில் பொது உரையாடல் மூலம் பரவத் தொடங்கியது. ''Word of mouth'' என்ற முறையில் கிராமம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
பின்னர் அந்த கிராமத்தின் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தொடங்கினர். சிறுக சிறுக பெரும் எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதாவது அந்த கிராமத்தின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர். இதில் இன்னொரு ஆச்சர்யம் இருந்ததை பின்னாட்களில் அறிந்தேன். அதாவது தமிழகத்தில் மிகக் குறைவாக கோவிட் தடுப்பூசி இட்டுக் கொண்ட மாவட்டங்களில் மயிலாடுதுறை ஒன்று. மாவட்டத்தில் 45 சதவீத மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். மீதி மக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சங்கள் தயக்கங்கள். புறச்சூழல் இத்தனை எதிர்மறையாக இருப்பினும் நாம் செயல் புரிந்த கிராமத்தில் 90 சதவீதம் என்ற பெரும் இலக்கத்தை கிராம மக்கள் சாத்தியமாக்கினர்.
செயல் புரியும் கிராமத்தின் மிக அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அந்த கிராமம் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றது. அதற்காக சுதந்திர தினம் ஒன்றில் மாவட்ட ஆட்சியரின் விருதைப் பெற்றது.
செயல் புரியும் கிராமத்தில் இப்போது ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட இருப்பதாக அறிய நேர்ந்தது. தடுப்பூசி விஷயத்தில் செயல் புரியும் கிராம மக்கள் வெளிப்படுத்திய ஆர்வமும் ஈடுபாடும் ஆரம்ப சுகாதார நிலையம் அங்கே அமைவதற்கான பல காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.