Wednesday 29 May 2024

சுந்தர தரிசனம்

எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சில நாட்கள் முன்பு அவர் தன் சகோதரரின் கண்ணில் மருந்து விட்டுக் கொண்டிருந்தார். கண் மருந்தினை இன்னொருவரைக் கொண்டே இட வேண்டும். அதுவே ஆகச் சிறந்த வழிமுறை. மருந்துத் துளி கண் முழுமையையும் அடைய அதுவே வழி. தானே இட்டுக் கொள்வது 80 சதவீதம் பயனளிக்கும். இமைகளை விரித்து தானே இட்டுக் கொள்வது அத்தனை லகுவானது இல்லை.  அன்று அது குறித்து விசாரிக்க வாய்ப்பு இல்லை. இன்று சென்றிருந்த போது நண்பரின் சகோதரர் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவரிடம் விசாரித்தேன். சூரிய ஒளி பெரும் கூச்சத்தை கண்ணுக்கு அளிப்பதாகச் சொன்னார். அதாவது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. மிகக் கடுமையான நிலை. கூலிங் கிளாஸ் போட்டாலும் கூச்சம் இருக்கிறது என்றார். கண்ணில் எப்போதும் நீர் வடிகிறது ; கண்ணைக் கசக்கும் உணர்வு உருவாகிக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னார். எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறீர்கள் என்று விசாரித்தேன். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை என்று சொன்னார். சிகிச்சைக்கு சிறப்பான இடம். அவரிடம் திருவெள்ளியங்குடி சுந்தர பெருமாள் குறித்து சொன்னேன். பகலில் பயணிக்க இயலாத நிலையைக் கூறி வருந்தினார். சற்று நேரத்தில் நண்பர் வந்து விட்டார். நண்பருடன் நாளை காலை திருவெள்ளியங்குடி சென்று வருவோம் என்று சொன்னேன். நண்பர் காலை 7.45 அளவில் புறப்படுவோம் என்றார். அவர்கள் இருவரிடமும் திருவெள்ளியங்குடி ஆலயத்தின் ’’நேத்ர தீபம்’’ குறித்து சொன்னேன். இங்கே ஒரு  எண்ணெய் செக்காலை இருக்கிறது. அங்கே சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டால் காலை முன் நேரம் புறப்படுவதற்கு வசதியாக இருக்கும் என்று கூறி எண்ணெய் வாங்க புறப்பட்டேன். நாளைய பயணத்துக்கு பைக்குக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டியதும் இருந்தது. 

செக்காலை சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டேன். ஆலை உரிமையாளரிடம் வெள்ளியங்குடி கோவிலின் நேத்ர தீபத்துக்கானது இந்த எண்ணெய் என்று சொன்னேன். அவர் என்ன விபரம் என்று கேட்டார். ஆலயம் குறித்து சொன்னேன். அவருக்கு இந்த விஷயங்கள் பெரும் வியப்பைத் தந்தன. தனது கடை ஊழியர் ஒருவரை அழைத்து திருவெள்ளியங்குடி செல்லும் வழியை எழுதிக் கொள்ள சொன்னார். தனக்கு பல ஆண்டுகளாக கண் நோய் இருப்பதாகவும் இந்த விபரம் கேள்விப்பட்டதும் அங்கே செல்ல விரும்புவதாகவும் சொன்னார். ஞாயிறு செக்காலை விடுமுறை. அன்று காரில் சென்று வருகிறேன் என்று கூறினார். 

அடுத்தடுத்து சுந்தர பெருமாளை தரிசிக்க வாய்ப்பது மகிழ்ச்சி அளித்தது.