Saturday, 16 March 2024

பேரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

ஒரு புதிய இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அமைப்பாளருக்கு ஏற்படுத்திக் கொண்டேயிருந்தனர் அமைப்பாளர் உடன் இருப்பவர்கள். அமைப்பாளர் அதற்கான வாய்ப்புகளை பலமுறை ஒத்திப் போட்டார். எங்களுக்குப் பிடித்த வாகனத்தை வாங்கிக் கொண்டு வந்து நிறுத்தி விடுவோம் என அமைப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டதும் அமைப்பாளர் இனியும் ஒத்தி வைப்பதோ தள்ளி வைப்பதோ இயலாது என உணர்ந்து ஒரு புதிய வாகனம் வாங்கிக் கொள்கிறேன் என்றார். முடிவெடுத்து பல நாட்கள் ஆனாலும் வாகனம் வாங்கவில்லை. டீலரிடம் காலையில் சென்றால் மாலையில் வண்டி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். இருந்தாலும் அமைப்பாளர் வண்டி வாங்கிய பாடில்லை. 

ஊரில் இருந்த டீலர் ஒரு விலை சொன்னார். விலையைக் குறைக்க முயற்சித்தார் அமைப்பாளர். உள்ளூர் டீலர் விலை இறுதியானது என்றார். அமைப்பாளர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சில தருணங்களில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே ஒரு நல்ல முடிவாக இருப்பது உண்டு. 

வண்டி வாங்க சொல்லி நெருக்கடி கூடிக் கொண்டே இருந்தது. இது இறுதிக் கட்டம் என்று அமைப்பாளர் எண்ணினார். 

இணையத்தில் தேடி தனது ஊரைச் சுற்றி இருக்கும் ஊர்களின் டீலர் அலைபேசி எண்களை  சேகரித்துக் கொண்டார். ஒவ்வொருவருக்கும் ஃபோன் செய்தார். தான் இன்ன பிராண்ட் இன்ன மாடல் தான் எடுக்கப் போவதாக முடிவு செய்து விட்டதாகவும் ‘’பெட்டர் பிரைஸ்’’ கிடைத்தால் தங்களிடமே வாகனத்தை எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்து பேரத்தை துவக்கினார் அமைப்பாளர். ஒரு வெளியூர் டீலர் உள்ளூர் விலையை விட ரூ. 5000 /- குறைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டார். 

ஒரு நல்ல டீல் முடித்த நிறைவில் அதனை ஏற்றுக் கொண்டார் அமைப்பாளர். 

பேரத்தின் மூலம் மிச்சமான ரூ.5000 தொகையில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார் அமைப்பாளர்.