Wednesday, 22 May 2024

விஜயநகரப் பேரரசு - எஸ். கிருஷ்ணன்


 
கடந்த ஆயிரம் ஆண்டுகளில், உலகம் கண்ட பேரரசுகளில் மிக முக்கியமான பேரரசு விஜயநகரப் பேரரசு ஆகும். உலகின் பெரிய பேரரசுகளுடன் ஒப்பிடுகையில் நிலப்பரப்பில் சிறியது என்றாலும் செல்வ வளத்திலும் கலைக் கட்டுமானங்களை உருவாக்கியதிலும் எப்போதும் முன்னணியில் வைக்கத் தக்கது விஜயநகரப் பேரரசு. எஸ். கிருஷ்ணன் ‘’விஜயநகரப் பேரரசு’’ என்ற நூலை எழுதி அந்நூல் கிழக்குப் பதிப்பக வெளியீடாக பிரசுரம் கண்டுள்ளது. 

விஜயநகரப் பேரரசின் உருவாக்கம் குறித்தும் அதன் மன்னர்கள் குறித்தும் அவர்கள் ஆற்றிய செயல்கள் மேற்கொண்ட போர்கள் குறித்து இந்நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. இந்நூலின் ஆசிரியர் அளிக்கும் சில விபரங்கள் ஆர்வமூட்டக்கூடியதாகவும் சுவாரசியமாகவும் இருந்தன. ஒரு தகவல் : கிராமத்தில் கர்ணம், மணியம் , தலையாரி என்னும் பெயர் கொண்ட நிர்வாக ஊழியர்கள் விஜயநகரப் பேரரசில் நியமிக்கப்பட்டதையும் அதே முறையை ஆங்கில ஆட்சி பின்னாட்களில் பின்பற்றியதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எளிய குறிப்பாயினும் கிட்டத்தட்ட ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஓர் அடிப்படை நிர்வாக முறை விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருப்பதை சமகாலத்துடன் இணைத்து பல புரிதல்களை அடைய முடியும். இதைப் போன்ற அவதானங்கள் முக்கியமானவை. இவ்விதமான குறிப்புகள் கடந்த காலத்தை சமகாலத்துடன் இணைக்கின்றன. அத்வைத , மாத்வ, சைவ மடங்கள் பல விஜயநகரப் பேரரசு காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டவை என்னும் தகவலை நூலாசிரியர் வழங்குகிறார். சைவ ஆதீனங்களான தருமபுரம் ஆதீனமும் திருவாவடுதுறை ஆதீனமும் விஜயநகரப் பேரரசின் ஆதரவைப் பெற்றிருந்தன என்னும் தகவல் சமகால வரலாற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.  ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கு அடுத்து அருணகிரிநாதர் தமிழ் பக்தி மறுமலர்ச்சியில் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் என்னும் தனது அவதானத்தை நூலாசிரியர் முன்வைத்துள்ளதும் முருகன், சிவன் , விஷ்ணு , திருமகள் ஆகிய தெய்வங்களைத் துதித்த அருணகிரிநாதர் விஜயநகர மன்னர் பிரபுட தேவநாதர் என்பவரை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளதை நூலாசிரியர் எடுத்துக் காட்டியதும் சிறப்பானது. ( விஜயநகரப் பேரரசின் காலகட்டத்தின் தொடர்ச்சியான நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு தமிழ்க் கவிஞர் குமரகுருபரர். கலைமகள், குமரன், மீனாட்சி ஆகியோர் குறித்து பாடல்கள் புனைந்த அவர் தருமபுரம் ஆதீனத்தின் மாணவராக காசி கேதார கட்டத்தில் ‘’ காசி மடம்’’ நிறுவி காசியில் தமிழையும் சைவத்தையும் வளர்த்தவர்)

காலம் கணந்தோறும் பெருகும் பெருநதியென ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு துளி எனத் தக்க அளவில் ஒவ்வொரு மானுடனின் வாழ்க்கையும் அமைகிறது. மானுடர்கள் குழுக்களாக சமூகங்களாகத் திரள்கின்றனர். சமூகங்கள் அரசுகளாகின்றன. தன் குடிகளின் வாழ்வை உயர்த்தி நற்செயல்கள் பல புரிந்து கலைச் செல்வங்களை உருவாக்கி மேன்மை கொண்ட அரசுகள் சில. அவற்றில் முக்கியமானது விஜயநகரப் பேரரசு. 

நூல் : விஜயநகரப் பேரரசு ஆசிரியர் : எஸ். கிருஷ்ணன் பக்கம் 216 விலை ரூ. 250 கிழக்கு பதிப்பகம்