அமைப்பாளருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். 35 ஆண்டு கால நண்பர். அமைப்பாளர் தந்தைக்கும் நண்பர். அவருக்கு வயது 68 இருக்கும். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்தார்.
‘’பிரபு ! என்ன ஷேவ் பண்ணாம தாடி வச்சுருக்கீங்க’’
அமைப்பாளருக்கு கோபம் வந்தது என்பதை சற்று மென்மையாகச் சொல்வது என்றால் அமைப்பாளர் அசௌகர்யமாக உணர்ந்தார் என்று சொல்லலாம்.
சாங்கிய யோக நூல்கள் தங்கள் முதற் சொல்லாக ‘’அதாவது’’ என்ற சொல்லைக் கொண்டுள்ளன. அந்த துவக்கம் இந்த விஷயம் இதற்கு முன்னாலும் இருந்தது ; பேசப்பட்டது ; விவாதிக்கப்பட்டது. இதன் பின்னும் பேசப்படும் விவாதிக்கப்படும் என்னும் பொருள் கொண்டது.
அமைப்பாளர் ‘’அதாவது’’ என்று தொடங்கினார்.
‘’செல்ஃப் ஷேவ் ரெகுலரா செஞ்சுக்கற பழக்கம் எனக்கு இல்லை. வாரம் ஒருநாள் சலூனுக்குப் போய் ஷேவ் செஞ்சுப்பன். முன்னாடி எல்லாம் ஷேவிங்க்கு 50 ரூபாய் சார்ஜ் பண்ணாங்க. இப்ப 80 ரூபாய் ஆகுது. எனக்கு வாரம் 80 ரூபாய்ங்கறது காஸ்ட்லின்னு தோணுது. திங்கள்கிழமை காலைல ஷேவ் பண்ணிக்க போவன். அது அடுத்த திங்கள் வரைக்கும் தாங்கும். இப்படி வாரம் ஒரு தடவை ஷேவ் பண்றதை ரிப்பீடடா பண்றதுல ஒரு டயர்ட் உருவாகிடுச்சு. அதான் ஒரு முடிவு பண்ணன். ஒவ்வொரு மாசத்துலயும் முதல் தேதி குளோஸ் கட் பண்ணி டிரிம்மர் மெஷின்ல தாடியை கம்ப்ளீட் டிரிம் பண்ணிடலாம்னு முடிவு பண்ணன். அதுக்கு மாசத்துக்கு ரூ.120 மட்டும் தான் செலவாகும்.’’
முதல் கட்ட விளக்கம் கொடுத்த பின் தாடிக்குப் பின்னால் இருக்கும் பொருளியல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்னும் எண்ணம் அமைப்பாளருக்கே தோன்றியது.
நண்பருக்கு இந்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை. அமைப்பாளர் இரண்டாம் கட்டத்துக்கு தயாரானார்.
‘’பிரிட்டிஷ்காரங்க இந்தியாவுக்கு வந்தப்புறம் அவங்களோட உத்யோகஸ்தர்கள் தினசரி ஷேவ் பண்ணிட்டு ஆஃபிஸுக்கு வரணும்னு ஒரு நெறியை உருவாக்குனாங்க. பிரிட்டிஷ் ஆர்மி நேவில அந்த நெறி உண்டு. அது அவங்க கவர்மெண்ட் ஸ்டாஃபுக்கும் வந்தது. அவங்க ஆளுகைல இருந்த எல்லா இடத்துலயும் இந்த விஷயத்தை இம்ப்ளிமெண்ட் செஞ்சாங்க. தமிழகம் அவங்க ஆளுகைல ரொம்ப வருஷமா இருந்த இடம். அதனால கவர்மெண்ட் ஆஃபிஸ் ஸ்டாஃப்னா ஷேவ் பண்ணியிருக்கனும்னு ஆச்சு. காலேஜ் மாதிரி கல்வி நிலையங்களிலும் ஸ்டூடண்ட்ஸ் ஷேவ் பண்ணி இருக்கனும்னு ஆச்சு. இந்தியால ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஷேவிங் செஞ்சுக்கற வழக்கம் இருக்கு. ஆனா மக்கள் டெய்லி ஷேவ் செஞ்சுருப்பாங்களா செல்ஃப் ஷேவ் செஞ்சுருப்பாங்களாங்கறது யோசிச்சுப் பாக்க வேண்டிய விஷயம். இந்தியா முழுக்க ‘’நாவிதர்’’ கம்யூனிட்டி இருக்காங்க. அவங்க மருத்துவத் தொழிலோட ஒரு பகுதியா சவரத்தை வச்சிருந்தாங்க. நோய்க்கு மருந்து கொடுக்கற வேலை அவங்களோடது. இன்னைக்கும் நாலு ஊருக்கு ஒரு நாவிதர் குடும்பம்ங்கற அளவுல தான் அவங்க இருக்காங்க’’
பொருளியல் விளக்கத்துக்குப் பிறகு அமைப்பாளர் வரலாற்று விளக்கமும் அளித்தார்.
நண்பரை அமைப்பாளர் சொன்ன பதில் சென்று சேரவில்லை.
‘’கிரியேட்டிவ் மைண்ட் செட் உள்ளவங்க தோற்றத்துக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. அது அவங்க கவனத்துக்கே வராது. அவங்க வேற உலகுல சஞ்சரிச்சுட்டு இருப்பாங்க. உடனே கிரியேட்டிவ் ஃபீல்டுல டெய்லி ஷேவ் செஞ்சுக்கறவங்க இருக்காங்கலேன்னு சொல்லாதீங்க. கிரியேட்டிவ் ஆளுங்களுக்கு கிரியேஷன் தான் முக்கிய விஷயம். அதான் அதுல பாயிண்ட். இன்னைக்கு 25ம் தேதி . இன்னைக்கு தாடி மீசை இருக்கு. நீங்க 4ம் தேதி வந்தா தாடி மீசை ரெண்டும் இருக்காது. மெஷின்ல 0 போட்டு டிரிம் ஆகியிருக்கும். மாசத்தோட முதல் வாரம் தாடி மீசை இல்லாம இருப்பன். மாசத்தோட ரெண்டு மூணாவது வாரம் நடுத்தரமான தாடி மீசையோட இருப்பன். கடைசி வாரம் நல்லா வளந்த தாடி மீசையோட இருப்பன். எந்த தேதில நீங்க என்னை பாக்கறீங்கன்னு பொருத்து தான் என்னோட தாடி மீசை’’
நண்பர் தாடிக்குக் கொடுக்கப்பட்ட பொருளியல் வரலாற்று விளக்கத்தையும் ஏற்றவில்லை. அதை விட அதிகமாக கிரியேட்டிவ் மைண்ட் செட் குறித்து அளித்த விளக்கத்தையும் ஏற்கவில்லை.