இன்று நிதி ஆண்டின் கடைசி நாள் மாலை ஊருக்கு அண்மையில் இருக்கும் நண்பரான ஐ.டி கம்பெனியில் பணி புரியும் தேக்கு விவசாயியின் வயலுக்குச் சென்றிருந்தேன். அவருடைய வீட்டில் அவரது இளைய சகோதரருக்கு மகன் பிறந்திருக்கிறான். பிறந்து ஒரு வாரம் ஆகிறது.
எனது நண்பரின் குழந்தையை அம்மகவு பிறந்த அன்று மருத்துவமனையில் பார்த்தேன். இப்போது அந்த குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. பொறியியல் மாணவியான அப்பெண் இன்னும் 19 நாளில் நாடாளுமன்றத் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்த ஆர்வமாக இருக்கிறாள். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் நாள் மகவாக பார்த்த ஞாபகமே இப்போதும் இருக்கிறது.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே இந்த உலகை மேலும் சிறப்பானதாக ஆக்கும் சாத்தியத்துடனே பிறக்கிறது.
நண்பரின் சகோதரருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு நண்பருடன் தேக்கு வயலுக்குச் சென்றேன். தேக்கு மரங்கள் அடிப்பாகம் பருக்கத் தொடங்கியிருக்கின்றன. தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்ட நாளிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் வைக்க வேண்டும் என்று அலுக்காமல் வலியுறுத்தி வந்தேன். நம் தமிழ்ச் சமூகத்தில் மரக்கன்றுகளுக்கு உணவுப்பயிர்களைப் போல கவனம் செலுத்தி தண்ணீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கு இல்லை. உணவுப் பயிர்கள் குறுகிய காலத்தவை. 90லிருந்து 110 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும். எனவே அதற்கு பார்த்து பார்த்து தண்ணீர் வைப்பார்கள். மரங்கள் தானாக வளரும் என்று எண்ணுகிறார்கள். நண்பர் விவசாயத்தை பொருளியல் லாபம் மிக்கதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நெல் வயலை தேக்கு வயலாக்கியவர். இருந்தாலும் அவர் மனதில் வாரம் இரண்டு நாள் தண்ணீர் வைத்தல் என்பதை பெரும் பிரயத்தனம் செய்தே பதிய வைக்க நேர்ந்தது. வருடத்தில் வடகிழக்கு பருவமழை பொழியும் 100 நாட்கள் தண்ணீர் வைக்க தேவையில்லை என்பதால் மழைக்காலத்தில் இந்த பிரச்சனை இருக்காது. கோடையில் நான் வலியுறுத்துவதும் அதற்கு மெதுவாக செவி சாய்த்து அவர் நீர் வார்ப்பதும் நடக்கும். இப்போது தண்ணீரின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து நீர் பாய்ச்சலை முக்கிய வேலையாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார். கோடையில் நீர் கிடைத்ததும் கன்றுகள் சிறப்பாக வளர்ந்து அடி பருத்துள்ளன.
நிதி ஆண்டின் கடைசி நாள் மாலை சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கும் தேக்கு மரக்கன்றுகள் உள்ளத்துக்கு நம்பிக்கை அளித்தன.
நண்பரின் முயற்சி வெற்றிகரமாக இருப்பதைக் கண்ட அவரது உறவினர் நண்பரின் வயலுக்குப் பக்கத்தில் இருக்கும் தனது 3 ஏக்கர் நெல்வயலை தேக்குத் தோட்டமாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்.