வீட்டுக்கு அருகே ஒரு நந்தியாவட்டை மலர்ச்செடி உள்ளது. பல மாதங்களுக்கு முன்னால் என்னால் நடப்பட்டது. ஒரு கோடையையும் ஒரு மழைக்காலத்தையும் கடந்து இப்போது அடுத்த சுற்றுக்குத் தயாராகி உள்ளது. கோடையின் வெப்பம் பெரு உக்கிரம் கொள்ளத் துவங்கியிருக்கும் பருவம். தார்ச்சாலைக்கும் மதில் சுவருக்கும் இடையில் அமைந்திருக்கிறது அச்செடி. எப்போதும் சாலையில் செல்லும் வாகனங்களால் செடியின் தழைகள் முழுவதிலும் புழுதி படிந்திருந்தது. அதனைக் கடந்து செல்லும் போது சிலமுறை அச்செடியைப் பார்த்தேன். கோடை, புழுதி வறட்சி என அத்தனை தடைகள் இருப்பினும் அதில் பல மலர்கள் மலர்ந்திருந்தன. அன்றலர்ந்த மலர்கள் என்ற கம்பன் நினைவில் எழுந்தான். மலர்ச்சி என்பது ஒரு சுபாவம். சூழல் வசதியோ அசௌகர்யமோ மலர்களுக்கு அதில் எந்த சொல்லும் இல்லை. எந்த புகாரும் இல்லை. அவை மலர்ந்திருக்கின்றன. யோகம் மலர்தல் என ஏன் கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
நந்தி மலர்ச்செடிக்கு ஒரு வாளியில் நீர் கொண்டு சென்று அதன் மீது மழை போலத் தூவினேன்.