Sunday 2 June 2024

பயிற்சி

கடந்த சில மாதங்களாக காஃபி தேனீர் பால் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்திருக்கிறேன். பொதுப்பணியில் உள்ள எவரும் இதனைத் தவிர்ப்பது என்பது கடுமையான செயலே. உபசரிப்புடன் இணைந்திருப்பவை இம்மூன்றும் என்பதால் உபசரிப்பவர்கள் திருப்திக்காவேனும் அருந்த வேண்டிய நிலை ஏற்படும். ஒருவர் அளிக்கும் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு இன்னொருவரிடம் மறுத்தால் அது நன்றாக இராது. எனவே அனைவரிடமும் ஏற்பது என்ற நிலை உண்டாகி விடும். சற்று முயன்று இந்த மூன்று பானங்களையும் தவிர்த்து விட்டேன். 

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவருந்தவும் ஒரு வேளை உணவுக்கும் இன்னொரு வேளை உணவுக்கும் நடுவே பானங்களோ தீனியோ அருந்தாமலோ உண்ணாமலோ இருக்கவே மனிதர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இருப்பினும் மனிதர்கள் முயன்று பானங்களையும் தீனிகளையும் பழகிக் கொள்கிறார்கள்; குழந்தைகளுக்குப் பழக்குகிறார்கள். 

சமணர்களில் ஒரு பிரிவினர் ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உணவு உண்பார்கள். காலை சூரிய உதயம் ஆகி ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு. மாலை சூரிய அஸ்தமனம் ஆவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மாலை உணவு. மாலை உணவு அருந்திய பின் மறுநாள் காலை வரை நீர் கூட அருந்த மாட்டார்கள். இரவு துயிலப் போகையில் உண்ட உணவு செரித்திருக்கும். வாழ்வுக்கு உதவும் துணை நிற்கும் விஷயங்களைப் பழக்கமாக நிலைநிறுத்துவதில் சமணம் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. மானுடன் தனது லௌகிக வாழ்க்கைத் தேவைகளை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்துக் கொண்டு தனது ஆன்ம வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அதிக கவனம் அளிக்க வேண்டும் என்பது அதன் சிந்தனை. காலை விழிப்பதிலிருந்து இரவு உறங்குவது வரை ஒவ்வொரு செயலையும் எவ்விதம் செய்ய வேண்டும் என்பதில் சமணத்திற்கு தனிப்பார்வை எப்போதும் உண்டு. எல்லா சமயங்களும் தினசரி வாழ்வின் நியதிகளை வகுத்திருக்கின்றன. மிகக் குறைந்தபட்ச தேவைகளைக் கொண்டு தினசரி வாழ்வை அமைத்துக் கொள்வது சமணத்தின் தனித்தன்மை. அதன் நோக்கம் லௌகிகத்தை எத்தனை குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அத்தனை குறைவாக வைத்துக் கொண்டு ஆன்ம வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே. 

லௌகிகம் முக்குணங்களால் ஆனது. ஆன்ம வாழ்வு முக்குணங்களுக்கு அப்பால் உள்ளது. கோடானுகோடி மனிதர்கள் லௌகிகத்தையே வாழ்க்கை என உணரும் நிலையில் உள்ளனர். கோடானுகோடியில் ஒருவரே லௌகிகத்துக்கு அப்பால் செல்கிறார். அத்தகையவர் உணர்ந்து பின்பற்றும் விஷயமே எளிய கோடானுகோடி மனிதர்களுக்கான நெறியாக அமைகிறது என்பது எண்ணிப் பார்க்க விந்தையானது . எனினும் அதுவே யதார்த்தமும் கூட.