Monday 3 June 2024

மாசின்மை

 மோட்டார்சைக்கிளில் இந்தியப் பயணம் மேற்கொண்ட போது உணர்ந்த விஷயம் ஒன்று உண்டு. வாகனம் உடலின் ஒரு பகுதி என்ற உணர்வு உண்டாகி விடும். மாலை 6 மணிக்குப் பயணத்தை நிறைவு செய்யும் போது அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வாகனம் செய்த பயணமும் கடந்த தொலைவும் தூரமும் வாகனம் மேல் பெருங்கனிவை உண்டாக்கி விடும். வாகனத்தை மைய ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியதும் பெட்ரோல் டேங்க் கவர் உள்ளே இருக்கும் துணியைக் கொண்டு வாகனத்தைத் தூய்மையாகத் துடைத்து வைப்பேன். தன் மேல் இருந்த தூசுகளும் மாசுகளும் நீங்கிய பின்னர் வாகனம் அடுத்த நாள் காலை பயணத்துக்கு தயாராக இருக்கிறேன் என அறிவிப்பதாகத் தோன்றும். வழக்கமாக வாகனத்தைத் துடைக்க ஆகும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரமே அப்போது ஆகும். என்றாலும் வாகனம் பளிச் என இருக்கும். தூரதேசங்கள் அளிக்கும் ஆசிகளால் ஆனது அந்த மாசின்மை என எண்ணிக் கொள்வேன்.