இன்று ஸ்ரீராம நவமி. கம்பன் பிறந்த திருவழுந்தூரில் இன்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். காலைப் பொழுதில் திருவழுந்தூர் ஆமருவிப் பெருமாள் ஆலயம் சென்றேன். அங்கே கம்பனுக்கு ஒரு சிறு சன்னிதி உண்டு. அங்கே சென்று தமிழின் ஆகப் பெரிய கவிஞனை வணங்கினேன்.
திருவழுந்தூர் ஆலயக் கருவறையில் பெருமாளுடன் பிரகலாதன் இருப்பார். கம்பருக்கு நரசிம்ம சுவாமி மீது பெரும் ஈர்ப்பு அதனால் உண்டு. கம்பர் தனது இராமாயணத்தை ஸ்ரீரங்கம் ஆலய நரசிம்மர் சன்னிதிக்கு எதிரே அரங்கேற்றம் செய்தார் என்பது நாம் அறிந்ததே.
திருவழுந்தூர் ஆலயத்தில் சிறுவர்கள் சிலர் காலை நேரத்தில் திருப்பாவை பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாராயணம் செய்ததைக் கண்ட போது செயல் புரியும் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு திருப்பாவை மனனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டேன். எளிமையான இனிமையான தமிழ் சொற்களால் ஆன 30 பாடல்கள். பாசுரம் பாடும் முறையில் பாட பயிற்சி தர வேண்டும். ஈஸ்வர ஹிதம்.
இன்று கம்பன் பிரதியில் ஒரு படலமாவது வாசிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஸ்ரீராமன் பிறக்கும் திருஅவதாரப் படலம் வாசித்திருக்க வேண்டும். எனினும் ‘’இரணியன் வதைப் படலம்’’ வாசித்தேன். பிரகலாதன் என்னும் குழந்தை குறித்த படலம் என்பது ஒரு காரணம். நரசிம்மர் தோன்றும் தருணத்தை விவரிக்கும் படலம் என்பது இன்னொரு காரணம். நரசிம்மர் இரணியனை சம்ஹாரம் செய்யும் செயலை விவரிக்கும் படலம் என்பது மற்றொரு காரணம்.